ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமானத் தளம் உள்ளது. இதில் ஒரு பகுதியாக ஹெலிகாப்டர் ஓட்டுனர் பயிற்சி பள்ளியாகவும் இயங்கி வருகிறது. இதில் நாடு முழுவதும் தேர்வு செய்யப்படும் கடற்படை வீரர்களுக்கு ஹெலிகாப்டர் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 7 கடற்படை விமானிகள் வீரர்களுக்கு 22 வார கால பயிற்சி முடிக்கப்பட்டு 98ஆவது ஹெலிகாப்டர் ஓட்டுனர் பயிற்சி நிறைவு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இந்திய கடற்படை கிழக்கு பிராந்திய துணை தளபதி சஞ்சய் வாட்சயன் திறந்த ஜீப்பில் சென்றவாறு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து பயிற்சி முடித்த கடற்படை விமான வீரர்களுக்கு பதக்கம் மற்றும் பயிற்சி முடித்த சான்றிதழ்களையும் வழங்கினார். மேலும் பயிற்சியின்போது சிறந்து செயல்பட்ட வம்சி கிருஷ்ணா (விமானி) வீரருக்கு கேரளா கவர்னர் சுயல் கோப்பையை பரிசாக வழங்கினார். இந்தநிகழ்ச்சியில் வீரர்களின் முன்னிலையில் பேசிய இந்திய கடற்படை கிழக்கு பிராந்திய துணை தளபதி சஞ்சய் வாட்சயன், இந்திய கடற்படை விமான படைகள் எந்த சவால்களையும் சமாளிக்க தயாராக உள்ளதாகவும், ஆகவே புதியதாக பயிற்சி முடித்துள்ள வீரர்கள் சிறந்து செயல்பட வேண்டுமெனவும், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஏமன், ஐரோப்பிய நாடுகளை போன்றே பல்வேறு நாடுகளுடன் இணைந்து இந்தியா கூட்டு பயிற்சி முடித்து உள்ளதாகவும் அந்த பயிற்சியானது தொடர்ந்து கூட்டுணர்வுடன் பயிற்சிகள் செய்ய உதவும் என்றும் அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் கடற்படை, விமானப்படை வீரர்கள் உட்பட பயிற்சி முடித்த வீரர்களின் குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.