காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஊராட்சி நடுநிலை பள்ளியில் நடைபெற்றது. இதனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணியில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்திட முன்வருவதோடு, அரசு பள்ளிகளில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதை விளம்பரப்படுத்தியும், பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் பயில்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் அந்தந்த பகுதிகளில் பேரணிகள் நடத்திடவும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியதன் அடிப்படையில், இன்றையதினம் இப்பேரணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்த்து கல்வி பயில முன்வர வேண்டுமென பேரணி நடைபெற்றது. பேரணியில் ”கல்வி என்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை, சமதர்மம் சமுதாயம் நிலைபெற ஒரே வழி கல்வி, நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியே உயிர்நாடி, பள்ளிக்குசெல்வோம், பல்கலை அறிவோம். அனைவரும் படிப்போம், அகிலத்தை வெல்வோம், பெண்களை படிக்க வைப்போம், சமுதாய வளர்ச்சிக்கு வழி வகுப்போம், பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளியில் சேர்ப்போம்” போன்ற வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஆசிரியர்கள் ஏந்தி சென்றனர். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், அரசு ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.