day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

கர்ப்ப காலத்தில் உறவு நல்லதா? – டீனா அபிஷேக்

கர்ப்ப காலத்தில் உறவு நல்லதா? – டீனா அபிஷேக்

 

இல்லற வாழ்வில் ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது மிகப்பெரிய வரம். ஒரு பெண் தாய்மை அடையும்போது ஏற்படும் சந்தோஷத்திற்கு ஈடு இணையே கிடையாது. ஆனால், இன்றைய உலகில், திருமணமான சில பெண்கள் குழந்தைப்பேறைத் தள்ளிப்போடுகின்றனர். அப்படித் தள்ளிப்போடுவது நல்லதா? அதேநேரத்தில், குழந்தைப்பேறு பெறுவதற்கு அவர்கள் எப்படித் தங்களைத் தயார் செய்துகொள்ள வேண்டும் என விவரமாய் விளக்கம் தருகிறார் மகப்பேறு மற்றும் பாலூட்டுதல் ஆலோசகர் டீனா அபிஷேக்.

“முதலில், திருமணம் ஆன உடன் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிடுங்கள். அது, மனச்சோர்வை ஏற்படுத்தி விடுகிறது. திருமணம் ஆகி 3 மாதங்களிலேயே கருத்தரிப்பு மையங்களுக்குச் சென்று ஆலோசனை பெறும் அளவிற்கு மனச்சோர்வு ஏற்பட்டுவிடுகிறது. ஒரு வருடம் குழந்தை இல்லை என்றாலே 10 வருடம் குழந்தை இல்லாததுபோல் வருந்துகிறார்கள். யோசிக்கலாம், அதில் தவறில்லை. ஆனால், அது எல்லையை மீறி, கல்யாணம் முடிந்து அடுத்த வேலையே குழந்தை பெற்றெடுப்பதுதான் என்பதுபோல் ஆகிவிடுகிறது. முதலில் காதல் திருமணமாக இருந்தாலும் கணவன் -மனைவி இடையே ஒரு நல்ல புரிதல் வேண்டும். குறைந்தது 6 மாதங்கள் கணவன்-மனைவி பழகி, புரிதல் வந்தபிறகே குழந்தைக்கு முயற்சிக்கலாம். 

பதற்றம் வேண்டாம்

குழந்தைக்காக முயற்சிப்பதும் இந்த நேரத்தில் சேர்ந்தால் சரியாக இருக்கும் என்று  கணக்கு பண்ணி சேரவேண்டிய அவசியம் இல்லை. அது மேலும் மனஅழுத்தத்தைத்தான் தரும். ஒருவேளை, தாமதமாக திருமணமாகிறது என்றால், அதாவது 35 வயதிற்கு மேல் திருமணம் ஆகிறது என்கிறபட்சத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். குழந்தை வேண்டும் என்று முடிவெடுத்தவர்கள் முதலில் அவர்கள் மனநலத்தில் கவனம் செலுத்தவேண்டும். எந்த நேரத்தில் உறவு கொள்ளவேண்டும், கர்ப்பமுற்றவர்களுக்கு என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்று வாசித்து, பல பதிவுகளைப் பார்த்து, மன அழுத்தத்தில் இருப்பார்கள். அதனால் அதைத் தவிர்க்கலாம். 

தூக்கம் நல்லது

குறிப்பாக, உங்கள் மனநிலை பிறக்கும் குழந்தைக்கு முக்கியம். இரண்டாவது, உணவு முறை  மற்றும் உடற்பயிற்சி. பணிபுரியும் இடங்களில் கொஞ்ச  நேரம்  நடப்பது  போன்ற  வேலைகள்  இருந்தால் பரவாயில்லை. ஆனால், அதிகம் உடல் அசைவு இல்லாத வேலை என்றபட்சத்தில் உடற்பயிற்சி அவசியம். கணவன்-மனைவி இருவருக்குமே உடற்பயிற்சி மற்றும் உணவுமுறைகள் சரிவர இருக்கவேண்டும். டயட் என்றால் உணவுமுறை மட்டுமல்ல, உறக்கமும் அதில் சேரலாம். சரியான நேரத்தில், வெளிச்சம் இல்லாத இருட்டான அறையில் தூங்க வேண்டும். சூரிய வெளிச்சம்படும்போது உங்கள் உடலில் மெலனின் சுரக்காது. அதனால், சிறிது இருட்டில் 6 மணிநேரம்  உறங்குவது நல்லது. உணவு சாப்பிட்டவுடன், உறங்காமல் 8 மணிபோல் உணவு எடுத்துக்கொண்டு 10.30 மணி வாக்கில் உறங்கச்செல்வது அவசியம். 

உணவில் கவனம்

அனைவரும் கண்டிப்பாக 500 கிராம் காய்கறிகளை தினமும் எடுத்துக்கொள்ளுங்கள். வைட்டமின், போலிக் அமிலம், இரும்புச்சத்து ஆகிய மூன்றும் முக்கியம். அவை அதிகம் நிறைந்த உணவுகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளுங்கள். இப்போதெல்லாம் நாம் கார்போஹைட்ரேட்டை மட்டும்தான் எடுத்துக்கொண்டு இருக்கிறோம் அல்லது டயட் என்ற பெயரில் சிறுதானிய உணவு மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள். அப்படி அல்லாமல் அனைத்தையும் தேவையான அளவிற்கு எடுத்துக்கொள்ளவேண்டும். தினை, ராகி  போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் பி12 இல்லையென்றால், உடலில் கால்சியம் இருக்காது. தினை வகைகளில் வைட்டமின் பி12 அதிகம் உள்ளது. அதனால், வாரம் ஒருமுறை இதனை எடுத்துக்கொள்ளலாம். கொழுப்புச்சத்து என்றாலே சிலர் பயப்படுகின்றனர். உடலுக்கு நல்ல கொழுப்புச்சத்தும் அவசியம். வேர்க்கடலையில் நார்ச்சத்தும் நல்ல கொழுப்புச் சத்தும் நிறைந்து இருக்கிறது. அதனால், அதனை எடுத்துக்கொள்ளலாம். 

