இந்தியா முழுவதும் புதிதாக கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக நாள் ஒன்றுக்கு சுமார் 9 ஆயிரம் வீதம் அதிகரித்தது. ஆனால், நேற்றும் இன்றும் புதிதாக கொரோனா நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மளமளவெனக் குறையத்தொடங்கி உள்ளது. முன்னதாக நேற்று மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி, 8,084 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 594ஆக குறைந்துள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 582 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் 4 ஆயிரத்து 35 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனைத்தொடர்ந்து நாடு முழுவதும் 50 ஆயிரம் பேர் கொரோனா நோய்க்கு மருத்துவமனைகளில் சிசிச்சைப் பெற்றுவருகின்றனர். இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை மொத்தமாக 4 கோடியே 26 லட்சத்து 61 ஆயிரத்து 370 பேராக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 777ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக கேரளா, டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுடன் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அந்தந்த மாநிலங்களில் கொரோனா பரவாலை தீவிரமாக கண்காணிக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தவிர, கொரோனா நோய் தொற்று பாதிப்பின் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் நேற்று அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனையில் ஈடுபட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டு இருந்தார்.