day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

மருத்துவம் பயில  உக்ரைனுக்குச் செல்வது ஏன்? – ரமாதேவி

மருத்துவம் பயில  உக்ரைனுக்குச் செல்வது ஏன்? – ரமாதேவி

டெல்லியில் குஜராத் பவன் உள்ளிட்ட தேசத்தின் அத்தனை பவன்களும் கடந்த மாதம் அமைதியில் உறைந்திருக்க,  தமிழ்நாடு இல்லங்கள் மட்டும் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தன.  உக்ரைனில் பயிலும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சாரைசாரையாக வந்துகொண்டே இருக்கிறார்கள். முகத்தில் குழப்பமும், விரக்தியும், பயமும் தட்டுப்படுகிறது. ஒருவர் முகத்திலும் புன்னகையில்லை. வைகை மற்றும் பொதிகை தமிழ்நாடு இல்லங்களில் அவர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். பிறகு, சொந்த ஊருக்கு விமானங்களில் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களுக்கான அறை ஒதுக்கீடு, விமான ஏற்பாடு, உணவு  என ஊழியர்கள் கையில் மாணவர் பட்டியலுடன் பம்பரமாகச் சுழன்றனர். தொடர்ந்து ஒலிக்கும் தொலைபேசி அழைப்புகளுக்கு மிகப் பொறுமையாகப் புன்னகை மாறாமல் பதில் அளித்தனர், வரவேற்பறையில் இருக்கும் அலுவலர்கள். சமையலறை அடுப்புகளுக்கும், பணியாளர்களுக்கும் இரவு பகல் என்ற கணக்கில்லை… ஓய்வும் இல்லை. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கருத்தரங்கிற்காக டெல்லி வைகை தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்தபோது நான் பார்த்த காட்சிகள் இவை.

எலும்பை உறையவைக்கும் கடுங்குளிர், உக்ரேனியன் என்ற கேள்விப்பட்டிராத புதியமொழி… புதிய மனிதர்கள், வித்தியாசமான உணவுப் பழக்கங்கள்… இந்தியாவிலிருந்து பல்லா யிரம் கிலோமீட்டர்கள் பயணம் போன்ற தடை களைப் புறம்தள்ளிச் செல்லும் அளவுக்கு அப்படி என்ன இருக்கிறது உக்ரைனில்? எதனால் ஈர்க்கப்படுகின்றனர் நம் மாணவர்கள்?  

நாற்பதுக்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகள் உக்ரைனில் இருந்தாலும்,  குறிப்பிட்ட 7 கல்லூரிகள்தான் இந்திய மாணவர்களின் தேர்வாக இருக்கின்றன.  ‘உக்ரைனில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் 74 ஆயிரம் பேரில், இந்திய மாணவர்களின் எண்ணிக்கையே கணிசமானது’ என்கிறது உக்ரைன் கல்வி மற்றும் அறிவியல் அமைச்சக இணையதளம். மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமல்ல, பொறியியல் கல்லூரிகளுக்கும் இந்திய மாணவர்கள் உக்ரைன் நோக்கிப் படையெடுக்கின்றனர். உக்ரைனில் கல்வி பயிலும் வெளிநாட்டவரில், அதிகபட்சமாக இந்தியாவிலிருந்து 22.9 சதவீதம் பேர் இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் கட்டணம் குறைவு

இன்றைக்குப் பெரும்பான்மையான இந்தியப் பெற்றோர்களின் மொத்தக் கனவும், ‘எப்படியாவது எம்புள்ளையை டாக்டராக்கிடணும்’ என்பதாகத்தான் இருக்கிறது. ஆனால், கனவு காணும் பெற்றோர் மற்றும்  மாணவர்களின் எண்ணிக்கைக்கும், இந்தியாவில் உள்ள மருத்துவப் படிப்பு இடங்களின் எண்ணிக்கைக்குமான வித்தியாசம் மலைக்கும், மடுவுக்குமானதாக இருக்கிறது. கடந்த 2021-ல், இந்தியாவில் 16 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதி, அதில் 8 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சிபெற்றனர். ஆனால், தேசிய மருத்துவ கவுன்சில்  புள்ளி விவரப்படி, இந்தியாவில் உள்ள 554 மருத்துவக் கல்லூரிகளில் 83,075 மருத்துவப் படிப்பு இடங்களே உள் ளன. தமிழ்நாட்டை எடுத்துக்கொண் டால், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 8,000 எம்.பி.பி.எஸ்., மற்றும் 3,000 பி.டி.எஸ்.,  இடங்களே உள்ளன. இந்த இடங்களுக்குத் தமிழ்நாட்டில் மட்டும் ஓர் ஆண்டிற்குச் சராசரியாக 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். சிறுவயது முதலே நெஞ்சில் மருத்துவக் கனவைச் சுமந்து  வளர்ந்த, மீதியுள்ள லட்சக்கணக்கான மாணவர்களை ரஷ்யா, உக்ரைன், ஜார்ஜியா, பிலிப்பைன்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகள் இருகரம் நீட்டி வாரி அணைத்துக்கொள்கின்றன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்தியாவில் தனியார் கல்லூரிகளில் ஒரு மாணவன் மருத்துவப் படிப்பைப் படித்து முடிக்க 50 லட்சம் ரூபாயில் ஆரம்பித்து கோடி ரூபாய் வரை செலவழிக்க வேண்டியுள்ளது. அதேநேரத்தில், ரஷ்யாவில் மருத்துவம் பயிலும் மாணவர் ஒருவருக்கு 2 முதல் 3 லட்சம் மட்டுமே வருடாந்திரக் கட்டணம் ஆகும் எனவும், 15 முதல் 17 லட்சத்துக்குள் படிப்பை முடித்துவிடலாம் எனவும் கூறப்படுகிறது. சீனாவிலோ, 10 முதல் 12 லட்சத்துக்குள் முடித்துவிடலாமாம்.

