day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

மாறுவோம் மாற்றுவோம் -கல்லூரி மாணவியின் சேவை சிந்து

மாறுவோம் மாற்றுவோம் -கல்லூரி மாணவியின் சேவை சிந்து


ல்லூரிக் காலத்தில் சிந்துவின் மனதில் விழுந்த விதை, இன்று விருட்சமாக வளர்ந்திருக்கிறது. திருச்சியைச் சேர்ந்த சிந்து, தனக்காக வாழாமல் பிறருக்காகவும் வாழும் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
கல்லூரியில் இளங்கலை படிக்கும்போதே சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிந்துவுக்குத் தோன்றியது. தன்னுடன் படிக்கும் சக மாணவிகளிடம் தன் விருப்பத்தைச் சொன்னார். வெளியே சென்று சாப்பிடும் பணத்தில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவலாம் என்ற சிந்துவின் ஆலோசனைக்குத் தோழிகளிடம் வரவேற்பு. ஆதரவற்ற குழந்தைகளுக்கு பென்சில், நோட்புக், ஸ்நாக்ஸ், சோப்பு ஆகியவற்றை வாங்கிக்கொடுத்தனர். சிந்துவும் பகுதி நேர வேலையாக சுடிதார் விற்றார். அதில் கிடைக்கிற சொற்ப வருமானம், சேமிப்பு, நண்பர்கள் கொடுக்கும் பணம் ஆகியவற்றைச் சேர்த்து, சேவையைத் தொடர்ந்தார். முதுகலையில் சமூக சேவை தொடர்பான எம்.எஸ்.டபிள்யூ படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்தார். பிறகு தன் சேவையை அமைப்பாக மாற்ற முடிவெடுத்தார். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘மாறுவோம், மாற்றுவோம்’ தொண்டு நிறுவனம்.
“2018-இல் இதை ஆரம்பித்த போது யாரும் எனக்கு சப்போர்ட்டா இல்லை. நானாகத்தான் அனைத்தையும் செய்தேன். அப்படிச் செய்யும் சின்ன சின்ன உதவிகளை சோசியல் மீடியாவில் அப்லோடு செய்ததைப் பார்த்துவிட்டு, வாலன்டியர்ஸ் வர ஆரம்பித்தார்கள். 2019-ஆம் ஆண்டு எனக்கு ஒரு நல்ல வாலன்டியர் கிடைத்தார். இப்படி ஒன்று, இரண்டு நபர்களால் ஆரம்பிக்கப்பட்டு இன்று திருச்சியில் பெயர் சொல்லும் அளவுக்கு நல்ல தொண்டு நிறுவனமாகச் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. இன்று உதவி என்று கேட்டதும் செய்யப் பலர் இருக்கிறார்கள். இயற்கையை நேசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதை ஆரம்பித்தேன். எங்களுடைய முதல் பணியே பனை விதை விதைப்பதுதான். அதன்பின் மரக்கன்று நடுவது, மழைக்காலங்களில் விதைப்பந்து வீசுவது, விதைகள் சேகரிப்பது, ஏதாவது நிகழ்ச்சியில் மரக்கன்றுகள் பதியம் போட்டுக் கொடுப்பது, மரக்கன்று நடுவது, புற்றுநோயாளிகளுக்கு முடி தானம் கொடுப்பது போன்றவற்றைச் செய்வோம். புற்றுநோயாளி களுக்கு முடி தானம் செய்வதை இரண்டு மாதங்களாககத்தான் செய்துகொண்டு இருக்கிறோம். இந்த இரண்டு மாதங்களில் 37 பேர் முடி தானம் செய்திருக்கிறார்கள். அவர்களில் 35 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள். சென்னையில் உள்ள அடையார் புற்றுநோய் மையத்துக்கு விக் செய்து தரும் பவுண்டேஷன் மூலமாகத்தான் நாங்கள் உதவி செய்துகொண்டு இருக்கிறோம். அப்பா, அம்மா இல்லாத 5 குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்விக்கட்டணம் செலுத்தியிருக்கிறேம். 8 பனை விதை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். அழிந்துவரும் பனை மரங்களைக் காக்க வேண்டும் என்று மழைக்காலங்களில் ஏரி, குளங்களின் ஓரங்களில் பனை விதைகளை விதைத்துள்ளோம். ஒரு இடத்தில் பனை மரம் இருந்தால் அதைச்சுற்றி 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர் வற்றாமல் பாதுகாக்கப்படுகிறது என்பதால் பனை விதைகளை விதைக்கிறோம். பனை மரத்தின் சிறப்பே அதுதான். அதேபோல் பனை மரத்தை வளர்ப்பது மிகவும் எளிது. நிலத்தில் அரை அடி ஆழத்துக்குப் பள்ளம் தோண்டி வைத்தாலே, ஒன்று இரண்டு மழைக்கு அதுவே தானாக முளைத்துவிடும். ஒரு பனை