day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

மக்கள் இசைபாடுவதே பெருமை! – அனிதா குப்புசாமி

மக்கள் இசைபாடுவதே பெருமை! – அனிதா குப்புசாமி

அனிதா குப்புசாமி! கிராமிய இசையை உலகுக்கு எடுத்துக்காட்டிய பாடகர்களில் முக்கியமானவர். நாட்டுப்புறப்பாடலின் நைட்டிங்கேல் என்றே அவரை அழைக்கலாம். பிறரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற நல் உள்ளம் கொண்டவர் அவர். சமையல் கலையிலும் வல்லவர் அவர். இவ்வாறு அடுக்கிக் கொண்டே செல்லலாம் அனிதா குப்புசாமியின் திறமைகளை.

படிக்கும் காலம் தொட்டு பாட்டு பாடுவதில் வல்லவராக இருந்தாராம் அனிதா குப்புசாமி.

’என்னுடைய பள்ளிப் படிப்பு தொடங்கியது பெங்களூரில்தான். பிறகு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வாழும் என் பாட்டி தாத்தாவுடன் இருப்பேன் என அடம்பிடித்து அங்கேயே என் பள்ளிப் படிப்பையும் முடித்தேன். கோயம்புத்தூரில் உள்ள அவிநாசிலிங்கம் கல்லூரியில் பிஏ இசை முடித்தேன். பிறகு சென்னைப்  பல்கலைக்கழகத்தில் எம்ஏ கர்நாடக இசையைப் பயின்றேன்,’ என தன் தொடக்கக் காலத்தில் மூழ்கிப் போகிறார் அனிதா.

சென்னைப் பல்கலைக்கழகத்தில்தான் தன் எதிர்காலக் காதல் கணவர் புஷ்பவனம் குப்புசாமியை சந்தித்தார் அனிதா. புஷ்பவனம் குப்புசாமியிடம்தான் நாட்டுப்புறப்  பாடலைக் கற்றார் அனிதா.

அனிதா குப்புசாமியின் முதல் கச்சேரி வெள்ளப்பள்ளம் என்னும் கிராமத்தில் லட்சக்கணக்கான மக்களின் நடுவே நடந்தது. அவருடைய முதல் பாடல் கணவர் குப்புசாமி சொல்லிக்கொடுத்த பாடல்.  ’அது மண்ண நம்பி ஏலேலோ ஏலேலோ’ என்ற பாடல்’ எனப் பெருமையுடன் புன்னகைக்கிறார் அனிதா குப்புசாமி.

இந்தியா முழுவதும் புஷ்பவனம் குப்புசாமியுடன் இணைந்து அனிதா பாடிய கச்சேரிகள் மூவாயிரத்திற்கும் அதிகம்.

’சினிமா துறைக்கு நான் சென்றிருந்தால் பத்தோடு பதினொன்றாக இருந்திருப்பேன். மக்களுடைய உணர்வைப் பிரதிபலிக்கும் மக்கள் இசையைத் தேர்ந்தெடுத்து சமூகத்திற்குப் பயன்படும் வகையில் பாடிக் கொண்டிருக்கிறேன் அல்லவா? இதையே நான் சாதனையாக எண்ணுகிறேன். ஏனெனில் என் சமூகத்திலிருந்து பாடுவது, ஊடகத்துறைக்கு வருவது என்பது மிகவும் அரியது.மேலும் சினிமாத் துறையில் பாடுவதற்கு நான் சென்றிருந்தால் ஒரு ஏசி ரூமில் பாடிவிட்டு ஓரளவு பணமும் கிடைத்திருக்கலாம். ஆனால் ஊர் ஊராகச் சென்று மக்கள் இசை பாடுவது கடினம். மேலும் நான் மக்களிசை பாடுவதை மிகவும் விரும்புகிறேன். எனவே நான் அதையே சாதனையாகக் கருதுகிறேன்’ என்று பெருமையாகச் சொல்கிறார் அனிதா.

காதல் திருமணம் செய்துகொண்ட அனிதா குப்புசாமி, வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாக் கொண்டிருந்தார்.

