day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

சிறுகதை குறுங்கவிதை – சாரா

சிறுகதை குறுங்கவிதை – சாரா

ரங்கநாதன் தெரு (தியாகராய நகர்) வழக்கம் போல் கூட்டம் நிரம்பி வழிந்தது. இவ்வளவுக்கும் பண்டிகை காலம் கூட அல்ல. மேம்பாலம் கட்டியதும் போக்குவரத்து எளிதாகி விடும் என்பதெல்லாம் எவ்வளவு அபத்தமான கற்பனை. மக்கள் கூட்டத்தில் மேம்பாலம் கூட அமுங்கிப் போய்விடும் போலிருந்தது. எங்கிருந்து மக்கள் சாரை சாரையாக வருகிறார்களோ என்றிருந்தது ஆதிராவுக்கு. ஜன சந்தடிக்கு நடுவில் தன் ஐ-20 காரை இன்ச் இன்ச்சாக நகர்த்தி உஸ்மான் சாலையின் பக்கவாட்டில் கிடைத்த இடத்தில் பார்க்கிங் செய்துவிட்டு வந்தாள். மீண்டும் ஜன சந்தடிக்குள் நுழைந்தாள்.

அம்மாவுக்குப் பிடித்த ஒவ்வொன்றையும் முதலிலேயே மொபைலில் லிஸ்ட் போட்டு வைத்திருந்தாள். அதன்படி ஆரெம்கேவியில் புடவை, லலிதாவில் ஒரு கம்மல், ப்ளாட்பாரக் கடையில் கண்ணாடி வளையல்கள், வீட்டுக்குத் தேவையான ஜன்னல் கர்ட்டன்ஸ், கால்மிதி எனப் பார்த்துப் பார்த்து வாங்கினாள்.

மீண்டும் ஐ-20 எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தபோது மணி ஒன்பது. மீனா கோபமாகக் காத்திருந்தாள். ஆதிரா உள்ளே நுழைந்ததுமே அடுப்பை பற்ற வைத்து தோசையை ஊற்றினாள் மீனா. ஆதிரா முகம் கழுவி நைட்டிக்கு மாறி டேபிளில் வந்து அமர்ந்தாள். மீனா அவளுக்குத் தோசையைத் தட்டில் வைத்து விட்டு டேபிள் மேல் கும்பலாக இருந்த கவர்களை லேசாகத் திறக்க முயல, ஆதிரா அவளை முறைத்துப் பார்க்க, கையை வெடுக்கென்று பின்னிழுத்துக் கொண்டு அடுப்பங்கறைக்குள் நுழைந்தாள் மீனா.

ஆதிரா சிரிப்பை மறைத்துக் கொண்டே தோசையை சாப்பிட, அடுக்களையில் சில்வர் பாத்திரங்களை வேண்டுமென்றே டங் டங்கென்று வைத்து தன் கோபத்தை வெளிப்படுத்தினாள் மீனா. ‘எனக்குன்னு வாங்கிட்டு வந்திருக்கா. ஆனா நான் தொடக்கூடாதாக்கும்’ என்று புலம்பியவளைக் கையைப்  பிடித்து இழுத்து அணைத்தாள் ஆதிரா. அம்மாவை இறுக்கக் கட்டிக் கொண்டாள். நெற்றியில் முத்தமிட்டாள். அம்மாவின் கண்களைக் கைகளால் மூடி உள் அறைக்கு அழைத்துச் சென்றாள். கட்டிலில் அமர வைத்து கண்களை மூடியே இருக்கும்படி கட்டளையிட்டாள்.

மீனாவுக்கு சிரிப்பு வந்தது. இருந்தாலும் கண்களை மூடியபடி காத்திருந்தாள். ஆதிரா தான் வாங்கி வந்த அனைத்துப்  பொருட்களையும் அம்மாவைச்  சுற்றி அடுக்கி வைத்து விட்டு மீனாவைக் கண்களை திறக்கும்படி கூறினாள். மீனா மெதுவாக கண்களைத் திறக்க, தன்னைச் சுற்றி இருக்கும் குட்டி ரங்கநாதன் தெருவைப் பார்த்து மெய்மறந்தாள்.

