காரைக்காலில் காலரா பரவல் எதிரொலியாக மருத்துவமனைகள், உணவகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மருத்துவமனைகள், உணவகங்கள், கல்வி நிறுவனங்களில் கொதிக்க வைக்கப்பட்ட குடிநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நோய் தொற்று கட்டுபாடுகளை முறையாக பின்பற்றாதவர் மீது குற்றவியல் நடைமுறை சட்ட பிரிவு 144(2)ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை காரைக்காலில் 3 பேர் காலராவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் எதிரொலியாக இன்று முதல் 3 நாட்களுக்கு காரைக்காலில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், வாந்தி, வயிற்றுப்போக்குடன் சிலருக்கு காலரா நோய் அறிகுறி தென்பட்டுள்ளதால், மக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்க 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் அளித்திருந்தார். காரைக்காலில் நேற்று மாலை அமலுக்கு வந்த 144 தடை மறு உத்தரவு வரும்வரை, அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.