day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

துணிவு இருந்தால் போலீஸ் ஆகலாம்!

துணிவு இருந்தால் போலீஸ் ஆகலாம்!

சமூகம் எவ்வளவோ முன்னேறிவிட்ட நிலையிலும்கூடச் சில வேலைகள் ஆண்கள் மட்டுமே செய்யக்கூடியவை என்றும் சில பணிகளுக்குப் பெண்கள் பொருந்த மாட்டார்கள் என்றும் சிலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரையிலான ஆசிரியப் பணி, வங்கிப் பணி போன்றவையே பெண்களுக்குப் பாதுகாப்பு என்றும் பலர் பிற்போக்குத்தனமாக நினைக்கிறார்கள். இப்படியொரு சூழலில் பெண்கள் பல்வேறு தடைகளைத் தாண்டி, காவல்துறையைத் தேர்ந்தெடுப்பதே சவாலானதாக இருக்கிறது. ஆனால், காவல்துறைப் பணியில் சேர்ந்ததோடு மட்டுமல்லாமல், மாநில அளவிலான விருதையும் பெற்றிருக்கிறார் காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி.
சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றும் மகுடீஸ்வரி, காவல்துறையினருக்கான காந்தியடிகள் விருதை முதல்வர் கையால் பெற்றிருக்கிறார். சட்ட விரோதமான மது விற்பனையைத் தடுக்கும் பணியில் சிறப்பாகச் செயல்படும் காவல்துறையினருக்கு வழங்கப்படுவதுதான் காந்தியடிகள் விருது. அந்த விருதைத்தான் மகுடீஸ்வரி பெற்று, பெண்ணினத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்.
காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்கிற லட்சியமெல்லாம் சிறு வயதில் தனக்கு இருந்ததில்லை என்கிறார் மகுடீஸ்வரி. கல்லூரித் தோழிகள் பலர் காவல்துறை பணிக்கு விண்ணப்பிப்பதைப் பார்த்துத் தானும் விண்ணப்பித்தார். தோழிகளைப் பார்த்து விண்ணப்பித்தாலும், ‘செய்வன திருந்தச் செய்’ என்று அவருடைய அண்ணன் சொன்ன வார்த்தைகள் அவரது காதுக்குள் எதிரொலித்தபடி இருந்தன. அதனால், நுழைவுத்தேர்வுக்குத் தயாரானார். விளையாட்டில் சிறு வயது முதலே ஆர்வம் என்பதால் உடல் தகுதியை மேம்படுத்திக்கொள்ளும் பயிற்சிகளில் ஈடுபட்டார். இவ்வளவு உழைப்பும் வீணாகவில்லை. தேர்வில் வெற்றிபெற்றார் மகுடீஸ்வரி. ஆரம்பத்தில் காவல்துறைப் பணிக்கான பயிற்சிகள் மிகக் கடினமாக இருந்ததால் சோர்ந்துபோனார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அவரையும் அறியாமல் பயிற்சி மீது ஈடுபாடு ஏற்பட்டு, மிக விருப்பத்துடன் பணியில் சேர்ந்தார். சமூகத்துக்காகப் பணியாற்றுகிற சேவைதான் காவல்துறைப் பணி என்று புரிந்துகொண்ட பிறகு தன் பணிமீதான காதல் அதிகரித்ததாக மகுடீஸ்வரி சொல்கிறார்.
மக்களுடன் நேரடியாகத் தொடர்புடைய துறையில் பணியாற்றுவதே சவாலானதுதான் என்கிறார் மகுடீஸ்வரி. “எந்தக் குற்றம் நடந்தாலும் பாதிக்கப்பட்டவர், குற்றவாளி ஆகிய இரண்டு தரப்பையுமே நாங்கள் அணுக வேண்டும். இருவரிடமும் வெவ்வேறு முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சினைகளோடுதான் எங்களுக்கு விடியும். அனைத்தையும் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். கோவிட் 19 பரவலின் ஆரம்ப கட்டத்தில் நாங்கள்தான் களத்தில் இருந்தோம். நோய் குறித்த விழிப்புணர்வு இல்லாத அந்த நாட்களில் ஒவ்வொரு நாளும் அச்சத்துடன்தான் எங்களுக்குக் கழிந்தது. குடும்பத்தினர் மிகவும் கவலைப்பட்டனர். ஆனால், அதற்காகப் பிற துறையைச் சேர்ந்தவர்களைப் போல வீட்டிலேயே முடங்கிக்கிடக்க முடியாதே. துணிச்சலுடன் களத்தில் நின்றோம்” என்கிறார் பெருமிதத்துடன்.
