உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உக்ரைனுக்கு பல நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்கா தொடர்ந்து உதவிகளை வழங்கி வருவதுடன் சர்வதேச தளத்தில் ரஷ்யாவின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்து வருகின்றது. இதைத்தொடர்ந்து, உக்ரைனுக்கு தற்போது 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஏவுகணை எதிர்ப்பு ராக்கெட்டுகள், பீரங்கி ராக்கெட்டுகள் மற்றும் பிற ஆயுதங்களும் இதில் அடங்கும். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டின்போது செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஜோ பைடன், தேவைப்படும் வரை மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவை அளிக்கும் என்றும், ரஷியா இந்த போரில் வெற்றி பெறாது என்றும் கூறியுள்ளார்.