day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

வீடு மாறினால் நாடு மாறும்! – ஜனனி

வீடு மாறினால் நாடு மாறும்! – ஜனனி

குப்பை என்பது உலகம் முழுதும் அச்சுறுத்தல் தரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக எலெக்ட்ரானிக் கழிவுகள் எனப்படும் இ – வேஸ்ட், மக்களுக்கும் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அச்சுறுத்தல் தரக்கூடிய விஷயமாக இருக்கின்றன. மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் கடலின் அடியாழத்துக்குச் சென்று அங்கிருக்கும் கடல்வாழ் உயிரினங்களின் உயிருக்கும் உலைவைக்கின்றன. கால்களிலும் தலையிலும் பிளாஸ்டிக் பேப்பர் சுற்றிக்கொண்டு அதை நீக்க வழியின்றித் தவிக்கும் பறவைகளின் புகைப்படங்கள் பதற்றப்படச் செய்கின்றன. திடக்கழிவு மேலாண்மை குறித்து நாம்  விழிப்புடன் இருந்தால் இந்த நிலையை ஓரளவுக்காவது தடுக்கலாம். அதற்காகத்தான் Roka என்னும் அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டுவருகிறார் ஜனனி. சூழலியல் செயற்பாட்டாளரான ஜனனியைச் சந்தித்தோம். 

குப்பை மேலாண்மையை எங்கிருந்து தொடங்கலாம்?

குப்பை மேலாண்மையை நாம் எளிதாக வீட்டில் இருந்தே தொடங்கலாம். திடக்கழிவு மேலாண்மையின் முதல் படியே அது எங்கு உருவாகிறதோ, அங்கேயே பிரித்துக் கொடுப்பதுதான் (Source Segregation). சமையலறையில் மக்கும் குப்பைதான் (காய்கறி, பழக் குப்பை) சேரும். அதனைத் தனியாகவும்,  மறுசுழட்சி செய்யக்கூடிய குப்பைகளை (ஞெகிழி, பேப்பர், அட்டை) தனியாகவும், மக்காத மறுசுழற்சி செய்ய முடியாத குப்பைகளை (சானிட்டரி நாப்கின், டயாபர், தலைமுடி, நகம், உடைந்த கண்ணாடி) தனியாகவும் வைக்கவேண்டும். பெரிய அளவில் திடக்கழிவு மேலாண்மை என்பது கடினம். ஆனால், வீட்டில் இருந்தே இதைத் தொடங்கினால் மிகவும் எளிமையாக இருக்கும். 

திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு எந்த அளவிற்கு இருக்கிறது?

முன்பைவிட இப்போது கொஞ்சம் விழிப்புணர்வு அதிகமாக இருக்கிறது. சமூகச் செயற்பாட்டாளர்களும், அரசாங்கமும் விழிப்புணர்வைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது பற்றிய விழிப்புணர்வு போதுமான அளவுக்கு இல்லை. மக்களுக்குத் தங்கள் வீட்டில் இருக்கும் ஒரு கிலோ குப்பை எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது புரிந்தால் டன் கணக்கில் குப்பைகளைக் கையாள்கிறவர்களின் சிரமம் புரியும். மலைபோல் குவிந்திருக்கும் குப்பைக்குவியலுக்குள் நின்றுகொண்டு மக்கும் குப்பைகளையும் மக்காத குப்பைகளையும் எப்படிப் பிரிக்க முடியும்? அதனால், நாம் வீடுகளிலேயே இப்படிப் பிரித்து, அதற்கேற்ற குப்பைத் தொட்டியில் போட்டாலே போதும். பாதி சிக்கல் தீர்ந்துவிடும். 

நாம் வீட்டில் சேர்க்கிற ஒரு கிலோ அளவிலான குப்பை, அண்டார்டிகாவில் ஒரு பனிக்கட்டியை உருகவைக்கும் அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. எல்லாத் தரப்பு மக்களுக்கும் இந்த விழிப்புணர்வு சென்று சேரவேண்டும் என்றுதான் எங்களைப் போன்ற தன்னார்வலர்கள் முயற்சிசெய்துகொண்டு இருக்கிறோம். 

பிளாஸ்டிக் எப்படிப் பிற உயிரினங்களைப் பாதிக்கிறது?