அங்கிருந்த ஒவ்வொரு பொருளும் மீனா வாழ்வில் ஒவ்வொரு தருணத்தில் வாங்க ஆசைப்பட்டதாகக் கூறி பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என வாங்கவே முடியாமல் போன பொருட்கள். மீனாவுக்கு கண்ணீர் முட்டியது. மகளை அணைத்து முத்தமிட்டாள்.

‘என்னடி ஒரு நாளிலேயே மொத்த சம்பளத்தையும் காலி பண்ணிட்டியா? ஏண்டி இப்படி பண்ணுறே? இப்போ நான் இந்த மாச செலவுக்குலாம் என்ன பண்ணுவேன்?’ என்று சிணுங்கியவளை, ‘போன மாசம் வரைக்கும் துரையம்மா எப்படி இருந்தாங்களாம்? அப்படித்தான் அட்ஜஸ்ட் பண்ணு’ என்று கேஷுவலாக சொல்லி விட்டுத் தன்னறைக்குள் நுழைந்தாள் ஆதிரா.

மீனா அவள் வாங்கிக் கொடுத்த ஒவ்வொரு பொருளையும் எடுத்து எடுத்துப் பார்த்துப் பூரித்துப் போனாள். எத்தனை ஞாபக சக்தி? எப்போதோ விளையாட்டாகக் கேட்ட ஒவ்வொன்றையும் மறக்காமல் வாங்கி வந்திருக்கிறாளே என்று ஆச்சரியப்பட்டாள். இந்தப் பெண் இத்தனை வளர்ந்து விட்டாளா என்று மனசுக்குள் அதிசயித்தாள்

மீனா இளவயதிலேயே விதவையானவள். ஒரே மகள் ஆதிராவோடு சென்னை மாதிரியான பெருநகரில் தன் சொந்தக் காலில் நின்று வைராக்கியத்தோடு வளர்த்தவள்.  சொல்லவியலா எத்தனையோ அல்லல்பட்டுப் போராடி இன்று இத்தனை உயரத்துக்கு அமர்த்தி இருக்கிறாள் என்றால், அது சாதாரண விசயமல்ல.

அன்று சனிக்கிழமை மாலை, ஆதிரா மீனாவை அழைத்துக் கொண்டு கடைவீதிக்குச்  சென்றிருந்தாள். ‘ஏண்டி உன் வயசு பொண்ணுங்கல்லாம் பசங்க கூட, இல்ல பொண்ணுங்க கூட கும்பல் கும்பலா சேர்ந்து சுத்திட்டு இருக்காங்க. நீ ஏண்டி என்னைத் தோள்ல போட்டு அலையுறே?’

‘இப்ப என்ன? நான் கிளம்பிட்டா, நீ தனியா ஜாலியா சுத்தலாம்னு ப்ளானிங்கா? உனக்கு நானே ஜாஸ்திதான் வாம்மா சும்மா.’

தன் மகள் தன்மீது அலாதி அன்போடு பைத்தியமாக இருப்பது மீனாவுக்குப் பெருமிதமாக இருந்தாலும் இவள் கல்யாணம் பண்ணிச் சென்று விட்டால், தான் என்ன ஆவோமோ  என்ற பயம் வராமல் இல்லை. அதே சமயம் தானே அவளுடைய எதிர்காலத்துக்கு எந்த விதமான தடையாக இருந்து விடக் கூடாதே என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தாள்.

‘ஏய் மீனா’ என்ற குரல் இருவரையும் நிறுத்தியது.

ஆதிரா குழப்பமாகப் பார்க்க, மீனா கொஞ்சம் யோசித்து விட்டு ’நீங்க பிருந்தாதானே’ என்று சொன்னவுடன் இருவரும் பரஸ்பரம் பழகிக் கொண்டனர். மீனா பிருந்தாவை கைப் பிடித்தபடியே அழைத்துச் சென்று அருகில் இருந்த காபி ஷாப்பில் அமர்ந்து கொண்டாள். இருவரும் தங்கள் பழைய கதைகளைப் பேச, ஆதிரா சிரித்தபடி மூவருக்கும் சிற்றுண்டி ஆர்டர் செய்தாள்.

