day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் தாயைப் போன்றவர்கள்…

ஆசிரியர்கள் தாயைப் போன்றவர்கள்…

மாதா, பிதாவுக்கு அடுத்த படியாகக் குருவுக்குத்தான் இடம் அளித்திருக்கிறார்கள். அறிவுக்
கண்ணைத் திறக்கும் ஆசிரியர்களைத் தெய்வத்துக்கும் மேலாக மதிக்க வேண்டும் என்றும்
சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான் இந்தியாவின் சிறந்த ஆசிரியர்களில் ஒருவரான
சர்வபல்லி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5ஆம் தேதியை நாம் ஆசிரியர்
தினமா கக்கொண்டாடுகிறோம். ஆசிரியர் தினத்துக்குப் பெருமை சேர்க்கும் விதமாகச்
சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர் ரமாதேவி, தன் ஆசிரியப் பணி குறித்து நம்மிடம்
பகிர்ந்துகொள்கிறார்.
“லட்சியத்துடனோ, சாதிக்கப்போகிறோம் என்றோ ஆசிரியப் பணியை நான்
தேர்ந்தெடுக்கவில்லை. படித்து முடித்ததும் வேலைக்குப் போக வேண்டும் என்று பத்தாம்
வகுப்புக்குப் பிறகு ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன், 17 வயதில் வேலைக்கு வந்துவிட்டேன்.
கிராமப்புறங்களை சுற்றியே என் பணி அமைந்தது. பெண்களும் பெண் குழந்தைகளும்
டீச்சர்தான் எல்லாமே என்று நம்மை முழுதாக நம்பிக்கொண்டு வருவார்கள். இந்தப் பணிக்கு
வந்தபின்தான் நான் நிறைய கற்றுக்கொண்டேன். நம்மை நம்பி வருகிற குழந்தைக்கு ஏதாவது
செய்தாக வேண்டும் என்று தோன்றியது. இவர்களுக்குப் படிப்பதற்கோ அல்லது வேறு ஏதாவது
துறையில் சாதிக்கவோ பெரிய அளவில் யாரும் துணை நிற்பதில்லை. வழிகாட்டுவதற்கும்
யாரும் இல்லை. கிராமப்புற மாணவர்களுக்கும் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக
ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் தோன்ற, அதன்பின்தான் இந்தப் பணியை
நேசிக்க ஆரம்பித்தேன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்த எனக்கு அதிலும்
குறிப்பாகக் கிராமப்புறச் சூழ்நிலை, குடும்ப வறுமையை எல்லாம் பார்த்தபின்புதான் இந்த
மாற்றம்.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஒழுங்காகப் பள்ளிக்கு வருவதில்லை என்கிற கட்டுக்கதையை யார்
கிளப்பி விட்டார்கள் என்று தெரியவில்லை. இந்த டிஜிட்டல் உலகத்தில் பள்ளிக்கெல்லாம்
வராமல் எந்த ஆசிரியராலும் இருக்க முடியாது. அனைத்து ஆசிரியர்களும் சரியாக 9 மணிக்குப்
பள்ளிக்கு வந்தேதான் ஆக வேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சரியாகப் பணி செய்வில்லை
என்கிற விமர்சனமும் வியப்பாக இருக்கிறது. பல ஆசிரியர்கள் எவ்வளவு அர்ப்பணிப்போடு
பணி செய்கிறார்கள் என்பதை ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்து இருக்கின்றன.
தினந்தோறும் ஏதாவது ஒரு அரசுப்பள்ளி ஆசிரியரைப்பற்றி தொலைக்காட்சிகளிலோ
செய்தித்தாள்களிலோ வந்துகொண்டேதான் இருக்கிறது. இதை வைத்துத் தனியார் பள்ளி
ஆசிரியர்களையும், அரசுப்பள்ளி ஆசிரியர்களையும் ஒப்பிட முடியாது. எத்தனையோ
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களுடைய சொந்தப் பணத்தில் பள்ளியினுடைய
உள்கட்டமைப்பை மேம்படுத்திக்கொண்டு இருப்பதை நாம் பார்க்க முடிகிறது.
அதுமட்டுமல்லாமல் எத்தனையோ பேர் நன்கொடை வசூலித்து கணிப்பொறி ஆய்வகம்
உருவாக்கியிருக்கிறார்கள். பள்ளியையே ஏசி அறைக்குள் கொண்டு வருவதுபோன்று மாற்றி
வைத்திருக்கிறார்கள். அரசுப்பள்ளி என்றாலே பொலிவிழந்து இருக்கும் என்பதை மாற்றி