என் வீட்டிற்கு எதிரிலேயே ஒரு மாடு இரவெல்லாம் பிளாஸ்டிக் சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. அதைப் பார்க்கும்போதே கஷ்டமாக இருந்தது. அந்த மாடு கொடுக்கும் பாலைத்தான் நாம் குடிக்கிறோம், குழந்தைகளுக்கும் கொடுக்கிறோம். கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் ஆடு, மாடு என அனைத்து உயிரினங்களும் பிளாஸ்டிக் சாப்பிட ஆரம்பித்துவிடுகின்றன. நாம் பயன்படுத்தும் சிறிய டீ கப் அல்லது பிளாஸ்டிக் ஸ்டிரா எப்படிப் பல உயிரினங்களைப் பாதிக்கிறது என்று நாம் பேசிக்கொண்டே இருக்கிறோம். சமூக வலைத்தளங்களில் ஃபார்வேடு செய்துகொண்டே இருக்கிறோம். ஆனால், அதனைச் சரி செய்யத் தவறிவிடுகின்றோம். 

எலெக்ட்ரானிக் கழிவுகளை எப்படித் தவிர்ப்பது?

எலெக்ட்ரானிக் கழிவுகளும் மிகவும் கொடிய தாக்கத்தை உலகிற்குக் கொடுக்கும். டியூப் லைட்கள், பேட்டரிகள், ஹெட்போன்கள், லேப்டாப்கள், செல்போன்கள் என்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் எல்லாவற்றிலும் பலவகையான ரசாயனங்கள் இருக்கின்றன. பழுதாகிவிட்டது என்று நாம் அவற்றைக் குப்பையில் போடும்போது அந்த ரசாயனங்கள் நிலத்திலும் நிலத்துக்கடியில் உள்ள தண்ணீரிலும், காற்றிலும் கலந்து மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். இதனைக் குறைக்க கடந்த சில வருடங்களாக Roka அமைப்பு எலெக்ட்ரானிக் மற்றும் மின்கழிவுகளைச் சேகரித்து அரசு அங்கீகரித்த மறுசுழற்சி செய்யும் மையங்களுக்கு வழங்கிவருகிறது. 

கொரோனா காலத்தில் அனைவரும் மாஸ்க் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம். அதனை எப்படி அகற்ற வேண்டும்? எப்படி மறுசுழற்சி செய்ய வேண்டும்?

மாஸ்க் என்பது மறுசுழற்சி செய்ய முடியாத ஒன்று. மறுசுழற்சி செய்ய முடியாத, தீங்கு விளைவிக்கும் குப்பைகளான சானிட்டரி நாப்கின், டயாபர் போன்றவற்றுடன்தான் இந்த மாஸ்க்கையும் சிவப்பு நிறக் குப்பைத்தொட்டியில் போடவேண்டும். அதைச் செய்தாலே போதும். தெருவில் நடக்கும் போதே தினமும் பத்து, பதினைந்து  மாஸ்க்குகளைப் பார்க்க முடிகிறது. அதை முறையாக அகற்ற வேண்டும். இப்படித் தெருவில் போடுவது தவறு. 

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க என்னென்ன சிறிய முயற்சிகளை நாம் செய்யலாம்?

வெளியே செல்லும்போது பிளாஸ்டிக் பை வாங்காமல் துணிப்பையை எடுத்துக்கொண்டு போனாலே அது பெரிய மாற்றத்தைத் தரும். நம் வாழ்வில் பிளாஸ்டிக் ஊடுருவி கிடக்கிறது. கார், ஃபிரிட்ஜ் என்று பல இடங்களில் பிளாஸ்டிக் இருக்கிறது. அவற்றை நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், ஒருமுறை மட்டுமே பயன்படுத்திவிட்டு தூக்கியெறியக்கூடிய பிளாஸ்டிக்  பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். வீட்டில் இருக்கும் குப்பைகளைத் தரம் பிரித்துக் கொடுக்கலாம். வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை அடிக்கடி வாங்குவதற்குப் பதிலாக நாமே கையுடன் ஒரு தண்ணீர் பாட்டிலை வீட்டிலிருந்து கொண்டுசெல்லலாம். இவையெல்லாம் சுலபமான விஷயங்கள்தான். ஆனால், அவை பெரிய மாற்றத்தைக் கொடுக்கும். ஒருவர் மாறினால் வீடே மாறும்; ஒரு வீடு மாறினால் நாடே மாறும். 

பிளாஸ்டிக் கழிவு குறித்த இந்த விழிப் புணர்வை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக Roka அமைப்பினர் #whythisplasticveri என்கிற பரப்புரையை சமூக வலைத்தளங்களில் கொண்டுவந்தோம். பெரிய அளவில் செல்லவில்லையென்றாலும் எங்களால் முடிந்த அளவு விழிப்புணர்வைக் கொடுத்துவருகிறோம்.

 

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!