மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள், மாநில வள பயிற்சி மையம், சிறப்புப் பள்ளிகள், பகல் நேர காப்பகம் ஆகியவற்றில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிகளில் பணியாற்றும் சிறப்பாசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு மாதந்தோறும் ஊதிய மானியம் வழங்கி வருகிறது. இதனிடையே, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் சிறப்பாசிரியர்கள் மற்றும் தசை பயிற்சி அளிக்கும் சிறப்பாசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஊதிய மானியத்தை ரூ.14 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டார். இதன் மூலம் 763 சிறப்பாசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ஊதிய மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கூடுதலாக 100 சிறப்பாசிரியர்களுக்கு ஊதிய மானியத்தை விடுவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.1.68 கோடி நிதி விடுவிக்கப்பட்டு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் 34 தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வரும் 100 சிறப்பாசிரியர்கள், தசைப் பயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியமாக ரூ.1.68 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வரும் 763 சிறப்பாசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ஊதிய மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு முதல் கூடுதலாக 100 பேருக்கு வழங்கப்பட உள்ளதாக அரசாணையில் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டுள்ளது.