வெகு நேரம் இருவரும் பேசிக் கொண்டே சிற்றுண்டியை உண்டு முடித்தனர். ஆதிரா கைகழுவும் இடத்துக்குச் சென்று கைகழுவி விட்டு கண்ணாடியில் முகம் பார்த்தபோது, எதேச்சையாக மீனா தோழி பிருந்தாவிடம் அவசரமாக மறுத்து சைகையால் தன்னைக் காட்டித் தலையசைத்ததைக் கவனித்தாள். ஆதிராவுக்கு சட்டென்று ஒரு குழப்பம் ஒட்டிக் கொண்டது. ‘அம்மா தன்னிடமிருந்து எதையோ மறைக்கிறாளா? யார் இந்தப் பெண்? என்ன நடக்கிறது இவர்களுக்குள்?’

ஆதிராவும் மீனாவும் வீட்டுக்கு வந்து விட்டனர். மீனா தான் இயல்பாக இருப்பதாக காட்டிக் கொள்ள எத்தனையோ மெனக்கெட்டாள். ஆனால் அவளுடைய ஒவ்வொரு மாற்றத்தையும் ஆதிரா துல்லியமாக அறிந்தாள்.

அடுத்த நாள் காலை ஆதிரா பிருந்தா வீட்டின் அழைப்பு மணியை அழைத்தாள். இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர். ஆதிராவின் பிடிவாதம் பிருந்தாவை வாய் திறக்க வைத்தது.

அப்போது ஆதிராவுக்கு ஐந்து வயது.

மீனா இளம் விதவை. காதல் திருமணம். விபத்தில் உயிரிழந்த கணவன். காதல் திருமணத்தால் கைவிடப்பட்ட கோபத்தில் பெற்றோர் வீட்டுக்கு மறுபடி செல்லக் கூடாதென்ற வைராக்கியம். தன் ஐந்து வயது மகள் ஆதிராவோடு சென்னையில் குடியமர்ந்து வேலைக்கு சேர்கிறாள். மீனா அத்தனை அழகானவள். எடுப்பாக உடை அணிபவள். நேர்த்தியான பழகும் முறையால் எளிதில் சட்டென்று யாருக்கும் நெருக்கமாகி விடுவாள்.

மீனாவைப் பார்த்தவுடனே எல்லோருக்கும் பிடித்துப் போய்விடும். நிறைய பேர் அவளிடம் காதல் அப்ளிகேஷனை நீட்டியுள்ளனர். புன்னகைத்தபடி மறுத்து விடுவாள். ஒரு சிலர் அம்மா அப்பா சகிதம் பெண் கேட்டு வந்தும் விடுவர். பிறகு அவள் விதவை என்று தெரிந்ததும் குசலம் விசாரித்து விட்டுத் திரும்பி விடுவார்கள். இன்னும் சிலர் பரவாயில்லை என்று சொன்னாலும் ஆதிராவைப் பார்த்த பின் பிறகு சொல்கிறோம் என்று சென்று விடுவார்கள். மீனா இதற்கெல்லாம் சகஜமாகப் பழகி இருந்தாள்

அப்போதுதான் அவன் வந்தான். சூறாவளியாக, புயலாக, தென்றலாக எப்படி என்று விவரிக்க முடியாத ஒருவனாக அலுவலகத்தில் வந்து சேர்ந்தான்.

அலுவலகம் முழுக்க அவனைப் பற்றித்தான் பேச்சாக இருந்தது. யங், சார்மிங், க்யூட் என்றெல்லாம் பெண்கள் வழிந்து கொண்டிருந்தனர். மீனாவுக்கு  அவனை யாரென்று அறியும் ஆவல் இருந்தாலும் தன் நிலை கருதி இது தனக்குத் தேவையானதல்ல வேலையைப் பார்ப்போம் என்று இருந்துவிட்டாள். அன்று அலுவலகம் முடியும் முன் அனைவரையும் அழைத்து அவனை ஃபார்மலிட்டிக்காக அறிமுகம் செய்து வைத்தார் உயர் அதிகாரி. மீனா அவனை ஒரு தடவை ஏறெடுத்துப் பார்த்து விட்டு குனிந்து கொண்டாள்.

அழகாகத்தான் இருக்கிறான். எப்படியும் மற்ற வயசுப் பெண்கள் இவனைத் துரத்துவார்கள். இவன் ஓடுவான். அப்படி இப்படின்னு இவனால் அலுவலகத்தில் கொஞ்சம் நேரம் போகுமென்று சிரித்துக் கொண்டாள்.

