day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஓய்வறியா போராளி!

ஓய்வறியா போராளி!

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், எல்லோ ருக்கும் இந்த உலகில் வாழ உரிமை உண்டு. இதை மட்டுமே தன் செயல்களுக்கு உரமாக இட்டு இரும்புப் பெண்மணியாக இன்றும் பேசப்படுபவர் இரோம் ஷானு ஷர்மிளா.இன்று உணவுப்பொட்டலங்களுடன் நடக்கும் உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு மத்தியில் 16 ஆண்டுகள் தன் மண்ணின் மக்களுக்காக உண்ணாவிரதம் இருந்த உயர்ந்த மனுஷி இவர்.சமூகச் செயற்பாட்டாளர், கவிஞர், மனித உரிமைப் போராளி என்று பல அடையாளங்களும் இரும்புப் பெண்மணி, மணிப்பூரின் மகள் என்று பல பெயர்களும் இவருக்கு உண்டு. மனிதர்கள் மீதான அன்பை மட்டுமே ஆயுதமாகக்கொண்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி ராணுவத்தையே எதிர்த்துப் போராடினார். அப்பா, கால்நடை மருத்துவமனை ஊழியர். உடன்பிறந்தவர்கள் எட்டுப் பேர். எளிமையான குடும்பம்தான்.

அண்ணன் இரோம் சிங்கஜித் சிங், தங்கை போராட்டத்தைத் தொடங்கிய பின்னர், அவரைப் பார்த்துக்கொள்வதற்காகத் தன் பணியை உதறித்தள்ளியவர். பன்னிரண்டாம் வகுப்புவரை இரோம் படித்தார். பின்பு, மனித உரிமை அமைப்புகளிலும் பார்வையற்ற குழந்தைகளுக்கான பள்ளியிலும் இளையோர் இயக்கங்களிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.மலோம், இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு சிற்றூர். அன்று, நவம்பர் 2, 2000ஆம் ஆண்டு. இரோம் ஷர்மிளாவின் 16 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கான விதை அவ்வூரின் பேருந்து நிறுத்தத்தில் அன்றுதான் விதைக்கப்பட்டது. பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காகக் காத்துக்கொண்டு இருந்த நேரத்தில் விரைந்துவந்தது பேருந்தல்ல; தோட்டாக்கள். பேருந்திற்காகக் காத்துக்கொண்டிருந்த பத்துப் பேரின் உயிரை அவை பறித்தன. இறந்தவர்களுள் 62 வயதான லெய்சங்பம் இபெடோமியும் தேசிய சிறார் வீர தீர விருது பெற்ற 18 வயது சினம் சந்திரமணியும் அடக்கம். இந்தத் துயரச் சம்பவம் ‘மலோம் படுகொலை’ என மனித உரிமை ஆர்வலர்களால் அழைக்கப்படுகிறது. இதுவே இரோமின் மனதில் உண்ணாவிரதப் போராட்டம் உயிர்த்தெழக் காரணமாக அமைந்தது.

இந்த சம்பவத்திற்குக் காரணமாக இருந்தது, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம். வட கிழக்கு மாநிலங்களிலும் காஷ்மீரிலும் அமல்படுத்தப்பட்டிருந்த இந்தச் சட்டத்தின் மூலம் ராணுவம் சந்தேகத்தின் பெயரில் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யலாம், சுட்டுத் தள்ளலாம், எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம். இந்தச் சட்டத்தின் பெயரால்தான் இந்திய ராணுவம் மலோம் படுகொலையை நிகழ்த்தியது. இந்தச் சம்பவம் இரோம் ஷர்மிளாவைப் பெரிதும் பாதித்தது. இந்தச் சம்பவத்திற்காக அரசை எதிர்க்க நினைத்தவர், கையில் எடுத்த ஆயுதம், அகிம்சை! ஆயுதப்படை அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறும்வரை உண்ண மாட்டேன், தண்ணீர் குடிக்க மாட்டேன், கண்ணாடியில் முகம் பார்க்க மாட்டேன், தலை சீவ மாட்டேன் என உறுதியாய் உரைத்த இரோம் ஷர்மிளா போராட்டத்தைத் தொடங்கினார்.
பெண்கள் மணம் முடித்துத் தாய் வீட்டைவிட்டு மறு வீடு செல்லும் 28 வயதில் அரசின் செயலால் மனமுடைந்து தாய் நாட்டிற்காகக் களத்தில் இறங்கினார் இரோம். தாயின் முகம் பார்த்தால், தன் முடிவில் இருந்து தான் பின்வாங்கக்கூடும் என நினைத்து, அவரைச் சந்திப்பதையும் தவிர்த்தார்.