‘நான் சந்தித்த சவால்கள் நிறைய. ஆண்கள் எந்த வேலைக்கும் எளிமையாகச் சென்று விடலாம். ஆனால் பெண்களுக்கு என்று ஒரு சமூக கட்டமைப்பு உள்ளது. குழந்தைகளை வளர்க்க வேண்டும், கவனிக்க வேண்டும் என எத்தனையோ உள்ளது. எனது கர்ப்ப காலங்களில் கூட பயணம் செய்ய வேண்டி இருந்தது. காரணம், அந்த நேரத்தில்தான் மக்கள் எங்களைக் கவனிக்க ஆரம்பித்தார்கள். கச்சேரிகளில் என்னையும் என் கணவரையும் ஒன்றாகவே பார்த்துப் பழகி விட்டார்கள்.மேலும் நான் வாழ்க்கையில் ஜெயித்துக் காண்பிப்பேன் என வீட்டில் சவால் வேறு விட்டிருந்தேன்’ என்று கடந்த காலத்தில் மூழ்கிவிடுகிறார் அனிதா.

இந்தக் காலத்தை விட அந்தக் காலத்தில் பெண்களுக்கு இசைத்துறையில் தனித்துவம் இருந்தது என்கிறார் அவர். கே.பி.சுந்தராம்பாள், சுசீலா, வாணிஜெயராம், சித்ரா போன்றோரின் காலகட்டத்திற்கு பிறகு பெண்களுக்கு இசைத்துறையில் தனித்துவம் குறைந்ததாகவே அவர் நினைக்கிறார்.

ஆண்களுக்கு இணையாகப் பெண்களால் கண்டிப்பாக இசைத் துறையில் சாதிக்க முடியும் என்று உறுதியுடன் கூறுகிறார் அனிதா. ’ஆனால் ஒரு ஆண் (கணவன்) துணை இல்லாமல் இத்துறையில் சாதித்தவர்கள் குறைவே. கணவன் துணையில்லாமல் சாதித்திருக்கிறார்கள் என்றால் குடும்ப வாழ்வில் தகராறு போன்ற பல நெருக்கடிகளை சந்திக்க வேண்டியுள்ளது’ என மனம் திறக்கிறார் அவர்.

’கிராமிய இசை கண்டிப்பாக எல்லை கடந்து செல்ல முடியும். அதற்கு எங்களைப்போன்ற கொள்கைப் பிடிப்பு கொண்டவர்களால் மட்டுமே வழிவகுக்க முடியும். பெரிய ஊடகங்கள் இதுதான் கிராமிய இசை என தவறான பிம்பத்தைக் காட்டுகின்றன. அதனால் நல்ல கிராமிய இசை வெளியே வருவதற்கு சிறிது தாமதம் ஆகின்றது’ என்று புன்னகைக்கிறார் அனிதா.

பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்க்கை பற்றிக் கூறுவதே கிராமிய இசை என்ற புது வரைமுறை கூறுகிறார் அனிதா.  ’சில திரைப்படப் பாடல்கள் folk இசையைத் தொட்டே வருகின்றன. திரைப்படம் என்பது மிகப்பெரிய ஊடகம். அந்தப் பாடல்கள் folk இசையைத் தொட்டு வருகிறது என அவர்கள் கூறும்போது மட்டுமே folk இசை உயிருடன் இருக்கும்’ என அவர் கருதுகிறார்.

இசையில் இன உணர்வு இருக்குமா என்று கேட்டால், ‘இன உணர்வு என்ற வார்த்தைக்கு கீழ்மொழி உணர்வு என்ற வார்த்தையும் வந்துவிடுகிறது. தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தமிழில் பாடுகிறார்கள். அயல் நாட்டில் உள்ளவர்கள் ஆங்கிலத்தில் பாடுகிறார்கள். எனவே எல்லா பாடல்களிலும் மொழி உணர்வு இருப்பதாகவே உணர்கிறேன்,’ என கூறுகிறார் அனிதா குப்புசாமி.