வீட்டுக்குச் சென்று ஆதிராவுக்கு உணவு சமைத்துக் கொண்டிருந்தபோது ‘ஆதிரா’ என்னம்மா இது பேக்ல’ எனக் கேட்க, மீனா வந்து ஹேண்ட் பேக்கில் பார்த்தபோது ரெட் ரோஸ் இணைத்த கடிதம் ஒன்று இருந்ததைக் கண்டாள். ஆதிராவை சமாதானம் செய்து அனுப்பி விட்டு அதைத் திறந்து படித்தாள் ‘அன்பே. உன் அழகு என்னை இம்சிக்கின்றது. இந்த அலுவலகத்தில் உன்னைப் போன்ற அழகை யாரும் பார்த்திருக்க முடியாது. நீ அப்படி ஒரு அழகு. உனக்காகத்தான் நான் இங்கே வந்து வேலையில் சேர்ந்தேன் என்றால் நம்பவா போகிறாய். இன்னும் எத்தனை காலம் ஆனாலும் சரி. உனக்காகவே காத்திருப்பேன் அன்பே’ என்றெழுதியிருக்க மீனாவால் அதை நம்பவே முடியவில்லை.

அன்று முழுதும் அவளால் தூங்கவும் முடியவில்லை. எத்தனை தடுத்தாலும் அவன் முகம் அவளை இம்சித்துக் கொண்டே இருந்தது. தன்னை எப்படித் தெரியும்? ஒரு வேளை வீட்டில் அப்பா ஏற்பாடு செய்திருப்பாரோ அல்லது பழைய அலுவலகத்தில், கல்லூரியில் கூட இந்த முகத்தைப் பார்த்ததில்லையே என இரவு முழுக்க அவனுக்கு எப்படி தன்னைத் தெரியுமென்று நினைத்து நினைத்தே உறங்காமல் கிடந்தாள்.

ஆதிராவைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு அலுவலகத்துக்குத் தயாரானாள். தன்னை மறந்து கூட தனித்துவமாகத் தயாராகி விடக் கூடாதென ரொம்ப சாதாரணமாக தயார் செய்து கொண்டாள். ஏதோ ஆர்வக் கோளாறில் எழுதி விட்டாய், பரவாயில்லை, இனி இப்படி செய்யாதே என்று அறிவுரை சொல்லி வேலையைப் பார்க்க கவனம் செலுத்த வேண்டும் என முடிவு செய்தாள்.

நெஞ்சம் படபடத்தது. ஒவ்வொருவராக அலுவலகத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தனர். வழக்கத்துக்கு மாறாக எல்லோரும் கூடுதல் அலங்காரத்தில் வந்திருந்தனர். மணி பத்தாயிற்று. இன்னும் அவன் வரவில்லை. இதற்கு மேல் அவனிடம் சொல்ல சூழல் இருக்காது. சாயங்காலம் சொல்லிக் கொள்ளலாம் என வேலைகளில் மூழ்கினாள் மீனா.

மதியம் போல் தலை வலித்தது. டீ குடித்தால் தேவலை என்று தோன்ற கேன்டினுக்கு சென்றாள் மீனா. கேன்டின் முழுக்க கூச்சலும் கும்பலுமாக இருந்தது. பெண்கள் கூட்டம் மொய்த்து இருந்தது. மீனா மெதுவாக அதை நெருங்க, அங்கே நடுவில் அந்த அழகனை அமர வைத்து எல்லா பெண்களும் அவனைத் திட்டுவதும் கத்துவதுமாக இருந்தனர். ஒரு சில பெண்கள் அழுது கண்மை வழிய டிஷ்யூ பேப்பரால் முகத்தை துடைத்துக் கொண்டிருந்தனர். மீனா டீ வாங்கிக் கொண்டு அந்த ஹாலில் இருந்த ஓரமான இருக்கையில் அமர்ந்து கவனித்தாள்.

