திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும். இந்த திருக்கோயிலுக்கு தமிழகம், இந்தியா மட்டும் அல்லாமல் உலக அளவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக ரூ.150, ரூ.100, ரூ.50, ஆகிய கட்டண வழியில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இந்த வழியாக சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இத்துடன் கட்டணமில்லா தரிசனத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஒரு மாதமாக ரூ.150 கட்டண வழியில் உள்ளூர் பக்தர்கள் செல்வதற்கு திருக்கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்து வந்த நிலையில் அ.தி.மு.க மற்றும் பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து, உள்ளூர் பக்தர்களுக்கு கட்டண வழியில் அனுமதிக்க வேண்டும் என்று கோயில் நிர்வாகத்திடம் கூறிவந்தனர். இந்த நிலையில் முருகனுக்கு உகந்த நாளாக கருத்தப்படும் செவ்வாய்க்கிழமையான இன்று உள்ளூர் பக்தர்களுக்கு ரூ.150 வழியில் அனுமதி வழங்கவில்லை. ஆனால் இந்து முன்னணி அமைப்பினருக்கு மட்டும் ரூ.150 வழியில் தரிசனம் அளிக்கப்படுவதாக அந்த பகுதி மக்கள் கோவில் வளாகத்தில் கோஷமிட்டது தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது. மேலும், உள்ளூர் பக்தர்களையும் ரூ.150 கட்டண சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும், இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை விரைவாக தீர்வு காண வேண்டும் என்று அந்தபகுதி முருக பக்தர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.