முழுமையான மரமாக வளர்வதற்குக் குறைந்தது 10 வருடங்கள் முதல் 12 வருடங்கள் ஆகும். ஒரு ஊரைச்சுற்றி குறைந்தது 10 பனை மரங்கள் இருந்தாலே அந்த ஊரில் தண்ணீர் பற்றாக்குறை வராது என்பார்கள். பள்ளிக் குழந்தைகளின் பிறந்த நாளன்று குழந்தைகளின் மூலம் மரக்கன்றுகள் நடுதல், அதேபோன்று மற்றவர்களின் பிறந்த நாள், திருமண நாள், ஆண்டு விழா இது போன்ற விசேஷ நாட்களில் அனாதை இல்லங்களுக்குச் சென்று அவர்களின் கையாலேயே அங்குள்ளவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்” என்கிறார் சிந்து.
நகர்ப்புறப் பெண்கள் மட்டுமல்லாமல், கிராமப்புறங் களிலும் பெண்கள் முடி தானம் செய்திருக்கிறார்கள் என்கிறார் சிந்து.
“சமீபத்தில் இரண்டு பெண்கள் முடி தானம் செய் தார்கள். இரண்டு பேருக்குமே பேரன், பேத்திகள் இருக்கிறார்கள். ஒருவர் ஜெயமணி, வயது 70, மற்றொருவருடைய பெயர் வனஜா, வயது 65. இருக்கும்போதே இந்தச் சமுதாயத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்ததால் தங்களது முடியைத் தானமாகக் கொடுத்ததாக இருவரும் சொன்னார்கள். இவர்கள் இருவருமே தாமாக முன்வந்து முடியைத் தானமாகக் கொடுத்தது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இதேபோன்று ஆண்களும் முன்வர வேண்டும். அவர்களிடையே விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்பதற்கான வேலைகளை நாங்கள் செய்துகொண்டு இருக்கிறோம். அதற்காக சோசியல் மீடியாவில் விளம்பர உத்திகளைக் கையாண்டுவருகிறோம். அதன் பலனாக, நான்கைந்து இளைஞர்கள் தங்களது முடியைத் தானம் செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். இவர்களும் கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்கள்தான். அதேபோன்று பெண்கள் பலர் 16 இன்ச், 26 இன்ச் முடியை எல்லாம் தானமாகக் கொடுத்திருக்கிறார்கள். அதனால், இதைப்பற்றி கிராமப்புறங்களில் விழிப்புணர்வு இல்லை என்று சொல்ல முடியாது” என்கிறார்.
சமூக வலைத்தளங்கள் சிந்துவுக்குப் பெரிதும் உதவுகின்றன. “நாங்கள் செய்கிற சமுதாயப் பணிகள், சமூகநலப் பணிகள் எல்லாவற்றையும் சோசியல் மீடியாவில் பார்த்துவிட்டுத்தான் பலர் எங்களைத் தொடர்பு கொள்கிறார்கள். இந்தச் சமூகத்துக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும், அதற்கு உங்களுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கூறித்தான் அவர்களை நாங்கள் இந்தச் சமூகப் பணிக்கு அழைத்து வருகிறோம். கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில்கூட எங்களது சமூகப் பணியைப் பார்த்துவிட்டுப் பல தன்னார்வலர்கள் அந்தப் பணியில் தங்களையும் இணைத்துக்கொண்டார்கள். ஒரு நாளைக்கு சுமார் ஐந்தாயிரம் உணவுப்பொட்டலங்களுக்கு மேலாகக் கொடுத்தோம். இந்த ஊரடங்கு காலத்தில் பல தன்னார்வலர்கள் தங்களையும் பாதுகாத்துக்கொண்டு, சாலையோரங்களில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிவந்ததைப் பார்க்கும்போது எனக்குப் பிரமிப்பாக இருந்தது. ஆண், பெண் என்று பேதமின்றி அனைவரும் குடிசைவாழ் மக்கள், சாலை ஓரத்தில் குடியிருப்பவர்கள், ஆதரவற்ற முதியவர்கள் என்று எல்லோருக்கும் களத்தில் ஓடி ஓடி உதவினர். எங்கள் டிரஸ்ட் சார்பில் திருச்சியிலும், கடலூரிலும்தான் அதிகமாகச் சமூகப் பணி செய்கிறோம். மற்ற மாவட்டங்களில் ஏதாவது ஏற்பாடு செய்துதர கேட்டால் செய்து கொடுக்கிறோம். சிலர் சோஷியல் மீடியா மூலமாகவும் உதவி கேட்கிறார்கள். அதையும் செய்து கொடுக்கிறோம். சோஷியல் மீடியா என்பது இந்த்த் துறைக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. சமூக சேவைக்கு மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளது” என்று தங்கள் பணி குறித்துச் சொல்கிறார் சிந்து.