பெண்களும் குழந்தை களும் ஆண் காவலர்களைவிடத் தங்களிடம் மிக எளிதாக அணுக முடிவது வரவேற்கத்தக்கது என்கிறார் அவர். “அவர்களால் எங்களிடம் மனம்விட்டு அனைத்தையும் சொல்ல முடிகிறது. அதைவைத்து அவர்களின் சிக்கலுக்குத் தீர்வுகாண முடிவது இந்தத் துறையில் மைல்கல் என்றே சொல்லலாம்” என்கிறார்.
முதல்வர் கையால் விருது பெற்றது மறக்க முடியாத தருணம் என்று சொல்லும் மகுடீஸ்வரி, அதைத் தன் வாழ்நாள் சாதனை என்று குறிப்பிடுகிறார். “இதுபோன்ற விருதுகள்தான் நாங்கள் செய்கிற பணிக்குக் கிடைக்கிற அங்கீகாரம். தமிழகம் முழுவதுமிருந்து ஒரு சிலருக்குத்தான் இந்த விருது வழங்கப்பட்டது. அவர்களில் நானும் ஒருத்தி என்பது பெருமையாக இருக்கிறது. இந்த விருதை நான் பெற துணைநின்ற என் மூத்த அதிகாரிகளுக்கும் இப்படியொரு அங்கீகாரத்தை வழங்கிய அரசு அதிகாரிகளுக்கும் நன்றி. இன்னும் நிறைய ஓட வேண்டும், சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்தை இந்த விருது தந்திருக்கிறது” என்று சிரிக்கிறார் மகுடீஸ்வரி.
காவல்துறையில் பெண்கள் சேர்வதிலும் தொடர்ந்து பணியில் நீடித்திருக்கவும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என்கிறார் அவர். “குறிப்பாகப் பெண்களுக்குத் திருமணத்துக்குப் பிறகு புகுந்த வீட்டினரின் ஒத்துழைப்பும் ஆதரவும் இருந்தால் இந்தத் துறையில் பிரகாசிக்கலாம். சாஃப்ட்வேர் இன் ஜினீயரான என் கணவர் எனக்கு எல்லா வகையிலும் துணையாக இருக்கிறார். காவல்துறையில் பணியாற்றும் பெண்களின் கணவரும் குடும்பத்தினரும் இந்தப் பணியில் இருக்கிற சவால்களைப் புரிந்துகொண்டு அந்தப் பெண்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். இது மற்ற பணிகளைப் போல எட்டு மணி நேரத்தில் முடிந்துவிடுகிற பணியல்ல. கால நேரம் பார்க்காமல் ஓட வேண்டும். நள்ளிரவு என்றாலும் களத்துக்குச் செல்ல வேண்டும். சரியான திட்டமிடலும் குடும்பத்தின் ஒத்துழைப்பும் இருந்தால் எந்தத் துறையிலும் பெண்கள் வெற்றிபெறுவார்கள்” என்று சொல்லும் மகுடீஸ்வரி, காவல்துறையும் பெண்களுக்கு உகந்த துறைதான் என்கிறார்.
“பெண்களுக்குக் காவல்துறை சரிப்பட்டு வராது என்று பழைய பஞ்சாங்கத்தைச் சிலர் பாடலாம். ஆனால், சாதிக்கத் துடிக்கிற பெண்களை இந்தத் துறை கைநீட்டி வரவேற்கிறது. குற்றங்களைத் தடுப்பதிலும் மக்கள் நலனில் பங்காற்றுவதிலும் விருப்பமுள்ள பெண்கள் தயங்காமல் இந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கலாம். நாள் முழுக்க ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே வேலையைச் செய்துகொண்டிருப்பதை விரும்பாத பெண்களும் சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் நிறைந்த பெண்களும் இந்தத் துறையில் பணியாற்றலாம். காவல்துறை அவர்களை அன்புடன் அழைக்கிறது” என்று புன்னகையோடு விடைபெறுகிறார் மகுடீஸ்வரி!

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!