day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பாலியல் தொழிலை விரும்பிச் செய்வதில்லை!

பாலியல் தொழிலை விரும்பிச் செய்வதில்லை!

திருநங்கைகள் இன்று தங்களது உரிமைக்காகப் போராடி அதில் வெற்றிகண்டு சாதித்தும் வருகின்றனர். அரசியல் களத்திலும் தடம்பதித்துவருகின்றனர். வேலூர் மாநகராட்சியில் வார்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கங்கா நாயக்கின் வெற்றியும் அதற்கு சாட்சி.  இப்படி ஒவ்வொரு துறையிலும் முதல் தடம் பதிப்பவர்களின் வெற்றி கொண்டாடப்பட வேண்டியதே. அந்த வகையில், முதல் திருநங்கை செவிலியர் ரக்ஷிகா ராஜின் வெற்றிப் பயணம் வியக்க வைக்கிறது.

திருநங்கைகளுக்கு எந்த அளவிற்கு அங்கீகாரம் கிடைக்கிறது?

திருநங்கைகளுக்கான அங்கீகாரம் இந்திய அளவில் குறைவாகவே உள்ளது. எங்கள் உரிமைகளையே போராடி சண்டைபோட்டு வாங்க வேண்டியதாக உள்ளது. என்னுடைய பயணமும் அவ்வாறே அமைந்தது. தங்களைத் தாங்களாக அடையாளப்படுத்திக்கொள்வதே பெரிய போராட்டம். குடும்பம், சமூகம் என யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். படித்திருந்தும் வேலை கிடைக்காது. இந்த நிலையில் அன்றாட வாழ்க்கையை வாழ அவர்கள் என்ன செய்வார்கள்? ஒருவேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வார்கள்? ஏதேனும் ஒரு வேலைக்குச் சென்று வருமானம் இருந்தால்தானே வாழ்க்கையை ஓட்ட முடியும்? அதனால், திருநங்கைகளின் வாழ்க்கை மிகவும் மோசமானது. இந்தச் சமுதாயத்தின், குடும்பத்தின் புறக்கணிப்பைச் சந்தித்து வாழ்வது பெரும் போராட்டமாகத்தான் இருக்கிறது. நான் இன்று இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் என்று பெருமையாகச் சொல்வது மட்டும்தான் உங்களுக்குத் தெரியும். அதற்குப் பின் இருந்த போராட்டங்கள் யாருக்கும் தெரியாது. Indian Nursing Council Act படி ஆண் / பெண் மட்டுமே பதிவு செய்யலாம். வேறு பாலினத்தவருக்கு அங்கு இடம் இல்லை. இப்போது 2014 National Judgementஇல் LGBTQ+ பிரிவுக்கான விளக்கம் என்ன என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மனரீதியாக அவர்கள் தங்களை எப்படி உணர்கிறார்களோ, அதுதான் அவர்களது பாலினம். நான் உடலளவில் ஆணாக இருந்திருக்கலாம். ஆனால், மனதளவில் பெண்ணாக உணர்ந்தேன். அதனால், பெண்ணாக என்னை அடையாளம் காண்பது என் உரிமை.

பெண்ணாக எப்போது உணர்ந்தீர்கள்?

16 வயதில் என்னைப் பெண்ணாக உணர்ந்தேன். அப்போது நான் யாரிடமும் சொல்ல முடியாத நிலையில் இருந்தேன். சொன்னால் அதை அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்கிற பயம் எனக்குள் இருந்தது. என் பெற்றோரிடம் சொன்னால் அடிப்பார்களோ என்கிற பயமும் இருந்தது. சில நேரங்களில் இதை நானே கற்பனை செய்துகொள்கிறேனோ, நான் தவறு செய்கிறேனோ என்கிற எண்ணங்களும் வரும். அதன்பின் என்னைப்போல் பலரைப் பார்த்தபின்தான் நான் மட்டும் இப்படி இல்லை என்று உணர்ந்து என் பாலினத்தை வெளிப்படுத்தினேன். 