அவர் போராடத் தொடங்கிய 3 நாட்களில் தற்கொலை செய்துகொள்ள முயலுவதாகக் காவல் துறையினால் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அவர் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. சிறையில் இருந்த போது, 21 நவம்பர் அன்று வலுக்கட்டாயமாக நாசித்துவாரம் வழியாக அவருக்குத் திரவ உணவு செலுத்தப்பட்டது. உள்ளுறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதையத் தொடங்கின. மாதவிடாய் முற்றிலுமாய் நின்றுபோனது. ஆயினும், தன் போராட்டத்தை அவர் கைவிடவில்லை. ஆண்டுகள் பல கடந்தன. தற்கொலை முயற்சிக்கு ஓராண்டு மட்டுமே சிறைத் தண்டனை என்பதால் வருடா வருடம் தற்கொலைக்கு முயல்வதாகக் கூறி அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.முதலில் இவரது போராட்டம் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் செய்தித்தாள்களில் எங்கோ ஒரு மூலையில் சிறிதாக இடம்பெற்றது. பின்பு அவரது மனோதிடத்தால் முதல் பக்கச் செய்தியாக அது மாறியது. நிழல் மட்டுமே இவருடன் நின்றது. போராட்டக்களத்தில் பல மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். 2 அக்டோபர் 2006இல் டெல்லி சென்ற இரோம் அங்கு தனது வழிகாட்டியான காந்தியடிகளுக்கு வணக்கம் செலுத்தினார். அக்டோபர் 6 அன்று டெல்லியில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்தபடியே, அவர் பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் உள்துறை அமைச்சருக்கும் கடிதங்கள் எழுதினார்.

அகிம்சையால் எப்படி ராணுவச் சட்டத்தைத் திரும்பப் பெறச்செய்ய முடியும் என்று கேள்வி எழுந்ததைக் கண்டுகொள்ளாமல் போராட்டத்தைத் தொடர்ந்தார்.இரோம் ஷர்மிளா போராடத் துவங்கிய சில வருடங்களுக்குள் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் பெயரில் மற்றொரு சம்பவம் மணிப்பூரில் நடந்தது. அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவினரால் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு, சுடப்பட்டு இறந்தார். இது நடந்தேறிய சில நாட்களில் ஆடைகள் ஏதுமின்றி ‘இந்திய ராணுவமே எங்களையும் பலாத்காரம் செய்’ என்று எழுதப்பட்டிருந்த பதாகைகளைத் தாங்கியபடி மணிப்பூர் பெண்கள் அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவின் தலைமையகம் முன்பு போராடினர். போராடிய அனைவரும் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் பெரிய அளவில் எதிர்ப்பலைகளை நாடெங்கும் உருவாக்கியது. ஆயுதப் படை அதிகாரச் சட்டத்தின் பெயரில் நடக்கும் அத்துமீறல்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கும் குரல்களின் எண்ணிக்கை யும் உயர்ந்தது. இரோம் ஷர்மிளாவின் ஆதரவாளர் களும் பெருகினர்.

அவர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கிய பல்வேறு காலகட்டங்களில் பல அரசியல் கட்சிகளிடமிருந்து தேர்தலில் நிற்க அழைப்பு வந்தது. அவை அனைத்தையும் தவிர்த்த இவர் 16 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய பிறகு, ஆகஸ்ட் 9, 2016 அன்று தேன் உண்டு தன் உண்ணாவிரதப் போராட் டத்தை முடித்துக்கொண்டார். தேர்தல் அரசியலில் நுழைந்து மணிப்பூர் முதல்வராகி, தன் கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்ளப் போவதாகக் கூறினார். இவரின் 16 ஆண்டுகள் தியாகத்திற்கு ‘அரசியல் ஆசை’ என்ற பூச்சும் பூசப்பட்டது.அப்போது நடந்த மணிப்பூர் தேர்தலில் அவர் அப்போதைய முதல்வர் இபோபி சிங்கிற்கு எதிராக முதல்வர் வேட்பாளராகப் போட்டியிட்டார். வெறும் 90 வாக்குகளே இரோமிற்குக் கிடைத்தன. நம் ஜனநாயக நாட்டில் போராட்டங்கள் ஒன்றும் புதிதன்று. ஆனால், தனி ஒரு பெண்ணாக உடல் நலம் இழந்து, பிறரின் வலிக்காகப் போராடிய பெண் இவர். மக்களுக்காக அரசியலுக்கு வர நினைத்த இவருக்கு மணிப்பூர் மக்கள்கூடத் தன்னை ஆதரிக்காதது மிகுந்த வேதனையைக் கொடுத்தது. ஆனாலும், தன் முடிவிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. ‘ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தைத் திரும்பப் பெறும் வரை என் போராட்டம் தொடரும்’என அறிவித்தார்.

மணிப்பூர் மக்களுக்காக மட்டுமே வாழ்ந்த இவர் மனதில் காதல் மலர்ந்து திருமணம் செய்துகொள்ள நினைத்தபோது அதற்கும் அவ்வளவு தடைகள். அனைத்தையும் தாண்டி ஒரு வழியாக 2017 இல் 44 வயதானபோது திருமணம் செய்துகொண்டார். 28 வயதில் சமூகத்திற்காகப் போராடத் தொடங்கினார். 16 ஆண்டுகள் காந்தியின் வழிநின்று மக்களுக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்தார். காந்தியையே சுட்டுக் கொன்ற நாடு இவருக்கு அளித்த பரிசு வெறும் 90 ஓட்டுகள். திருமணத்தின்போதும் அவ்வளவு இன்னல்கள்.மக்களுக்காகப் போராடும் யாரும் அவர் களுக்காக வாழக் கூடாதா? மக்களுக்காக அரசியலில் நின்றபோதும் அதை அரசியல் ஆதாயத்துக்காகப் போடப்பட்ட நாடகம் என்றுதானே இந்தச் சமூகம் பேசியது? தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைத் தொலை த்து விட்டுத்தான் பொதுப் பணிக்கு வர வேண்டுமா? தனக்கென தனிப்பட்ட விருப்பும் லட்சியமும் இருக்கக் கூடாதா? விடை நம் கையில்!

 

  • யோகலட்சுமி வேணுகோபால்
angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!