உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி பிரதமர் மோடி ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பில் கட்டப்பட்ட புந்தேல்கண்ட் நான்கு வழி விரைவுச் சாலையை நாட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். விவசாயம், வணிகம் உள்ளிட்ட துறைகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த பொருளாதார வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சாலை ஏழு மாவட்டங்கள் வழியாக லக்னோ-ஆக்ரா இடைப்பட்ட 296 கிலோ மீட்டரை இணைக்கிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாகவே மோடி திறந்து வைத்த இந்த எக்ஸ்பிரஸ்வே சாலை சேதமடைந்த நிலையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்த தகவல், சாலை போட்ட ஒப்பந்த நிறுவனத்துக்கு செல்லவே உடனடியாக சாலை செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக, பிரதமர் சாலையை திறந்து வைத்து ஒரு சில நாட்களிலேயே பழுதடைந்திருப்பது பொதுமக்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், கடந்த 28 மாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் உருவாகியுள்ள நான்காவது சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற சாலையின் நிலை என்னவா இருக்குமோ தெரியவில்லை.