தமிழகத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று இரவு பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மின்னல் மற்றும் இடிமின்னனுடன் நேற்று மாலை முதலே கனமழை பெய்தது. இதனையொட்டி கடந்த இருநாட்களாக பெய்த கனமழை மற்றும் ஆந்திர மாநில கிருஷ்ணா நதிநீர் வரத்து காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்தேக்கங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. 3,645 மில்லியன் கனஅடி நீரை செம்பரம்பாக்கம் ஏரியில் தேக்கி வைக்க முடியும். இந்த நிலையில் ஏரியின் முழுக்கொள்ளளவான 24 அடியில், தற்போது 23.52 அடி நீர் தேக்கம் அடைந்துள்ளதால், பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி உபரிநீர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் இரண்டாவது மதகு வழியாக இன்று திறந்து விடப்பட்டது. இதனால், கரையோர மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு நீர்வரத்து 550 கனஅடியாக உள்ளநிலையில், இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் ஏரிக்கு வரும் நீரின் அளவைப்பொறுத்து நீர்வெளியேற்றம் பின்னர் உயர்த்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.