day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

கேள்விக்குள் பதில்…

கேள்விக்குள் பதில்…

ரீங்காரமிட்டுக் கொண்டேதான் இருக்கின்றன ஆம், இன்றும் நம் காதுகளில் நம் கவிஞர்களின் வார்த்தைகள். ‘ஆணுக்குப் பெண் நிகர் எனக் கொள்’ என்றார் புரட்சிக் கவி பாரதியார்.‘மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’ என்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. இவ்வரிகள் அனைத்தும் உண்மையாகத்தான் தோன்றுகின்றன. கல்பனா சாவ்லா, ரோஷினி சர்மா, அன்னை தெரசா, அஞ்சலி குப்தா, அருணிமா சின்கா போன்ற சாதனைப் பெண்களைக் காணும்பொழுது. நம் கவிஞர்களின் எதார்த்த வார்த்தைகள் சாதனைப் பெண்களுக்கு மட்டுமல்ல, சாதாரணப் பெண்களுக்கும் பொருந்தும். ஏனென்றால், ஆண்டாண்டு காலமாய் போற்றிக் கொண்டுதான் இருக்கின்றோம், சாதனைப் பெண்களைக் கண்டு. நாம் போற்ற மட்டும் பிறந்தவர்களா, இல்லை போற்றப்படுவதற்கும் பிறந்தவர்களா? என்ற கேள்வி நம் ஒவ்வொருவருக்குள்ளும் எழும். பொதுவாக நாம் இதற்கான பதிலை சாதனைப் பெண்களிடமே தேடுகின்றோம். ஆனால் அது புதைந்து கிடப்பதோ நம்முள் தான்.
சுழலும் உலகின் திசையில் சுழன்று போ…. ஓடும் நதியின் திசையில் நகர்ந்து போ….. எதிர்த்து நின்றால் ஏளனமாக்கப்படுவாய்!!!!! என்னும் பிம்பம் தான் நம்முள் திணிக்கப்படுகிறது. ஆனால் உலகமே எதிர்த்தாலும் உன் ஒற்றைக் கருத்தில் உறுதியாக இருப்பின், சுழலும் பூமியும் உன்னைச் சுற்றி. இது வெறும் கருத்தோ கற்பனையோ அல்ல. காலத்தால் அழியாத உண்மைதான். ஆச்சரியமாகத்தான் இருக்கும், மங்கையர்க்கரசியாரின் மகத்தான செயலையும் அதன் விளைவையும் கேட்க. ஆம், கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் கூண்பாண்டியனின் ஆட்சியில் அவன் நாடே அவனோடு சேர்ந்து சமணத்தைப் போற்றிக் கொண்டிருந்தபோது, அந்நாட்டின் அரசி மங்கையர்க்கரசியார் மட்டும் சைவத்தைத் தழுவினார். ஓங்கி வீசிய சமண அலையில் அவரால் மட்டும் எப்படி எதிர்நீச்சல் போட முடிந்தது? அவர் உண்மையில் எதையும் எதிர்த்து வெறுப்பைப் பெறாமல், சைவத்தின் குறியான திருநீற்றை நெற்றியில் அணியாமல், தன் நெஞ்சில் சுமந்து போற்றினார். அந்த ஒற்றை நங்கையின் சைவ மார்க்க உணர்வு ஆழமாகவும் அழுத்தமாகவும் இருந்ததால் சமண அலையையே அது புரட்டிப்போட்டது. பின்னர், அந்நாடே சைவைத்தைத் தழுவிப் போற்றவும் செய்தது.
உன் நம்பிக்கையின் ஆழத்தில் தேடிப்பார். உன் கேள்வி சிப்பிக்குள் விடையான முத்தை உனக்குள்ளேயே ஈன்றெடுப்பாய். மங்கையர்க்கரசியார் சைவத்தைக் கொண்டாடினார். ஆனால் அவர் தன்மீது கொண்ட நம்பிக்கை நம் எல்லோரையும் அவரைக் கொண்டாட வைத்துவிட்டதே!! தெய்வத்தை மட்டுமே ஓங்கி உயர்த்திப் பாடிய ‘பெரியபுராண’த்தில் சேக்கிழாரின் வார்த்தைகள் முதல் முறையாக மங்கையர்க்கரசியாரை ‘மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்’ என்று போற்ற வைத்தது அவர் பிறந்த அரச பிறப்பா? இல்லை, அவரின் சொத்தா? இல்லை, அவரின் வனப்பா? இல்லை, அல்லது அவர் ஒரு தெய்வப்பிறயா? கட்டாயம் கிடையாது. அவரும் உன்னையும் என்னையும் போன்று ஒரு சாதாரணப் பெண்ணே. அவர் துவண்ட வேளையில் நம்மைப் போன்று நிழலைத் தேடி அலையவில்லை. மாறாக, அவர் தன் நிழலிலேயே இளைப்பாறக் கற்றிருந்தார்.
