day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஆர்கானிக் உணவே சிறந்தது…

ஆர்கானிக் உணவே சிறந்தது…

உணவால் நோய் அகலும் என்ற நிலை மாறி, உணவே, நோய் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். அதற்குக் காரணம், பிற நாட்டு உணவு வகைகளையும், உற்பத்தி முறைகளையும் பின்பற்றத் துவங்கியதுதான். அத்தகைய உணவு உற்பத்தி முறைக்குத் தக்க பதில், ஆர்கானிக் (organic) உணவு என்று சொல்லக்கூடிய இயற்கை உணவு. மக்களுக்கு இது பிடிக்கிறதா? ஆர்கானிக் உணவுத் தொழிலில் வெற்றிகரமாக இயங்கும் ஹேமா என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.
ஆர்கானிக் உணவுக் (organic) கடைகள் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏன் வந்தது ?
என் குடும்பத்திற்கு நச்சுப் பொருள் இல்லாத நல்ல உணவைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் ஆர்கானிக் உணவைத் தேடிச்சென்றேன். ஆனால் சரியான ஆர்கானிக் உணவு கிடைக்கவில்லை. அதுபற்றிய விழிப்புணர்வும் இல்லை. அதனால் என் குடும்பத்திற்காக ஆர்கானிக் உணவை நானே உற்பத்தி செய்ய ஆரம்பித்தேன். அது நாளடைவில், என் தொழிலாக மாறியது .
இந்தத் தொழிலை எப்போது தொடங்கினீர்கள்?
நான் எம்.சி.ஏ. படித்திருக்கிறேன். ஆனால் ஆர்கானிக் உணவுகளில் ஈடுபாடு இருந்தது. ஆகையால் 2009அல் ஆர்கானிக் தொழிலை ஆரம்பித்தேன். இப்போது 4 கடைகள் உள்ளன. பண்ணைகளும் இருக்கின்றன. மேலும் கூடிய விரைவில், கடைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது.
இந்தத் தொழிலில் இருக்கக்கூடிய போட்டிகளை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்?
இதைப் போட்டி என்று பார்க்கக் கூடாது. சேவை என்று நினைத்து செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், அதுவே நம் தொழிலை நன்றாகக் கொண்டு செலுத்தும்.
மக்களுடைய விருப்பம் நாளுக்கு நாள் மாறுகிறதா?
நிச்சயமாக. இத்தொழிலை 2009ஆம் ஆண்டு தொடங்கும்பொழுது ஆர்கானிக் உணவு என்றால் என்னவென்றே யாருக்கும் தெரியாது. பின்னர் ஆர்கானிக்கிற்கு விளக்கம் அளித்தோம். அதன்பிறகு தான் ஆர்கானிக்கைப் பற்றி மக்கள் தெரிந்து கொண்டார்கள். அதன் பிறகு, மக்களிடையே இது ஆர்கானிக்தானா என்ற கேள்வி எழத்தொடங்கியது. ஆனால் இப்போது, பலருக்கு உடல் உபாதைகள் அதிகரித்திருக்கின்றன. அதனால் நல்ல உணவைச் சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் மக்களிடையே வரத் துவங்கி இருக்கிறது. ஆகையால், மக்கள் ஆர்கானிக் பொருட்களைத் தேடி வருகின்றனர்.
ஆர்கானிக்குக்கான உங்களுடைய விளக்கம் ?
ஆர்கானிக் என்பது நஞ்சில்லா உணவு. நாம் சாப்பிடக்கூடிய எல்லாவற்றிலும் நச்சுப் பொருள் கலந்து இருக்கிறது. அதை எந்த அளவிற்குத் தவிர்க்க முடியுமோ அந்த அளவிற்குத் தவிர்க்க வேண்டும். நல்ல உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
‘ஆர்கானிக் என்று சொல்லப்படுகின்ற பொருட்களில் ஏமாற்று வேலை நடக்கிறது’ என்ற புகார் இருக்கிறதே, அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