‘மேலும் இன உணர்வு என வரும்போது சிலர் folk பாடல்களில் கம்யூனிசம் கொண்டு பாடுகிறார்கள். அது கம்யூனிசப் பாடல்களாகும். பிறப்பு முதல் ஒப்பாரி வரை பாடுவது, வண்டி கட்டுதல், பண்ணையார் பாடல்கள், கல்வி கற்க வேண்டும் எனப்பாடுவது, வரதட்சணைக் கொடுமைப் பாடல்கள் இது போன்ற அனைத்துமே folk பாடல்களில் சேரும்,’ என்கிறார் அவர்.

குரல் வளத்தைக் காப்பதற்கு அமைதியாக இருக்கவேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார் அனிதா. அதீத குளிர்ச்சியாகவும் உண்ணக்கூடாது. சூடாகவும் உண்ணக் கூடாது. குரல் வளத்தைக் காப்பதற்கு அன்னாசிப்பழம், கோழி இவற்றைத் தவிர்ப்பது நல்லது என டிப்ஸ் தருகிறார் அனிதா குப்புசாமி.  ’கல்லூரிக் காலங்களில் ரமணிசந்திரன் நாவல்கள், லக்ஷ்மி நாவல்கள், ராஜேஷ்குமார் நாவல்கள் ஆகியவற்றைப் பாட புத்தகங்களுக்கு இடையே மறைத்து  வைத்துப் படித்த அனுபவங்கள் நிறைய உண்டு’என தன் கல்லூரிக் காலங்களைப் கண்முன்னே காட்டுகிறார் அனிதா குப்புசாமி.

’பல பெண்கள் போராடி நமக்காக சுதந்திரத்தைப் பெற்றுத் தந்து இருக்கிறார்கள். நம் சுதந்திரத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். பெண்கள் வேலைக்குச் செல்லலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் எல்லை உண்டு.  அந்த எல்லையை மீறாமல் இருப்பது நல்லது. மேலும் சமூக வலைதளங்களை சரியான முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும். தவறான வழியில் பயன்படுத்தி நம் வாழ்க்கையை நாமே சீர்குலைத்துக் கொள்ளக்கூடாது’ என்று அறிவுரை தருகிறார் அனிதா.

’பெண்கள் மறுத்தும் கூட சில ஆண்கள் தொந்தரவு செய்கிறார்கள் என்றால் முதலில் அப்பெண்கள் தைரியமாகப் பெற்றோரி டம் கூறவேண்டும். பெற்றோரின் உதவியுடன் காவல் நிலையத்தை அணுகலாம். மேலும் பெண்கள் அண்ணா என்ற சகோதரத்துவத்தை ஆயுதம் ஆக்கலாம்’ என உத்வேகம் கொடுக்கிறார் அனிதா குப்புசாமி

’நாங்கள் எடுத்துக்கொண்ட பாடல்களுக்கு நாங்கள் notation கொடுத்திருக்கிறோம். அந்தப் பதிவுகள் நூலகத்திற்கு வரவேண்டும். அப்பொழுதுதான் அடுத்த சந்ததிகளுக்கும் போய் சேரும். இதுவே எங்களது எதிர்காலக் கனவாகும். மேலும் folk இசை என்பது வாழ்க்கையைப் பிரதிபலிப்பதால் எதிர்காலக் சந்ததிகள் இப்படிதான் வாழ்ந்தார்கள் எனத் அறியவும் முடியும்’ என மெய்சிலிர்க்க வைக்கிறார் அனிதா.

‘இசைத் துறையில் சாதித்தது என ஒரு முற்றுப்புள்ளி வைக்க இயலாது. தன்னிறைவு என்பது வராது. பொதுவாக எந்தக் கலைஞர்களுக்கும் தன்னிறைவு என்பது வரக்கூடாது. அப்போதுதான் நிறைய சாதிக்க முடியும்’ என்கிறார் அனிதா குப்புசாமி.

மண் மணக்கும் நம் கிராமிய இசையை தரணிக்கு எடுத்துக்காட்டிய அனிதா குப்புசாமியை தமிழும் தமிழ்கூறு நல்லுலகமும் என்றும் கொண்டாடும்!

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!