திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த அலமாதி பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் கடந்த 12ஆம் தேதி கொடுங்கையூர் போலீசாரால் குற்ற வழக்கு ஒன்றின் விசாரணைக்காக கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது சந்தேகமான முறையில் ராஜசேகர் உயிரிழந்ததை தொடர்ந்து மேஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தொடர்ந்து கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் உள்ளிட்ட 5 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ராஜசேகரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரே ராஜசேகரை அடித்துக் கொன்று விட்டதாகவும், பிரேத பரிசோதனை செய்யும்போது எடுக்கப்படும் வீடியோ பதிவுகளை அளித்தால் மட்டுமே உடலை வாங்குவோம் எனவும் ராஜசேகரின் குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியான பிரேத பரிசோதனை முதற்கட்ட அறிக்கையில் ராஜசேகர் உடலில் 4 காயங்கள் இருந்ததாகவும் அவை அனைத்தும் அவர் கைது செய்யப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக ஏற்பட்ட காயங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் ராஜசேகரின் உடலில் ஏற்பட்ட காயங்கள் காவல் துறையினர் தாக்கியதால் ஏற்பட்டவை அல்ல எனவும், ராஜசேகர் மரணத்துக்கும் காவல் துறையினருக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்திருந்தார். மேலும் விசாரணை கைதி ராஜசேகர் உயிரிழந்ததற்கான சரியான காரணம் விரிவான அறிக்கை வெளியான பின்பே தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விசாரணைக் கைதி ராஜசேகர் மரணம் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி சசிதரன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு விசாரணையைத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜசேகரின் குடும்பத்தார் கோரிக்கையை ஏற்று பிரேத பரிசோதனை செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் இருந்து ராஜசேகரின் உடலை குடும்பத்தார் இன்று பெற்றுக்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.