உலக அளவில் வேலைவாய்ப்பு

உக்ரைன் நாட்டு மாணவர்களுக் குப் பெரிதளவில் மருத்துவம் படிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருப்பதும், மருத்துவப் படிப்புக்கெனத் தனியாக நுழைவுத் தேர்வு உக்ரைனில் இல்லை என்பதும் இந்திய மாணவர்களை உக்ரைன் நோக்கி இழுக்கிறது. 2016ம் ஆண்டுக்குப் பிறகு, வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க இந்தியாவில்  நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது மட்டுமே போதுமான தகுதியாக இருக்கிறது.

மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் மருத்துவ முதுகலைப் பட்டப்படிப்பு ஆகியவற்றில் அதிகமான மாணவர்கள் படிக்கக்கூடிய ஐரோப்பிய நாடுகளில் 4வது இடத்தில் இருக்கிறது உக்ரைன். ஏனெனில், உக்ரைன் மருத்துவக் கல்லூரிகள் உலகத் தரம் வாய்ந்ததாகவும் கருதப்படுகின்றன. அது மட்டுமல்ல, உக்ரைன் மருத்துவப் படிப்பை இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, பிற ஐரோப்பிய நாடுகள் அங்கீகரித்துள்ளதாலும், உலக அளவில் வேலை வாய்ப்பு பெறும் வாய்ப்பு  இந்த மாணவர்களுக்கு  இருப்பதாலும் மாணவர்களின் முதல் தேர்வாக உக்ரைன் இருக்கிறது. இப்படிப் பலப்பல காரணிகள் இந்திய மாணவர்களுக்குத் தூண்டில் போடுகின்றன.

எந்த நாட்டில் மருத்துவப் படிப்பைப் படித்து வந்தாலும்,  இந்திய மருத்துவ கவுன்சில் நடத்துகிற எஃப்.எம்.ஜி.இ., என்ற தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்திய மருத்துவ கவுன்சிலில் மருத்துவராகப் பதிவுசெய்துகொள்ள முடியும். மிகக் கடினமான இந்தத் தேர்வை வருடத்திற்கு 4 ஆயிரம் பேர் எழுதி, 700 பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். இருந்தாலும் வெளிநாட்டு மருத்துவப் படிப்பு மோகம் மட்டும் குறைவதில்லை.

ஆங்கிலம், உக்ரேனியன், ரஷ்யன் என மூன்று மொழிகள் இருந்தாலும், பயிற்று மொழி ஆங்கிலம் என்பதும்  இந்திய மருத்துவப் படிப்பைச் சார்ந்துள்ள பாடத்திட்டங்கள், ஜெர்மனியில் உயர்கல்வி பயில முன்னுரிமை, கல்வி கற்கச் செல்லும் மாணவர்களுக்குப் போக்குவரத்துக் கட்டணத்தில் அந்நாட்டு அரசு அளிக்கும்  50 சதவீத சலுகை எனச் சாதகமாகப் பல அம்சங்களைச் சுட்டிக்காட்டுகின்றனர் உக்ரைனில் படித்த மருத்துவ மாணவர்கள்.              

நம் நாட்டிலேயே தக்கவைப்போம்

அதேநேரத்தில், படிப்பைத் தொடர முடியாமல் திரும்பி வந்திருக்கும் இந்த மாணவர்களின் அடுத்தகட்ட நிலை என்ன என்பதும் மிகப் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கிறது. நிலைமை சரியாகும்வரை ஆன்லைன் வகுப்புகள் தொடர்ச்சியாக நடத்தப்படும் எனப் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்கள் உறுதியளித்திருந்தாலும், மருத்துவப் படிப்புக்கு அது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம்தான். பல்வேறு குழப்பங்களுக்கிடையே, மார்ச் 14 முதல் மேற்கு உக்ரைனில் அமைந்துள்ள பல்வேறு மருத்துவப் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன.

இறுதி ஆண்டு மாணவர்கள், நேரடி நடைமுறை வகுப்புகள் தேவைப்படும் சூழலில் இருப்பதால்,  மிகுந்த கவலையில் இருக்கின்றனர்.  இந்தியப் பல்கலைக்கழகங்களில் அவர்களைச் சேர்ப்பதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும் எனக் குரல்கள் எழும்ப ஆரம்பித்திருந்தாலும், அத்தனை மாணவர்களுக்கும் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை  என்பதே எதார்த்தம்.            

வெளிநாடுகளில் படிப்பை முடித்துவிட்டு, வெவ்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து விடுவ தால், ‘பிரைன் ட்ரெய்ன்’என்று அழைக்கப்படும், இந்திய புத்திசாலி மூளைகள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவது நமக்கு மிகப் பெரிய இழப்பாகவே கருதப்படுகிறது. இந்திய மாணவர்களை, இந்திய மூளைகளைத் தக்கவைக்க வேண்டுமானால், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழலைத் தவிர்க்க   வேண்டுமானால், தனியார் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை நெறிப்படுத்துவதும், இந்தியாவில் மருத்துவக் கல்லூரிகளையும், மருத்துவ இடங்களையும் போதுமான அளவு அதிகரிப்பது மட்டுமே ஒரே தீர்வு  என கல்வியாளர்களால் வலியுறுத்தப்படுகிறது.

 

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!