கூட்டம் மெதுவாக விலக அவன் மீனாவைக் கவனித்தான். மீனா சட்டென்று பார்வையை வெளிப்பக்கமாகத் திருப்பி வெயிலை ரசிப்பதாய் மாற்றிக் கொள்ள,  அந்த அழகன் ‘அதோ அவங்களுக்குக் கூடத்தான் அனுப்பினேன். அவங்க எவ்ளோ அமைதியா இருக்காங்க. உங்களை மாதிரி வயலன்ஸ்ல இறங்கலியே’ என்று கூற, அந்தப் பெண்களின் பார்வை மீனா பக்கம் திரும்பியது. மீனாவுக்கு சட்டென்று சங்கடமாகிப் போனது. அவள் அவனை முறைத்தபடி எழுந்து சென்று விட்டாள்.

அவன் பெயர் ரிஷி. இயல்பாகவே குறும்புக்காரன். அழகான குறும்புக்காரன்.  புத்திசாலி. திறமையானவன். அதனாலேயே அந்தப் பெண்கள் அவனுடைய தவறை அன்றே மன்னித்தனர். ஆனால் மீனாவுக்கு அந்த அவமானத்தை மறக்க முடியவில்லை. ரிஷி தான் கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் மன்னிப்பு கேட்டு நட்புக் கரத்தை நீட்டினான். நாட்கள் நகர்ந்தன.

மீனாவிற்கு ரிஷியைப் பிடித்துப் போனது. அவன் நண்பனா அதற்கும் மேலா என்பது அவளுக்கு விளங்கவில்லை. அதிக ஆசைப்படவும் அவள் பயந்தாள். கடைசி வரை அவன் நட்பு கிடைத்தாலே போதும் என்று நினைத்தாள். ஆனால் ரிஷிக்கு அவள் வாழ்க்கை முழுதும் கூட வர விரும்பினான். தன் ஆசையை அவளிடம் தெரிவிக்க, மீனா பதில் கூறாமல் நாட்களைத் தள்ளிப் போட்டாள்.

மீனாவுக்கு ஆதிராவை ரிஷி ஏற்றுக் கொள்வானா என்ற கேள்வி எழுந்தது. ரிஷியை வீட்டுக்கு அழைத்தாள். ஆதிராவை அறிமுகம் செய்தாள். ரிஷியின் முகத்தில் வந்த மாற்றத்தை அறியாமல் இல்லை. அவ்வளவுதான் இந்தக் காதல் என்று தன் மனதை தேற்றிக் கொண்டாள்.

அன்று இரவு ரிஷியிடமிருந்து ஒரு வீடியோ வந்தது. அதில் அஜித்குமார் த்ரிஷாவிடம் தான் கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், த்ரிஷாவின் குழந்தைதான் தனக்கும் குழந்தை என்றும், அவளுக்காக ஸ்கூல், காலேஜ், வருங்காலத்தில் வீடு கட்டுவது என காதல் வழிய கொஞ்சிக் கொண்டிருந்தார். மீனாவுக்கு அவனின் சம்மதம் புரிந்தது. அழவும் சிரிக்கவும் தோன்றியது.

இன்று ரிஷியிடம் தன் சம்மதத்தை சொல்லிவிட வேண்டுமென முடிவு செய்தாள். ஆனால் அன்று அவளுக்கு அவசர வேலை கொடுக்கப்பட, அலுவலகத்திலிருந்து கிளம்பவே நேரமாகும் என்றானது.

ரிஷி மீனா வீட்டு வாசலில் காத்திருப்பதாகத் தகவல் அனுப்பியிருந்தான். மீனா அலுவலகத்திலிருந்து கேப்-ல் கிளம்பினாள். மனசு முழுக்க உற்சாகம் பொங்கி வழிந்தது. கேப் ட்ரைவர் அன்றைக்கென்று காதல் பாடலாக ஒலிக்க வைக்க சாலையெங்கும் பூக்கள் பூத்தாற்போல புன்னகைத்துக் கொண்டே வந்தாள் மீனா. அபார்ட்மெண்ட் நெருங்கியது. லிப்ட்டில் ஏறி தன் ப்ளாட் இருக்கும் தளத்துக்கு கதவைத் திறந்தபோது அவள் கண்ட காட்சி பேரதிர்ச்சியாய் உச்சந்தலையில் இறங்கியது.

ரிஷியை அக்கம்பக்கத்து வீட்டினர் அடித்து உதைக்க அவர்களிடம் பதில் பேச திராணியில்லாதவனாய் நைந்த கோழியாய் சிக்கிக் கிடந்தான். செக்யூரிட்டிகள் அவனை ஏறத்தாழ இழுத்துச் சென்றனர். மீனாவின் கையில் மயக்கமான ஆதிராவைத் தர மீனா ஆதிராவைப் பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போனாள். மீனாவால் என்ன ஏது என்று கேட்பதற்குள் எல்லாம் முடிந்து போனது. ரிஷி காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டான்.

