கொரொனா பெருந்தொற்று காலத்தில் உலகம் முழுவதும் உள்ள பெருவாரியான மக்கள் கொரோனா நோயின் முக்கிய அறிகுறியான காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கொரோனா உறுதி செய்யப்பட்டாலும், இல்லையென்றாலும் காய்ச்சலுக்கு மருத்தவர்களால் டோலோ 650 மாத்திரையை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இத்துடன், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டபோது, மருத்துவமனைக்கு வராமல் நோயாளிகள் வீட்டில் இருந்தபடியே தாங்களே சொந்தமாக டோலோ மாத்திரைகளை எடுத்துக்கொள்ளவும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து, இந்த ஆண்டு டோலோ மாத்திரை தயாரிப்பு நிறுவனத்தின் உற்பத்தி அதிகரித்து பன்மடங்கு லாபத்தை ஈட்டியது. இதற்கிடையில் கடந்த மாதம் டோலோ நிறுவனம் மீது வரியெப்பு எழுந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்தியா முழுவதும் உள்ள டோலோ நிறுவனத்துக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்டது. இந்த நிலையில், மருந்து, மாத்திரைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் அதனை பரிந்துரைக்கும்படி மருத்துவர்களுக்கு இலவசங்களை ஊக்கமாக அளிக்கும் விவகாரத்தில் வழிகாட்டுதல் வேண்டுமென்ற கோரிக்கையின் அடிப்படையில் இந்திய மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், மத்திய வரிகள் வாரியத்தின் தரப்பு தெரிவித்த ஆதாரத்தின் அடிப்படையில், நோயாளிகளுக்கு டோலோ-650 மாத்திரையை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி மதிப்பிலான இலவசங்களை அதன் தயாரிப்பு நிறுவனம் செலவு செய்துள்ளதாக இந்திய மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொதுநல வழக்கை விசாரித்து வரும் இரண்டு பேர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, வழக்கின் தீவிரத்தை உணர்ந்து, இது மிகவும் முக்கியமான பிரச்சனை, மருந்து நிறுவனங்களின் நெறிமுறையற்ற விற்பனை நடைமுறை கவலை அளிக்கிறது. இது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். குறிப்பாக இரு நீதிபதிகளில் ஒருவரான சந்திரசூட், தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தபோதும் டோலோ 650 மாத்திரை தான் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டதாக கூறியுள்ளார்.