சிந்துவின் சமூகப் பணிக்கு முதலில் வீட்டிலிருந்தே எதிர்ப்புக் கிளம்பியதாம். “பெண்ணாக இருந்துகொண்டு இதைச் செய்வது கடினம் என்ற காரணத்துக்காக வீட்டில் இதை எதிர்த்தார்கள். பின்னர், நாளடைவில் அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். ஆரம்பத்தில் சின்ன, சின்னதாக அவார்டு எல்லாம் கிடைத்தது. உனக்கு அவார்டு கிடைக்கிறது என்பதற்காக இதையெல்லாம் செய்கிறாயா என்று என் அம்மா கேட்டார்கள். அதற்காகவே எல்லாவற்றுக்கும் செல்வதில்லை. மேலும், யாராவது வற்புறுத்திக் கூப்பிட்டால் மட்டுமே போவேன். நான் பலருக்கு உத்வேகம் அளித்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். சமீபத்தில்கூட சென்னையைச் சேர்ந்த டேனியல் பிரவீன் என்பவர் தான் ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்திருப்பதாகவும், அதற்கு நான்தான் காரணம் என்றும் சொல்லியிருக்கிறார். பெண்களுக்குப் பயம் இருக்கக் கூடாது. துணிச்சலாக இறங்கிப் போராட வேண்டும். எதற்காகவும் அஞ்சக் கூடாது.
பல பெண்கள் திருமணமாகி ஏதோ ஒரு காரணத்துக்காக சேவை செய்ய முடியாமல் இருக்கிறார்கள். குடும்பத்தினர் ஒத்துக்கொள்வதில்லை, தடையாக இருக்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் தாங்கள் செய்ய விரும்பும் சேவை பற்றிக் குடும்பத்தினரிடம் பேச வேண்டும். அதைப் பெரும்பாலான பெண்கள் செய்வதில்லை. தயங்குகிறார்கள். எனக்கே முதலில் அப்படித்தான் இருந்தது. என் குடும்பத்தினரிடம் சம்மதம் வாங்குவதற்கு எவ்வளவோ போராடினேன். கண்ணீர் வடித்தேன். அதற்கெல்லாம் இன்று பலன் கிடைத்திருக்கிறது. அன்று என் குடும்பத்தினருக்குப் பயந்து நான் இதைச் செய்யாமல் விட்டிருந்தால், இந்த அளவுக்கு நான் வந்திருக்க முடியாது. பிறருக்கு உதவி செய்ய முடியாமல் போயிருக்கும். ஆதரவற்ற குழந்தைகளுக்காக இல்லம் அமைப்பது அல்லது கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக உதவுவது போன்றவற்றைச் செய்ய வேண்டும் என்பது என்னுடைய எதிர்காலத் திட்டம்.
பெண்களுக்கு மட்டுமல்லாமல் எல்லாருக்குமான சேவையை எங்கள் நிறுவனம் மூலம் செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். எந்த இடத்தில் தேவை இருக்கிறதோ அவர்களுடைய வாழ்வாதாரத்துக்கு உதவவுதுபோல் என்னுடைய சேவைப் பயணம் இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பேன்” என்று பெருமிதத்ததுடன் சொல்கிறார் 23 வயது சிந்து!

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!