ஆதிரா என்னும் 5 வயதுக் குழந்தையிடம் அத்து மீறிய.. என்று தலைப்புச் செய்தியாகிப் போனான்.

ஆதிராவுக்கு என்ன நடந்தது என்று சொல்லத் தெரியவில்லை. ரிஷி அப்படி அல்ல என்பதை உறுதியாக நம்பினாள். ஆனால் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. ஒரு வாரத்துக்குப் பின் ரிஷியிடமிருந்து ஒரு ஆடியோ வாட்சாப்பில் வந்திருந்தது.

‘உனக்காகக் காத்திட்டு இருந்தேன் மீனா. நேரமானதில் மேலே போய் பாப்பாகிட்ட பேசிட்டிருக்கலாம்னு வீட்டுக்குப் போனேன். அங்கே பாப்பா பசிக்குதுன்னு சொன்னா. அவளுக்காக ஹார்லிக்ஸ் கலக்கி கொண்டு வந்து கொடுத்தேன். அவள் என்னை மிரட்சியோடவே பார்த்துட்டு இருந்தா. நான் இன்னும் அவளுக்கு அப்பாவா பழகலன்னு புரிஞ்சுக்கிட்டேன். அவ பயத்தோடவே வாங்கினா மீனா. அப்போ அது அவ ட்ரெஸ்ல கொட்டிடுச்சு. பாப்பா சூடு தாங்காம அழுதா. நான் அந்த ட்ரெஸ் இருந்தா இன்னும் அவளுக்கு சுடும்னு ரிமூவ் பண்ணனும்னு அதை கழட்ட பார்த்தேன். அவ சூடு தாங்காம அழுததும் நான் ட்ரெஸ் ரிமூவ் பண்றதையும் பார்த்துட்டு பக்கத்து வீட்டுக்காரங்க தப்பா முடிவு பண்ணிட்டாங்க. எல்லாரும் கும்பலா வந்து அடிக்க ஆரம்பிச்சதும் ஆதி பாப்பா மயக்கமாயிட்டா. நான் அடிவாங்குனதை விட குழந்தை பயந்துருக்குறாளேன்னு தான் வலிச்சது மீனா. நல்லவேளையா உன்ன அங்க பார்த்தேன். என் குழந்தைக்கு நான் இப்படி அறிமுகம் ஆயிருக்கக் கூடாது. அவள் மறக்க நினைச்சாலும் சமூகம் இதை மறக்க விடாது. நான் போறேன் கண்காணாத இடத்துக்கு.

என் மனசுல நீயும் என் மக ஆதிராவும் எப்பவும் இருப்பீங்க. உன்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேன் மீனா. என்னை மன்னிச்சிடு, பட் ஸ்டில் ஐ லவ் யூ மீனா.

மீனாவுக்குத் தலை சுத்தியது. ரிஷி மேல் தவறில்லை என்ற அவளுடைய நம்பிக்கை பொய்க்கவில்லை. ஆனால் ஆதிராவுக்கு சமூகத்தால் ரிஷி மேல் ஏற்படுத்தப்பட்டுள்ள பயத்தைப் போக்க அவளுக்குத் தெரியவில்லை. வாசல் வரை வந்த உறவு அப்படியே போனதை நினைத்து தனக்குள்ளேயே காதலை மறைத்துக் கொண்டு ஆதிராவுக்காக என்று வாழ்க்கையை இறுக்கமாக்கிக் கொண்டாள் மீனா.

பிருந்தா அனைத்தையும் சொல்லி முடித்தாள். மீனாவோடு பணியாற்றியதில் அவள் அனைத்தையும் அறிந்து வைத்திருந்தாள்.

ஆதிரா பிருந்தாவிடம் நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினாள். ‘என்ன செய்யப் போறே ஆதிரா’ என்றாள் பிருந்தா

‘அப்பாவைத் தேடிக் கொண்டு வரப் போறேன் அம்மாவுக்கு கிஃப்ட் குடுக்க’ என்றாள் ஆதிரா.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!