தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் ஆறாவது சீசன் 23ஆம் தேதி திருநெல்வேலியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் இதுவரை 5 சீசனில் 3 முறை வெற்றி பெற்றுள்ள நடப்பு சாம்பியன் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மற்ற அணியுடன் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் ’ப்ளேஆப்’ சுற்றுக்கு தகுதிபெறும். இந்த நிலையில், நேற்று முன்தினம் நடந்த தொடக்க ஆட்டத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை நெல்லை ராயல் கிங்ஸ் அணி சூப்பர் ஓவரில் வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து நேற்றைய 2ஆவது லீக ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை திருச்சி வாரியர்ஸ் அணி எதிர்க்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 144 ரன்கள் எடுத்தது. தெடர்ந்து விளையாடிய திருச்சி அணி 19 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.இந்த நிலையில், இன்று மதுரை பாந்தர்ஸ் அணியுடன் சேப்பாக்கம் கில்லீஸ் அணியும், மற்றொரு போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியுடன் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.