புதுக்கோட்டை நகரில் பழமை வாய்ந்த ஸ்ரீ பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்னேஸ்வரர் கோயில் ஆடித் திருவிழா இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, விழாவின் முக்கிய நிகழ்வான 9ஆம் நாள் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா நேற்று காலை நடைபெற்றது. விநாயகர், முருகன், பிரகதம்பாள், சண்டிகேஸ்வரர் என நான்கு தேர்கள் இருந்தன. இதில், பிரகதம்பாள் இருந்த தேர் இரண்டு அடி இழுத்தவுடன் எதிர்பாராத விதமாக முன்புறமாக சாய்ந்து விபத்துக்குள்ளானது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இந்த தேர் திருவிழா விபத்தில் 8 பேர் தேர் சாய்ந்ததில் காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். எனினும், உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தேர் கவிழ்ந்தது தொடர்பாக தேரை வழிநடத்திய இருவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.