பெற்றோர் உங்களை அங்கீகரித் தார்களா?

என் பெற்றோரிடம் இதனைப் பற்றிக் கூறியபோது இது உன் கற்பனை, நீ ஏன் அப்படி நினைக்கிறாய் என்று சொன்னார்கள். ஆனால், பெண்ணுக்கான அனைத்து பாவனைகளும் எனக்கு இருந்ததால்,  நான் திருநங்கை என்பதில் உறுதியாக இருந்தேன். பெற்றோர் ஏற்றுக்கொண்டால் மட்டுமே திருநங்கைகளின் வாழ்க்கை நலமாக இருக்கும். பெற்றோர் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர்கள் தங்கள் தேவைக்கு யாரிடம் கையேந்துவார்கள்? அன்றாடச் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள்? இவர்கள் கையேந்தி பிச்சை எடுக்க பெற்றோர்களே காரணம். மனதளவில் தன்னைப் பற்றி யாரிடம் சொல்வது என்று தெரியாமல் ஒரு திருநங்கை இருக்கும் சமயத்தில், தன் பெற்றோரும் `நீ என் மகன் இல்லை’ என்று சொன்னால், அவர்கள் என்ன செய்வார்கள்? பெற்றோரை  எதிர்த்து வெளியே சென்றாலும் அவர்கள் வாழ்க்கை இருட்டாகவே இருக்கிறது. சமுதாயத்தில் பாலியல் வன்முறை, சீண்டல் எனப் பல பிரச்சினைகளை அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. 

செவிலியர் ஆகும் ஆசை வந்தது எப்படி?

படிப்பை மட்டும்தான் நான் ஆயுதமாக எடுத்துக்கொண்டேன். என் அப்பா காவலராக இருந்தபோதும் நான் திருநங்கை என்று சொன்னபோது ஒப்புக்கொள்ளவில்லை. பல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று விசாரித்தார்கள். மருத்துவர்கள் இவருக்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்றபோதும் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் நான் வீட்டைவிட்டு வெளியே வந்தேன். படிப்பு மட்டுமே எனக்குக் கைகொடுக்கும் என்று நம்பி படித்தேன். அதனால்தான் உங்கள் முன் இப்போது பெருமையாக நிற்கிறேன். எனது கல்லூரியில் எனக்கு எந்தவிதமான பிரச்சினைகளும் இருந்ததில்லை. கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் மேனகா என்னை மிகவும் ஊக்குவித்தார். 

நீங்கள் சந்தித்த அச்சுறுத்தல்கள்?

ஏராளமான கேலி, கிண்டல்களைச் சந்தித்துள்ளேன். நான் பள்ளியில் படிக்கும்போது என் சக மாணவர்கள் என்னை வலுக்கட்டாயமாகக் கழிவறைக்கு இழுத்துச்சென்று, ‘என்ன நீ பொண்ணு மாறி பேசுற, நடந்துக்குற’ என்று சொல்லி என் உள்ளாடையைக் கழற்ற முயற்சி செய்தார்கள். அதையெல்லாம் நினைத்தால் மிகவும் அருவருப்பாக இருக்கும். ஒருமுறை வேலை முடித்து 6 மணிக்கு வீடு திரும்பும்போது ஒரு போலீஸ் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். சமூகத்தில் திருநங்கைகள் குறித்த போதுமான அளவு விழிப்புணர்வு இல்லை. எல்லோரும் எங்களைப் பாலியல் கருவி மாதிரி பார்க்கிறார்கள்.

பாலியல் தொழில் செய்யும் திருநங்கைகள் குறித்து உங்கள் பார்வை?

