day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

எங்கள் அந்தரங்கம் பிறருக்குத் தேவையில்லாதது! – கலா மாஸ்டர்

எங்கள் அந்தரங்கம் பிறருக்குத் தேவையில்லாதது! – கலா மாஸ்டர்

பரத நாட்டியம் போன்ற சாஸ்திரிய நடனங்கள் மட்டுமே பெண்களுக்குப் பொருந்தும், அவற்றையும் சபைகளில் மட்டுமே ஆட வேண்டும் என்கிற நினைப்பை மாற்றிக்காட்டியவர் நடன இயக்குநர் கலா மாஸ்டர். திரைத்துறையில் பின்னணி நடனங்களை ஆட மட்டுமே பெண்கள் அனுமதிக்கபட்டிருந்த நிலையில், நடன இயக்குநராகக் கோலோச்சியவர் அவர். ‘மாஸ்டர்’ என்று சொல்லும்போதே அது ஆணை மட்டுமே குறிக்கும் சொல் என்பதை மாற்றி பெண்ணும் டான்ஸ் மாஸ்டர் ஆகத் தகுதி உடையவர் என்பதைத் தன் வெற்றி மூலம் நிரூபித்துவருகிறார் கலா. ‘பெண்களின் குரல்’ வாசகர்களுக்காக அவருடன் பேசியதில் இருந்து…   

1980-களில் இருந்து உங்களுடைய திரைப் பயணம் தொடங்கியுள்ளது. எந்த இடத்தில் உங்களுக்குத் திருப்பம் ஏற்பட்டது?

புதுப்புது அர்த்தங்கள் 1989 இல் வரும்போதே எனக்குக் கொஞ்சம் பெயர் கிடைத்தது. ஒரு சின்ன பொண்ணு நடன இயக்கம் செய்துள்ளார் என சினிமா வட்டாரத்தில் எனக்குப் பெயர் கிடைத்தது. ஆனால், கலா மாஸ்டர் என்று மக்கள் மத்தியில் பெயர் பெற்றது ஸ்டேஜ் ஷோக்களில்தான். 

திரைத்துறையில் பெண்கள் சாதிப்பது எளிதல்ல. இங்கே இத்தனை காலம் எப்படித் தாக்குப்பிடிக்க முடிந்தது?

என் அம்மாவிடம் இருந்துதான் எனக்கு எதையும் சாதிக்கலாம் என்ற  தைரியம் வந்தது. என் அப்பா எப்போதும் சொல்வார், `எத்தனை முறை விழுந்தாலும் ஐயோ முடியலையே என்று உட்காரக் கூடாது, மீண்டும் மீண்டும்  எழுந்து நடக்க வேண்டும்’ என்று. நான் திரைத்துறைக்கு வந்தபோது பெண்கள் மிகவும் குறைவு. எவ்வளவு பெரிய பின்னணியில் இருந்து வந்தாலும் திறமை இருந்தால்தான் நம்பர் 1 ஆக முடியும். அதற்கேற்ற மனதைரியத்தையும் தன்னம்பிக்கையையும் என்னுள் வளர்த்தனர்  என் பெற்றோர். அடுத்தபடியாக என் குருநாதர். பள்ளியில் படிக்கும்போதே  நான் சினிமாத் துறையில் நுழைந்ததை அவர் ஏற்றுக்கொண்டார். பெண் என்றால் தைரியமாக இருக்கவேண்டும், மனசாட்சியைத் தவிர யாருக்கும் பயப்படக் கூடாது, தொழிலைத் தெய்வமாக நினைக்க வேண்டும் என்பதை என் குருநாதரிடம்தான் கற்றுக்கொண்டேன். இந்த மூன்று பேர்தான் என் தைரியத்திற்குக் காரணம். 

சில கதாநாயகர்கள், கதாநாயகிகள் ஆடவே சிரமப்படும்போது என்ன செய்வீர்கள்?