நாங்கள் தயாரிப்பது ஆர்கானிக்தான் என்று நிரூபிக்க முடியாது. நல்ல உணவை மக்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இத்தொழிலுக்கு வருபவர்கள் உண்டு. அவர்கள், பண்ணைகளிலிருந்து வரும் பொருட்கள் சரியான செயல்முறைகள் கொண்டு தயாரிக்கப்படுகிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்வார்கள். அதன்பிறகுதான், மக்களுக்கு விநியோகிப்பார்கள். ஆனால், இத்தொழிலுக்கு லாப நோக்கத்தோடு வருபவர்களும் உண்டு. அவர்கள் தயாரிக்கும் பொருட்களில், மற்ற சிலர் ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
ஊரடங்கிற்குப் பிறகு தொழில் நன்றாக இருக்கிறதா?
ஊரடங்கின்போதே தொழில் நன்றாகத்தான் இருந்தது. ஏனென்றால் சாப்பாடு தான் முதன்மையானது. அதுமட்டுமில்லாமல் கோவிட் என்பதால் நல்ல சாப்பாடு சாப்பிட்டு எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த வேண்டும். அப்போது தான் இந்த நோயை எதிர்கொள்ள முடியும் என்ற எண்ணம் மக்களிடையே இருக்கிறது. அதனால் மக்கள் ஆர்கானிக்கைத் தேடி வருகிறார்கள்.
ஆர்கானிக் தொழில் லாபகரமாக இருக்கிறதா?
40 வருட காலமாக ஆர்கானிக் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. 2017-2018இல் தான் மக்களுக்கு உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய சிந்தனை வந்தது. அப்போதுதான் ஆர்கானிக் பற்றிய விழிப்புணர்வும் மக்களிடைய வரத்துவங்கியது. அதனால் 2017க்குப் பிறகு தொழில் நன்றாக இருந்தது. இப்போது இத்தொழில் லாபகரமாக இருக்கிறது.
இந்தத் தொழிலில் நிலைத்து நிற்க என்ன செய்ய வேண்டும்?
சரியான பொருளை சரியான மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். யாருக்குத் தேவை இருக்கிறதோ அவர்களைத் தேடி சென்று பொருட்களைக் கொடுக்க வேண்டும். அதைச் சரியாக செய்தால் இத்தொழிலில் நிலைத்துவிடலாம். மேலும் இத்தொழிலுக்கு லாப உணர்வோடு வருபவர்களால், இத்தொழிலில் நிலைத்து நிற்க முடியவில்லை.
இத்தொழிலில் உள்ள சவால்கள் என்ன?
தினமும் சரியான பொருட்களைத் தான் கொண்டு வந்திருக் கிறோமா என்ற கேள்வி எங்களிடம் இருந்து கொண்டே இருக்கிறது. என்னதான் பண்ணைக்கு நேரில் சென்று பரிசோதித்துப் பார்த்தாலும், அவர்கள் ஏதேனும் தவறு செய்திருப்பார்களோ என்ற பயம் இருக்கிறது. அதை எதிர்கொள்வது, மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
குடும்பத்தின் ஆதரவு எப்படி இருந்தது?
எனது மகளின் ஆதரவும் கணவரின் ஆதரவும் எனக்கு முழுமையாக இருந்தது. எனது கணவர் 4 வருடங்களுக்கு முன்பாக அவர் பார்த்த வேலையை விட்டுவிட்டு எனது தொழிலுக்குத் துணை நிற்கிறார். இத்தொழிலைச் செய்வதற்கு அனைவரும் ஊக்கமளித்தனர். அதனால்தான் இன்று வரை ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
உங்களுடைய இலக்கு என்ன ?
முடிந்த அளவிற்கு கலப்படம் இல்லாத நல்ல உணவை எல்லாருக்கும் கொடுக்க வேண்டும். எத்தனை பேருக்கு நல்ல உணவைக் கொண்டுபோய் சேர்க்க முடியுமோ, அத்தனை பேருக்குக் கொண்டு போய் சேர்க்க வேண்டும். நம்மை நம்பி வருபவர்களுக்கு சரியான பொருளை வழங்க வேண்டும்.
-ஹேமா

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!