நொய் அரிசி ஏற்றுமதி 2018-19-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 51,000 டன்னாக இருந்த நிலையில், கடந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் வரையிலான காலத்தில் 15.8 லட்சம் டன்னாகவும், இந்த நிதியாண்டின் ஏப்ரல்-ஆகஸ்ட் மாதங்களில் அது 21.3 லட்சம் டன்னாக 42 மடங்கு உயா்ந்துள்ளது. இதனால், விலங்குகளுக்கு உணவு அளிப்பது போன்ற உள்நாட்டு தேவைக்கும் நொய் அரிசி போதிய அளவில் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, நொய் அரிசியின் மொத்த மற்றும் சில்லறை விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் அதை கட்டுப்படுத்தும் விதமாக நொய் அரிசி ஏற்றுமதிக்கான மத்திய அரசின் தடை செப்டம்பா் 9ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய உணவுத்துறை செயலா் சுதான்ஷு பாண்டே தெரிவித்துள்ளார். அதேபோல், புழுங்கல் அரிசியை தவிர பாஸ்மதி அல்லாத இதர அரசி வகைகளுக்கு 20 சதவிகித ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவற்றின் ஏற்றுமதியை குறைத்து, உள்நாட்டில் அந்த அரிசிகளின் விலை குறைய உதவ முடியும் என சுதான்ஷு பாண்டே குறிப்பிட்டுள்ளார்.