day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

வியர்க்குருவைப் போக்கும் நுங்கு – பிரியா தியாகராஜன், பியூட்டிஷியன்

வியர்க்குருவைப் போக்கும் நுங்கு – பிரியா தியாகராஜன், பியூட்டிஷியன்

சித்திரை மாத வெயில் நம்மை வறுத்தெடுக்கத் தொடங்கிவிட்டது. வெளியே சென்றால் வெயில் சுட்டெரிக்கிறது என்று வீட்டில் இருந்தாலும் வியர்வையும் புழுக்கமும் நம்மைப் பாடாகப் படுத்துகின்றன. கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் வெயில் காலத்தில் ஏற்படும் சில சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
சிலருக்கு வெயில் காலம் வந்தாலே கண்கள் சிவந்து பொங்கிவிடும். நம் உடலில் ஏற்படும் சூடு காரணமாக இப்படி ஏற்படலாம். சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் சிவந்து விடும்போது, நல்ல சுத்தமான விளக்கெண்ணெயை எடுத்துக் கண்கள் மற்றும் புருவங்கள் மீதும் இரு கண்களைச் சுற்றியும் தடவி இரவில் தூங்கச்சென்றால் நல்ல பலனைக் காணலாம். ரோஸ் வாட்டரையும் தடவலாம் அல்லது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஆவாரம் பூ வாங்கி வந்து ஒரு வெள்ளைத் துணியில் கட்டி கண்களின் மேல் வைத்தாலும் பலன் கிடைக்கும். இவை சாதாரண சூட்டினால் வரும் பிரச்சினைகளைத் தீர்க்கும்.
ஒரு சிலருக்கு அப்படியும் பலன் தெரியவில்லை என்றால், நல்ல கண் மருத்துவரைச் சந்திப்பது உத்தமம். வெள்ளரிக்காய்கள் கண்களுக்குக் குளிர்ச்சி தரக் கூடியவை. அவற்றையும் பயன்படுத்தலாம். வெள்ளரிக்காய்களை வட்டமாக நறுக்கிக் கண்களின் மீது வைக்கலாம். இதெல்லாம் போக வாரத்தில் ஒரு நாள் சுத்தமான நல்லெண்ணெயைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்துப் பின் தலையை அலசினாலும் நல்ல பலனைக் காணலாம்.
சிலருக்கு வெயில் காலத்தில் உடலெல்லாம் சிவந்து தடித்துவிடும் அல்லது வியர்க்குரு தோன்றும். சிலருக்கு வெயில் கட்டிகள்கூட வரும். நம் உடலில் வெயில் காலங்களில் நிறைய வியர்வை சுரக்கும். அப்படிச் சுரக்கும் வியர்வை வெளியே வராமல் அப்படியே உடலின் துவாரங்களில் தங்கிவிடும்போது வியர்க்குரு தோன்றும். மேலும் கொப்புளங்களும் தோன்றும். சரியான உணவுமுறை இல்லாவிட்டாலும் இப்படிப்பட்ட இம்சைகள் ஏற்படும். நம் உடலுக்குத் தேவையான தண்ணீர் அருந்துதல், தர்பூசணி சாப்பிடுதல், இளநீர், மோர் ஆகியவற்றைக் குடித்தல் என நம் தேவைகளுக்கு ஏற்றாற்போல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவையெல்லாம் செய்தும் வெயிலைச் சமாளிக்க முடியாமல் வியர்க்குரு வந்தால் என்ன செய்யலாம்? கோடையில் கிடைக்கும் அருமருந்து நுங்கு. அதைச் சாப்பிடலாம். அது மட்டுமல்லாமல் நுங்கு உள்ளே இருக்கும் நீரை வியர்க்குருவின் மேல் தடவ ஒரு வாரத்தில் அனைத்தும் மறைந்துவிடும். சிறிது தூள் செய்யப்பட்ட கற்பூரம் மற்றும் வேப்ப எண்ணெய் இரண்டையும் கலந்து வியர்க்குரு மேல் தேய்த்து 10 நிமிடம் கழித்துக் கழுவிவிட்டால்போதும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்தால் வியர்க்குரு இருந்த இடம் தெரியாமல் போய்விடும். வேப்பிலை மற்றும் மஞ்சள் இரண்டையும் கலந்து தேய்த்தாலும் உடனடி பலன் காணலாம்.
சூட்டுக் கொப்புளம் மறைய
ஆரஞ்சுப் பழத்தைத் தினமும் சாப்பிட்டால் கட்டி மற்றும் கொப்புளங்கள் வராமல் தடுக்கலாம். சிறிது சுண்ணாம்பு மற்றும் தேன் சிறிதளவு எடுத்துக் கட்டிகள்மீது வைத்தால் இரண்டே நாளில் நல்ல பலன் தெரியும். சுத்தமான பழக்க, வழக்கங்கள் கோடையில் ரொம்ப முக்கியம். இரண்டு வேளை குளிப்பது ரொம்பவே அவசியம். குளிக்கும் நீரில் சிறிது மஞ்சள் மற்றும் கைப்பிடி அளவு வேப்பிலை கலந்து குளித்தால் எந்தவித வேனல் கட்டி மற்றும் கொப்புளங்கள் வரவே வராது.
இரவில் சுத்தமான சந்தனம் எடுத்து இளநீரில் கலந்து கொப்புளங்கள் மற்றும் கட்டிகள் மீது தடவ, மீண்டும் வராத அளவுக்கு மறைந்துவிடும். மேலும், கடல்பாசி எனப்படும் ஒருவித ஜெல்லியை வாங்கி இரவில் ஊற வைத்துக் காலையில் வெறும் வயிற்றில் மோரிலோ பாலிலோ கலந்து குடித்துவந்தால் கோடையில் ஏற்படும் எல்லாவிதச் சூட்டுப் பிரச்சினைகளும் வராமல் தடுக்கலாம்..

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!