நான் எப்போதும் கடினமான ஸ்டெப்ஸ் கொடுக்க மாட்டேன். கதாநாயகர்களுக்கு தகுந்தமாதிரி நடனம் கற்றுக்கொடுப்பேன். இது இயக்குநர் பாலசந்தரிடம் நான் கற்றுக்கொண்ட பெரிய விஷயம். அழகன் படத்தில் பானுப்ரியாவிற்கு நடனம் சொல்லிக்கொடுத்தேன். பானுப்ரியா என்றால் எனக்கு நடனம் சொல்லிக்கொடுப்பதில் எந்தத் தடையுமே இருக்காது. எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் ஆடிவிடுவார். அது கொஞ்சம் கடினமான ஸ்டெப். இருந்தாலும் பானு ரொம்ப அழகாகப் பண்ணினார். அதுவும் 12 டேக் எடுக்கவேண்டியது ஆகிவிட்டது. கதாநாயகர் அல்லது கதாநாயகிக்கு ஏற்றாற்போல் எடுத்தால்தான் நமக்கும் எளிது, அவர்களாலும் சிறப்பாகக் கொடுக்க முடியும். 

திரைத்துறையில் நீங்கள் சந்தித்த அவமானங்கள்?

நிறைய உண்டு.  `என்ன, இது சின்னப் பொண்ணு நடன இயக்குநரா, அவள் சொல்லி நான் கேட்க வேண்டுமா’ என்பார்கள். எனக்கு ஒன்றும் தெரியாததுபோல் சில நேரம் பேசுவார்கள்.  வந்த புதிதில் சில நடன ஸ்டெப்களை அவர்களே மாற்றிவிடுவார்கள். இதுபோன்று பல அவமானங்கள். அப்போதெல்லாம் என் தொழில் எனக்கு முக்கியம் என்று சொல்லிக்கொள்வேன். அதேபோல் நான் நேரத்தை வீணடிக்க மாட்டேன். ஒரு நாளில் 2 அல்லது 3 ஷூட்டிங்கிற்குக்கூடச் செல்வேன்.  கஷ்டங்கள் இல்லாமல் வாழ்க்கை இருக்காது. என்ன பெண்களுக்குக் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதையும் தாண்டி ஜெயிப்பதுதான் வாழ்க்கை. 

முன்னணி நடிகர்களுடன் உங்களுக்கு நல்ல நட்பு உள்ளது. அவர்களில் யாரெல்லாம் மறக்க முடியாதவர்கள்?

எல்லோருமே எனக்கு நெருங்கிய நண்பர்கள். ரகு மாஸ்டரில் இருந்து பிரசன்னா வரை. எங்கள் வீட்டில் எத்தனையோ நடன இயக்குநர்கள் உள்ளனர். நான், ரகு மாஸ்டர், என்  அக்கா கிரிஜா ரகுராம்,   பிருந்தா, என் அக்கா பையன் பிரசன்னா, காயத்ரி இப்படி என்  குடும்பத்தில் 7 பேர் நடன இயக்குநர்கள். குஷ்பு நல்ல நண்பர். மீனா நெருக்கமான நபர். எப்போது வெளியூர் சென்றாலும் அவருடன்தான் செல்வேன்.  நயன்தாராவை எனக்கு மிகவும் பிடிக்கும். மஞ்சு வாரியர் எனக்கு நல்ல தோழி. ரம்யா கிருஷ்ணன், ரோஜா, மும்தாஜ் என்று ஏராளமான தோழிகள். இந்த கொரோனா பேரிடரின்போது  மோகன்லால் முதற்கொண்டு பலர் நலம் விசாரித்தனர். 

மிகக் கடினமாக உழைத்த பாடல் எது?

கண்டிப்பாக சந்திரமுகிதான். பரதம் தெரியாத ஜோதிகா எப்படி ஆடுவார் என்று எல்லோரும் கேட்டார்கள். அதை நான் ஒரு சவாலாக எடுத்துச் செய்தேன். அதேபோல்  அவரும் கஷ்டப்பட்டு ஆட, அதற்கான பலனாய் எனக்கு ஒரு மாநில விருது கிடைத்தது. 

எப்படி இப்போதும் இப்படிச் சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள்?

நான் எப்போதும் சும்மா இருக்க ஆசைப்படவே மாட்டேன். சும்மா இருப்பதே பிடிக்காது. வாழ்க்கையில் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று  பல விஷயங்களை என் பெற்றோர் கற்றுகொடுத்தார்கள். எல்லோரும் வேலைக்குச் செல்வதுபோல் எங்களுக்கும் சினிமா ஒரு தொழில்.  நான் சினிமாத் துறைக்கு வந்த போது 3 மாதத்திற்கு ஒரு பாட்டு, 4 மாதத்திற்கு ஒரு பாட்டு என்றுதான் வரும். அப்போது ஏன் சும்மா இருக்க வேண்டும் என்று விளையாட்டாக ஆரம்பித்த டான்ஸ் கிளாஸ் பெரிய அளவில் வளர்ந்தது. பயிற்சி வகுப்புகள் நடத்த  இடம் இல்லாதபோது ரவி எனக்கு நடிகர் சங்கத்தில் இடம் கொடுத்தார். நான் படங்களில் பிஸியாகிவிட்ட பிறகு என் அக்கா அதைக் கவனித்துக்கொள்கிறார். 

உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்?

ஒரு குடும்பத்தில் மாமனார், மாமியார் நன்றாக அமைந்துவிட்டால், அந்தக் குடும்பம் நன்றாக இருக்கும். என் கணவரைவிட என் மாமனார், மாமியாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களுக்குப் பெண் குழந்தை இல்லை. அதனால் நான் மருமகளாக வந்தபோது, ‘அவ கண்ணுல தண்ணி வந்தா உன்னை உதைப்பேன்’  என்று என் கணவரிடம் சொன்னார்கள். எனக்கு அம்மா, அப்பா இல்லாததால் இவர்கள்  கிடைத்தது வரப்பிரசாதம். சினிமாத் துறையைப் பொறுத்தவரை கணவன் துணை என்பது மிகவும் முக்கியம். அந்த விஷயத்தில் என் கணவர் எனக்குப் பிடித்த எல்லாவற்றையும் செய்யவிடுவார். தாமதமாகப் பிறந்த குழந்தை என்  மகன். தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இருப்பான். நன்றாகப் பாடுவான். ஒரு சிறிய அழகான குடும்பம் எங்களுடையது. 

நடிகர், நடிகைகளில் விவாகரத்தும் அதுகுறித்த வதந்திகளும் அதிகம் இருக்கும் சூழலில், நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சினிமாவில் மட்டும் விவாகரத்து நடப்பதில்லை. அதற்கு வெளியேயும் பல விவாகரத்துகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையில் என்ன பிரச்சினை என்று நமக்குத் தெரியாது. அதனால், நாம் அதற்குக் கருத்து தெரிவிக்க முடியாது. தனியாக இருந்து முடிவெடுத்தால் பரவாயில்லை. ஆனால், குழந்தை இருக்கும்போது கொஞ்சம் சிந்தித்து முடிவெடுத்தால் நல்லது. அதேபோல் அவர்களின் திறமைகளைப் பற்றிப் பேசினால் பரவாயில்லை. அவரவர் தனிப்பட்ட விஷயங்களைப் பேசுவது தவறு. நாலு பேரைக் கஷ்டப்படுத்தி அதிலும் கொச்சைப்படுத்திப் பேசுவது தவறு. அது, நடக்காத இடமே இல்லை. ஆனால், சினிமாத் துறை என்பதால் எல்லோரும் அதனைக் குத்திக்காட்டி கஷ்டப்படுத்த வேண்டாம். சினிமாத் துறையில் இருக்கும் சிலரே இதனைச் செய்வது கஷ்டமாக இருக்கிறது. 

இந்தக் காலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறதா?

பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது என்று சொல்ல மாட்டேன். ஆனால், பெண்களுக்குப் பெண்களே பாதுகாப்பு. எதற்காகவும் பயப்படாமல், நெஞ்சில் துணிவுடன் பெண்கள் வெளியே வரவேண்டும். தன் மனசாட்சிக்கு மட்டும் பயந்தால் போதும். வேறு எதற்கும் பயப்பட வேண்டாம். 

கர்நாடகாவில் நடந்த ஹிஜாப் பிரச்சினை குறித்து உங்கள் கருத்து என்ன?

தன்னைச் சுற்றி அத்தனை  பேர் வரும் போது கண்டிப்பாக அந்தப் பெண்ணுக்குப் பயம் இருந்திருக்கும். அதனைத் தாண்டி அந்தப் பெண் வந்தார். ஜாதி, மதம் என்று ஒன்றுமே இல்லை. ஆண், பெண் இவை இரண்டு மட்டுமே ஜாதி. இதுபோன்றவை தேவையில்லாமல் கெட்ட பெயர் வாங்கவைக்கச் செய்யும் சதி. நல்ல விஷயத்தை மட்டும் பரப்புவோம்.

 

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!