சென்னையில் முதல்முறையாக சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தப்படவுள்ளது. இதையடுத்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகளை விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார். அப்போது அவர், சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரை தமிழ்நாடு அரசும், WTA-ம் இணைந்து நடத்துகிறது. செப்டம்பர் 12 முதல் 18ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடருக்காக மைதானத்தை தயார் செய்யும் பணியானது நடைபெற்று வருகின்றது. கடந்த சில ஆண்டுகளாக மைதானம் செயல்பாட்டில் இல்லாத நிலையில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வீரர்கள் விளையாடுவதற்கு ஏதுவாக்கப்பட்டு வருகிறது. இதற்காக, மைதானத்தில் உள்ள விளக்குகள் ரூ.3 கோடி செலவில் சர்வதேச தரத்தில் புதுப்பிக்கப்படவுள்ளது. தற்போது விளையாட்டுத்துறை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. அடுத்த 15 நாட்களுக்குள் மைதான புதுப்பிப்புப் பணிகள் முடிக்கப்பட்டு வரும் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் மைதானம் வீரர்கள் விளையாட தயார் நிலையில் இருக்கும்.