மங்கையர்க்கரசியாரை ஈன்றெடுத்த தமிழ்த் தாயின் பிள்ளைகள்தானே நாமும்? மறுமுறை சிந்திக்காமல் அவர் தவப்புதல்வி என்றுதானே கூறுகிறோம்? அப்படியானால் நாம் கண்டிப்பாக சிந்தனையில் ஒலிக்கும் இந்தக் கேள்வியின் விடையை நோக்கிப் பயணிக்க வேண்டும் நம்முள். ஐயோ.. மங்கையர்க்கரசியார் ஒரே பிறப்பெடுத்து நம்மை விட்டுப் பிரிந்து விட்டாரே என்று மயங்கி நிற்காதே. தன்னை அரசியாக உயர்த்திக்கொண்ட சாதனை மங்கைகள் நம்மை சுற்றித்தான் வலம் வருகின்றனர். ஆம். விழித்துப் பாருங்கள். நாம் வாழ்வையே போட்டியாகக் கருதி துவண்டு போகும் போது போட்டியையே வாழ்வாகக் கொண்ட சாதனைப் பெண்கள் அனைவரும் தங்கள் கேள்விக்கான விடையை அவரவருக்குள் தான் கண்டெடுத்திருப்பர். இந்தக் கருத்தைத்தான், புகழ்பெற்ற ஆங்கில நாவலாசிரியர் அனிதா நாயர், தனது போற்றுதலுக்குரிய நாவல் Ladies Coupe யில் எடுத்துரைத்துள்ளார். அகிலா, இக்கதையின் தலைவி. தனது குடும்ப நலத்திற்காக இரவு பகல் பாராமல் உழைத்த அகிலாவிற்கு மனதில் ஒரு கேள்வி எழுகிறது. அந்தக் கேள்விக்கான விடையை நோக்கி அவர் பயணிக்கிறார். லேடீஸ் கூபே என்ற புகைவண்டியில் ஏறி கன்னியாகுமரி வரை செல்கிறார். ஆம், தொலைந்த தன் சுதந்திரத்தை தேடி…..அந்தப் புகைவண்டியில் அவர் தன்னுடன் பயணித்த ஐந்து பெண்களையும் அவர்களது வாழ்க்கை சூழல்களையும் அவர்களின் வாயிலாகத் தெரிந்து கொள்கிறார். ஜனனி, ஒரு பணிவான குடும்பப்பெண். சாந்தி, வேதியியல் ஆசிரியர். பிரபாதேவி, தலைச்சிறந்த போற்றுதலுக்குரிய மகள். ஷீலா, அனைவரையும் விடவும் வாழ்வில் மிகவும் கொடுத்து வைத்தவள். கடைசிப் பெண் மரிக்கொழுந்து, ஏமாற்றப்பட்ட ஒரு வெகுளிப்பெண். விடையை நோக்கிப் பயணித்த அவளுக்கு சகபயணிகளின் வாழ்வும் சூழலும் எந்த எதிர்பார்த்த பதிலையும் அளிக்கவில்லை. மாறாக, ஒரு ஞானத்தை அவளுக்குள் ஏற்படுத்தியது. என்று நீ உன்னையே அங்கீகரிக்கத் துவங்குகிறாயோ அன்றே நீ சாதனைப் பெண்ணாக மாறுகிறாய் என்ற கருத்தை ஆழப் பதியவைத்துள்ளார் நாவலாசிரியர். இக்கருத்தையே, ஜெயந்திசங்கர் என்னும் தமிழ் நாவலாசிரியர் ‘குவியம்’ என்ற நாவலில் சுவாதி என்னும் கதாபாத்திரத்தின் வாயிலாக வாசிப்பாளர்களுக்குக் கூறியுள்ளார். இப்படியாக, பல்வேறு எழுத்தாளர்களும் இச்சமுதாயத்தில் பெண்கள் சுயமாக சிந்தித்து சாதனைப் பெண்களாக உருமாற வேண்டி பல்வேறு யுக்திகளைக் கையில் எடுத்துள்ளனர்.
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றுணர்ந்த நமக்கு வெற்றியும் தோல்வியும் எவர் தர வரும் என்பது கேள்வியல்ல, விடையே! நம் கேள்விக்கான விடையை நாம் அடுத்தவர் வாழ்வில் பெற முடியாது. அது நம்முள்தான் புதைந்துள்ளது. அதை நோக்கி நாம்தான் பயணிக்க வேண்டும் என்று அறிவது உறுதி தானே!
-முனைவர் திலகவதி வெற்றிவேல்

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!