இந்த அரசாங்கமும், சட்டமும் என்னதான் உரிமைகள் வழங்கியிருந்தாலும் அது வெறும் காகித அளவில்தான் உள்ளது. அது எல்லா மாநிலங்களிலும் செயற்பாட்டில் வந்தால்தான் திருநங்கைகள் வாழ்க்கை முன்னேறும். எத்தனை பேர் ரக்ஷிகா ராஜ் போல் முன்னேற முடியும்? எத்தனை பேர் இந்த அளவுக்குப் போராடுவார்கள்? எல்லோரும் போராடினாலும் சில இடங்களில் மனம் தளர்ந்துவிடுகின்றனர். அதுமட்டுமன்றி, உடல்ரீதியாக ஆணாக இருக்கும் அவர்கள் பெண்ணாக மாறுவதற்காகச் செய்யும் அறுவைசிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவாகும். அதற்காகவும் இந்தத் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.  இதுவரை திருநர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கவில்லை. கர்நாடகாவில் தற்போது 1 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்துள்ளனர். ஆனால், OBC பிரிவில் திருநர்களைச் சேர்க்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. BC பிரிவில்தான் சேர்ப்போம் என்று மாநில அரசு சொல்கிறது. எப்படி குற்றிப்பிட்ட சமுதாயத்தை ஒரு பிரிவின்கீழ் கொண்டுவர முடியும்? தலித் பிரிவிலும் திருநங்கைகள் உள்ளனர். அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுகிறது. யாரும் விருப்பப்பட்டு உடலை விற்பதில்லை, விருப்பப்பட்டு பிச்சை எடுப்பதில்லை. மனம் நொந்து இந்தத் தொழிலைச் செய்கின்றனர். நம் அரசு திருநங்கைகளுக்கான சட்ட திட்டங்களையும், ஒதுக்கீடுகளையும் ஏற்படுத்திக் கொடுத்தால், ஏதோ ஒரு தேர்வெழுதி அரசாங்கப் பணியில் அமர்ந்தால் ஏன் இந்தத் தொழிலைச் செய்யப்போகின்றனர்? மாற்றுத்திறனாளிகளையும், பெண்களையும் எப்படி மதித்து இடஒதுக்கீடு வழங்குகிறீர்களோ, அதேபோல் எங்களையும் மதித்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும். 

திருநர்களைச் சமூகம் பார்க்கும் பார்வை மாற என்னசெய்ய வேண்டும்?

இப்போது இணையத்திலேயே ஏராளமான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனாலும், இந்த நவீன உலகில் திருநர்களைப் பற்றிப் பலருக்கும் தெரிவதில்லை. பாடங்களில் திருநங்கைகள், திருநம்பிகளைப் பற்றிச் சொன்னால்தான் குழந்தைகள் அவர்களை நிஜவாழ்வில் சந்திக்கும்போது எப்படிப் பேச வேண்டும் என்று புரியும். இப்போதும் எங்களிடம் பேசுவதையும் பழகுவதையும் அசிங்கமாக நினைப்பவர்கள் இருக்கிறார்கள். நகரங்களில் முன்னேறிவரும் திருநங்கைகள் இருந்தாலும் கிராமப்புறங்களில் திருநங்கைகள் கேலி கிண்டலுக்கு ஆளாகிறார்கள். அவை மாற, கண்டிப்பாக பாடத்திட்டங்களில் திருநர்களைப் பற்றிய பாடம் இருக்க வேண்டும். காமத்திற்காக மட்டுமே பல ஆண்கள் திருநங்கைகளிடம் பழகுகிறார்கள். ஆனால் வேதனை, வலி, போராட்டம் மட்டுமே நிறைந்த திருநங்கைகள் பாசத்தை மட்டுமே எதிர்பார்த்துக் காதல்கொள்கிறார்கள். என் தோழிகளும் பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஆண்கள் எளிதாகக் காரணங்கள் சொல்லி விட்டுவிட்டுச் செல்கிறார்கள். சில ஆண்களே திருநங்கைகளை மணந்து நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள். திருநங்கையும் திருநம்பியும் திருமணம் செய்துகொள்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது நம் சமூகம் மாறிவருகிறது என்ற சந்தோஷம் இருக்கிறது. இன்னும் பலவிதங்களில் மாற்றங்கள் நிகழ்ந்து திருநங்கைகள் உயர வேண்டும் என்பதே எனது ஆசை.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!