PCOD, PCOS இருப்பவர்கள், மருத்துவரை அணுகி வாழ்க்கை முறையை மாற்றி அமைத்தால் கண்டிப்பாகச் சரிசெய்யலாம். இது சரிசெய்யவே முடியாத பிரச்சினை கிடையாது.  

அந்த ஒரு சந்தேகம்

அதுபோல் பலர் கர்ப்ப காலத்தில் உறவு வைத்துக்கொள்ளலாமா எனக் கேட்கவே சங்கடப்படுகின்றனர். இதுபற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. கர்ப்ப காலத்தில் உறவு என்பது இருவருக்கும் இடையில் விருப்பம் இருந்தால் வைத்துக்கொள்ளலாம். விருப்பம் இல்லாதபட்சத்தில் உடலுறவு வைத்துக்கொள்ள யாரையும் வற்புறுத்தக் கூடாது. சிலநேரங்களில் கணவனுக்காக, விருப்பமே இல்லாமல் சம்மதிக்கும் மனைவிகளும் இருக்கின்றனர். அவர்களுக்கு வலி அதிகமாக இருக்கும். அதனால் அந்த இன்பத்தை அனுபவிக்க முடியாது. சில நேரங்களில் பிரசவ காலத்தில் ஹார்மோன் மாற்றம் காரணமாக  மனைவிக்கு உறவு வைத்துக்கொள்ளத் தோன்றும். ஆனால், கணவன் ஒத்துழைக்க மாட்டார் அல்லது ‘இந்த பிரசவ நேரத்திலும் உனக்கு இது தேவையா’ என்பது போன்ற கேள்விகள் எழலாம். அதனால், இருவரின் விருப்பத்தோடு பிரசவ காலத்தில் உறவு வைத்துக்கொள்ளலாம். அதேநேரத்தில் இதை யாரெல்லாம் செய்யக் கூடாது என்றால், பிரசவ காலத்தில் சிக்கல் அதிகம் உள்ளவர்கள் அதாவது, பனிக்குடத்தில் நீர் குறைவாக இருக்கும்போதும் அதிகமாக இருக்கும்போதும் உறவு கொள்வதைத் தவிர்க்கலாம். கர்ப்பப்பை வாய் சின்னதாக இருக்கும்பட்சத்திலும், இதற்குமுன் நடந்த பிரசவத்தில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தாலும் உறவைத் தவிர்க்க வேண்டும். 

கர்ப்பப்பை வாய் சிறிதாக இருக்கும்போது சில சமயங்களில் குழந்தை வெளியே வந்துவிடும். 24 வாரங்களுக்கு மேல்  ஆகி வெளியே வந்தால்,  இங்குபேட்டரில் வைத்துக் காப்பாற்றலாம். 10 முதல் 12 வாரங்களில் குழந்தை வெளியே வந்துவிட்டால் பிரச்சினை அதிகம். அதனால், இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கும்பட்சத்தில் உறவைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். 

மருத்துவரை அணுகுவது நலம்

அதுபோல், பிரசவ காலத்தில் ஏற்படும் உடல் பருமன் பற்றிப் பலரும் அக்கறை கொள்வதில்லை. அது குறித்த விழிப்புணர்வும் இல்லை. குழந்தை பிறந்ததும் தாயின் பருமன் ஏறினால்தான் குழந்தை நலமாக இருக்கிறது என்று அர்த்தமல்ல. உடல் எடை அதிகமாக இருந்தால் சுகப்பிரசவம் நடக்காது என்றும் சிலர் நினைக்கின்றனர். உடல் எடை அதிகரிக்கும்போது பலருக்கு ரத்த அழுத்தமும், சர்க்கரை அளவும் அதிகரிக்கும். அவற்றைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ளும்வரை, அது மிகப்பெரிய பிரச்சினை இல்லை. சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லாவிட்டால், பிரச்சினை அதிகம். அதனால்தான் மருத்துவர்கள் கர்ப்ப காலத்தில் உடல் பருமனைச் சரியாகப் பராமரிக்கச் சொல்கின்றனர். அதனால், அதனைப் பெரிய விஷயமாகப் பார்த்து பயப்பட வேண்டாம். உங்களுடைய உணவு முறை பழக்கவழக்கங்கள் சரியாக இருந்தால் போதும். உடல் பருமனாக இருந்தாலே சுகப்பிரசவம் ஆகாது என்று கிடையாது. உடல் எடை அதிகமாக இருந்தால் பாதிப்புகளைத் தவிர்க்க உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். அதற்கு மருத்துவரை அணுகி முறையாக ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது.”

தாய்ப்பால் சந்தே கங்கள் குறித்து  அடுத்த இதழில் விளக்குகிறார் டீனா அபிஷேக்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!