தமிழ் திரைப்பட நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்து வருகிறார். தேமுதிக கட்சி நடவடிக்கைகளை கூட அவரின் குடும்பத்தினரே கவனித்து வருகின்றனர். தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட போட்டியிடவில்லை. அவரின் கட்சி தொண்டர்களுக்கு ஆதரவாக பிரச்சாரங்களில் கூட பங்கேற்க முடியாத அளவிலேயே விஜயகாந்தின் உடல்நிலை இருந்து வருகிறது. அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்றும் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் பொதுநிகழ்ச்சிகளில் ஏதும் பங்கேற்காமல் தன்னுடையே வீட்டிலேயே இருந்து வருகிறார். சில நேரங்களில் மரியாதை நிமித்தமாக சந்திக்கும் அரசியல் கட்சியினருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் தன் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை மட்டுமே சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், அண்மையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்தின் காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் அறுவை சிகிச்சை செய்து 3 விரல்களை அகற்றி இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விஜயகாந்த் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற வேண்டி பிரார்த்தனை செய்து வருகின்றனர்.