day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஓவியமா காவியமா? – நிஷா

ஓவியமா காவியமா? – நிஷா

நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உயிர்பெற்று நம் முன்னால் வந்துவிடுமோ என்கிற தோற்ற மயக்கத்தைத் தருகின்றன நிஷா பாஸ்கரன் வரையும் ஓவியங்கள். பாரம்பரிய கலைகளில் விருப்பம் கொண்ட நிஷா, கேரளத்தின் பாரம்பரிய ஓவியப் பாணியான மியூரல் ஓவியத்தில் சிறந்து விளங்குகிறார்.

இவரது இளமைக் காலம் அந்தமான் நிக்கோபார் தீவில் கழிந்ததால் கலையைத் தன் விருப்பத் துறையாக அவரால் தேர்ந்தெடுக்க முடியவில்லை. 18 வயது ஆனபோது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக கோயம்புத்தூர் வந்தார். அப்போதுதான் திராவிடக் கலை வடிவங்கள் மீது நிஷாவுக்கு ஆர்வம் ஏற்பட்டது. தமிழகத்தின் கோயில் சிற்பங்களும் கேரளத்தின் மியூரல் ஓவியமும் அவரை வெகுவாகக் கவர்ந்தன. திருமணத்துக்குப் பிறகு மாஹேவில் உள்ள ‘மலையாள கலாகிராம’த்தில் சேர்ந்து மியூரல் ஓவியத்தையும் பிற கலை வடிவங்களையும் முறைப்படி பயின்றார். கேரளத்தின் சிறந்த ஓவியர்களில் ஒருவரான எம்.வி.தேவனும் நீர் ஓவியத்தில் சிறந்து விளங்கிய பி.எஸ்.கருணாகரனும் நிஷாவின் ஆதர்ச ஓவியர்கள். மியூரல் ஓவியத்தில் டிப்ளமோ முடித்துவிட்டு மைசூரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை ஓவியத்தை முடித்தார்.

“கேரளத்தின் பாரம்பரிய ஓவியக் கலையான மியூரல் ஓவியங்களைக் கோயில் சுவர்கள், மேற்கூரைகள், தூண்களில் காணலாம். வேதங்களையும் புராணங்களையும் இதிகாசங்களையும் ஓவியங்களாகத் தீட்டுவார்கள். தியான ஸ்லோகங்களை அடிப்படையாகக் கொண்டவை இவை. ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். ஒவ்வொன்றுக்கும் தனி முத்திரைகளும் ஆயுதங்களும் வண்ணங்களும் இருக்கும். சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் இவற்றுடன் வெள்ளையும் கறுப்பும் கலந்த நிறங்களே இவற்றுக்குத் தீட்டப்படும். கதாபாத்திரத்தின் குணத்துக்கு ஏற்ப நிறங்கள் மாறுபடும். மண், செங்கல், தாவரங்கள், கரித்துண்டு போன்றவற்றைக் கொண்டு இயற்கையான முறையில்தான் வண்ணங்கள் தயாரிக்கப்படும்” என்று மியூரல் ஓவியம் குறித்து விளக்குகிறார் நிஷா.

நுணுக்கமான கலைப் பாணி என்பதால் இதை வரையவும் அதற்கேற்ப நேரமாகும். ஆழ்ந்த பொறுமையும் ஈடுபாடும் இருந்தால் மட்டுமே இதைச் செய்ய முடியும். 6க்கு 4 என்கிற அளவில் உள்ள ஓவியத்தை வரைய நிஷாவுக்கு ஒரு வாரம் ஆகிறதாம். நீர் ஓவியமும் அக்ரிலிக் வகையும் இவருக்குப் பிடித்தமானவை. வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப உருவப் படங்களை எண்ணெய் ஓவியமாகத் தீட்டித் தருகிறார்.  பிற துறைகளைப் போலவே பெண்ணாக இருப்பதால் ஓவியத்துறையிலும் சவால்கள் இருக்கத்தான் செய்கின்றன என்கிறார் நிஷா. நம் இந்தியப் பண்பாட்டில் ஓவியம் சார்ந்த பார்வையும் அணுகுமுறையும் இன்னும் விசாலமடையவில்லை. அதனாலேயே தன் திறமைக்கான அங்கீகாரத்துக்கும் தன் படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் போராடுகிறார் இவர்.

மாநில, தேசிய, உலக அளவிலான பல்வேறு ஓவியக் கண்காட்சிகளில் இவர் பங்கேற்றுள்ளார். கேரளா லலித் கலா அகாடமி நடத்தும் கண்காட்சிகளில் இவரது படைப்புகள் இடம்பெற்றுள்ளன. தாய்லாந்தின் பாங்காக் நகரத்தில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச ஓவியக் கண்காட்சியில் இவர் பங்கேற்றிருக்கிறார்.  பல்வேறு ஓவியப் பயிற்சிப் பட்டறைகளிலும் முகாம்களிலும் பங்கேற்ற அனுபவம் மிக்கவர் இவர்.   தன் கலைப்பணிக்காகப் பாராட்டுச் சான்றிதழ்களையும் அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறார்.

கலையின் மதிப்பு பெரும்பாலோருக்குத் தெரியவில்லை என்கிறபோதும் தன் படைப்புகளுக்கு ஓரளவுக்குச் சன்மானம் கிடைப்பதாகச் சொல்கிறார் நிஷா. வருமானத்தில் ஏற்ற இறக்கம் இருக்கிறபோதும் இளம் தலைமுறையினர் ஓவியத்தில் ஈடுபாட்டுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.  அதனால் ஓவியக் கலைக்குச் சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும் அவர் நம்புகிறார்.

“கேரளத்தின் தலச்சேரியில் பிறந்தாலும் தற்போது மாஹேவில் வசித்துவருகிறோம். என் கணவர் மருத்துவர். எல்லா விதத்திலும் என் முயற்சிகளுக்கு அவர் பக்கபலமாக இருக்கிறார். மகன், தொழில்முனைவோர். மகள், தொழில் நிர்வாகத்தில் மேற்படிப்புப் படித்துக்கொண்டிருக்கிறார்” என்று சொல்லும் நிஷா பாஸ்கரன், ஓவியக் கலையில் அடுத்தடுத்த உயரத்தைத் தொடும் நோக்கில் செயல்பட்டுவருகிறார்.

 

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!