பிரதமர் நரேந்திர மோடி 1950ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதியான இதேநாளில் குஜராத் மாநிலத்தில் பிறந்தார். பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு உலக தலைவர்கள் முதல் பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக, உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பிரதமர் மோடியை சந்தித்தபோது பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டார். அப்போது, பிரதமர் மோடி, உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்து வருவதை குறித்து எடுத்துரைத்தார். இதையடுத்து, அமெரிக்காவின் முக்கிய பத்திரிக்கைகள் உட்பட உலக அளவில் உள்ள பல பத்திரிக்கைகள் ரஷ்யாவை போர் நிறுத்தம் செய்யுமாறு மோடி குறிப்பிட்டதை செய்தியாக வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், இன்று தனது 72ஆவது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், அனைத்து மாநில ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல், பல்வேறு நிகழ்ச்சிகள் பாஜக சார்பில் திட்டமிடப்பட்டுள்ளன.