பள்ளிக்குத் தேவையான பொருட்களை உள்ளூரில் நிதி திரட்டி, தனியார் பள்ளியை விடவும்
மிகவும் அற்புதமான, அழகான பள்ளியை அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கொண்டு
வந்திருக்கிறார்கள்.
அரசுப்பள்ளி ஆசிரியர்களின் பணி என்பது பாடம் சொல்லிக்கொடுப்பதோடு நின்றுவிடுவது
கிடையாது. 10ஆம் வகுப்புக்கும், 12ஆம் வகுப்புக்கும் பயிற்சி கொடுத்தால்போதும் என்று பல
தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகளால் கைவிடப்பட்ட மாணவர்கள்தான்
அரசுப்பள்ளியை நோக்கி வருகிறார்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்பு இல்லாதவர்கள்,
பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருக்கிறவர்கள், மாற்றுத்தி றனாளி குழந்தைகள்
போன்றோரும் அரசுப் பள்ளிக்குத்தான் வருவார்கள். இப்படி எல்லாவிதங்களிலும்
பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் அரவணைப்பதுதான் அரசுப் பள்ளி. இந்த மாணவர்களுக்குத்
தேவையான அனைத்தையும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான் செய்து கொடுக்கிறார்கள்.
அவர்களுடைய உடல்நலத்திலும், மனநலத்திலும் கவனம் செலுத்தக்கூடியவர்களாக அரசுப்
பள்ளி ஆசிரியர்கள் இருக்கிறார்கள். பொருளாதார உதவி தேவைப்படுகிற மாணவர்களுக்குப்
பொருளாதார உதவிகளையும் செய்து கொடுக்கிறார்கள். இப்படி எல்லாவற்றையும்
அரவணைத்துக்கொண்டு செல்லக்கூடிய தாயாகத்தான் ஒவ்வொரு அரசு பள்ளி ஆசிரியரும்
இயங்குகிறார்கள். ஆனால், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர மாட்டார்கள்,
ஒழுங்காகப் பணி செய்ய மாட்டார்கள் என்று சொல்வதெல்லாம் காலத்திற்குப் பொருந்தாக
கட்டுக்கதைதான்.
இன்றைக்குப் பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் அதிக அக்கறை, கவனம்
எடுத்துக்கொள்பவர்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்தான். நான் கடந்த 20 வருடங்களாக
பெண்கள் சார்ந்த பிரச்சினைகள் குறித்த பல்வேறு கருத்தரங்குகளில் குறிப்பாக உலக அளவில்
மற்றும் தேசிய அளவிலும் தொடர்ச்சியாகக் கலந்து கொண்டு பயிற்சி பெற்றுவருகிறேன்.
அந்தப் பயிற்சியை இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் கொண்டு சென்று,
ஆசிரியர்களுக்கு அந்தப் பயிற்சிளை அளித்துக்கொண்டு இருக்கிறேன். அப்படிப் பல
கருத்தரங்குகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தபோதுதான், ஐ.நா.விற்குப் போகும்
வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
2014ஆம் ஆண்டு செப்டம்பரில் ஐ.நா.வினுடைய பொதுச்சபையில் கலந்து கொண்டேன். அதை
என் வாழ்நாள் பொக்கிஷமாகத்தான் சொல்ல வேண்டும். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து
7 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டோம். அதில் இந்தியாவின் சார்பில் நான் ஒருவர்தான்
கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. வகுப்பறையில் இருக்கக்கூடிய சிக்கல்கள்,
வகுப்பறையில் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்துத்தான் அந்த அமர்வு இருந்தது. அந்த
அமர்வில் இந்தியாவின் நிலையைப் பற்றியும், இந்தியாவின் குழந்தைகள் பற்றியும்,
அவர்களின் கல்வி நிலையைப் பற்றியும் வாழ்வியல் பற்றியும் பேசும்போது மிகப்பெரிய
வரவேற்பு கிடைத்தது. அந்த அமர்வின் முடிவிலேயே உலகின் ஒரே ஆசிரியராக நான் தேர்வு
செய்யப்பட்டு, அதற்கு அடுத்த ஆண்டு ஐரோப்பாவின் பெல்ஜியத்தில் நடைபெற்ற
கருத்தரங்கிற்குத் தேர்வு செய்யப்பட்டேன். ஐரோப்பிய யூனியன், நெதர்லாந்து, உலக வங்கி
ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் ஒரு ஆசிரியர் சங்கப் பிரதிநிதி, ஒரு
ஆசிரியர் பிரதிநிதி, இதுபோன்ற கருத்தரங்கிற்கு நிதி அளிக்கக்கூடியவர்கள் பங்கேற்றோம்.
ஒரு அற்புதமான நிகழ்ச்சி அது.
அதன்பின் 2015ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி அதாவது, சர்வதேசப் பெண்கள் தினத்தன்று
ஐ.நா.வில் நடந்த கருத்தரங்கில் தொடர்ச்சியாகப் பத்து நாட்கள் கலந்து கொள்ளக்கூடிய

வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தச் சமயத்தில் மூன்று கருத்தரங்கில் பேசக்கூடிய வாய்ப்பு
எனக்குக் கிடைத்தது. அதில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பெண் கடத்தல்,
குழந்தைத் தொழிலாளர்கள் ஆகிய மூன்று தலைப்புகளில் பேச 10 நிமிடங்கள் வாய்ப்பு
கிடைத்தது. இதைப் பெரிய, அரிய வாய்ப்பாகக் கருதுகிறேன்.
அதேநேரத்தில் மார்ச் 8ஆம் தேதி காலை அன்றைய ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கி மோன்
தலைமையில் ஒரு பேரணி நடந்தது. அந்தப் பேரணியிலும் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பும்
எனக்குக் கிடைத்தது. என்னுடைய முதல் புத்தகமான ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ ஒரு
கட்டுரைத் தொகுப்பு. அது பெண்ணியம் சார்ந்த நூல். பெண்களுக்கு உள்ள பிரச்சினைகள்,
அந்தப் பிரச்சினைகளை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்பதை அலசும் நூல். அது கற்பனை
கிடையாது. நான் கடந்து வந்த பாதையும், இதுவரையில் என் வாழ்வில் நான் சந்தித்த பெண்கள்
என்னிடத்தில் பகிர்ந்து கொண்ட செய்திகளும்தான் அதன் உள்ளடக்கம். நான் கலந்துகொண்ட
கருத்தரங்கில் நான் பெற்ற கருத்துக்களை வைத்தும் கட்டுரைத் தொகுப்பை
வெளியிட்டிருக்கிறேன்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனாவால் மாணவர்கள் பள்ளிக்கு வர இயலாத சூழல்
ஏற்பட்டிருக்கிறது. இது கடினமான சூழல்தான். இது சரியான அணுகுமுறையா என்று
கேட்டால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வர முடியாத
பொழுது, நாம் அதற்கான மாற்றுவழியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால்,
கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களைப் பார்த்தால், அவர்களின் வாழ்க்கை முறையே இந்த
கொரோனா காலத்தில் மாறிவிட்டது. கல்வி முறையில் பின்னடைவைத்தான் காட்டுகிறது. பல
மாணவர்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். பள்ளி திறந்த பிறகு, அந்த
மாணவர்கள் திரும்பப் பள்ளிக்கு வருவார்களா? நமக்கு முன்னால் இருக்கக்கூடிய மிகப்பொிய
கேள்வி இது. சம்பாதிக்கப் பழகிய பிறகு அந்தப் பெற்றோர்களின் மனநிலையிலும்,
மாணவர்களின் மனநிலையிலும் மிகப்பெரிய மாற்றம் தெரியும். அவர்களைத் திரும்பப்
பள்ளிக்கு அழைப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். ஆசிரியர்கள் தொடர்ச்சியாகப்
பள்ளிக்குச் சென்றுகொண்டுதான் இருக்கிறோம். மாணவர்கள் பள்ளிக்கு வர இயலாத சூழல்
நிலவுவதால், நாங்கள் சென்று மாணவர்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
மூன்றாவது அலையோ, நான்காவது அலையோ எது வந்தாலும் நாம் அதை
எதிர்கொள்ளத்தான் வேண்டும். அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால்,
அதற்குரிய தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகைளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதுமட்டும்தான் இப்போது நம்மால் செய்ய இயலும். பள்ளி திறந்தாலும் ஆசிரியர்கள் 100
சதவீதம் தடுப்பூசி போட்டு வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பெரும்பாலும் எல்லா
ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டுள்ளார்கள். ஆனாலும், மூன்றாவது அலையோ, நான்காவது
அலையோ எத்தனை அலை வந்தாலும் நமது அரசு அதைச் சிறப்பான முறையில்
கையாள்வதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. ஆனால்,
மாணவர்களின் கல்வி நிலை மிகவும் பாதிக்கப்படும் என்பதை இன்றைக்கு யூனிசெஃப்பில்
இருந்தும், யுனஸ்கோவில் இருந்தும் பல்வேறு அறிக்கைகள் மூலம் வந்து நமக்கு
தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனால், அந்தப் பாதுகாப்பு வழிமுறைகளைப்
பின்பற்றி மாணவர்களுக்கு மாற்றுக் கல்விமுறை கொடுக்கக்கூடிய திட்டத்தைத் நாம்
கண்டுபிடித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் மாணவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய
கேள்விக்குறியாகிவிடும். சமுதாயச் சிக்கல்கள் ஏற்படும். அதனால், மாற்று முறையைத்
தேடக்கூடிய, தேட வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம்.”

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!