day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஆணை எதிர்ப்பதல்ல பெண்ணியம்

ஆணை எதிர்ப்பதல்ல பெண்ணியம்

ெண்ணியம் என்பது ஆணுக்கு எதிரானது என்றே பலரும் புரிந்துகொண்டிருக் கிறார்கள். உண்மையில் பெண்ணியம் என்பது ஆணாதிக்கத்துக்கு எதிரானதே தவிர ஆணுக்கு எதிரானது அல்ல. பெண்ணியம் என்பது ஆண் வெறுப்பல்ல; ஆணாதிக்கச் சிந்தனைகளைக் களைந்து ஆண், பெண் இருவருக்கும் சமமான வாழ்வுரிமையைக் கோருவது.
ஆண்களிடம் மட்டுமே ஆணாதிக்கம் இருக்கும் என்பது தவறான சிந்தனை. அரிதாகச் சில பெண்களிடமும் ஆணாதிக்கச் சிந்தனை இருக்கும். காரணம், அவர்கள் காலங்காலமாக அப்படித்தான் வளர்க்கப்பட்டிருப்பார்கள். வீட்டில் நடக்கும் மாமியார் – மருமகள் சண்டையில் தொடங்கி, பொதுவெளியில் செயல்படும் பெண்கள் மீது பெண்களே வசைமாரி பொழிவது வரையிலான எல்லாமே பெண்களின் வழியாகச் செயல்படும் ஆணாதிக்கம். காரணம், பெண்கள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுப் பிரிந்துகிடப்பதுதான் ஆணுக்கு வசதி. பெண்கள் ஒற்றுமையாக இருந்தால் அவர்களை அடிமைப்படுத்துவது சிரமம் என்பதாலேயே ஆண்கள் மிகத் தந்திரமாகத் திட்டமிட்டு, மென்மை, தாய்மை, கற்பு, புனிதம் என்பது போன்ற விலங்குகளைப் பெண்களுக்குப் பூட்டிவிட்டனர். பெண்களும் அவை தங்களை அழகுபடுத்தும் அணிகலன்கள் என்றே அந்த அடிமைச் சின்னங்களை அணிந்து பெருமிதப்பட்டு வருகின்றனர்.
ஆனால், இதில் மாற்றத்தை ஏற்படுத்துவது பெண்களாகிய நம் கையில்தான் இருக்கிறது. வளர்ந்து வேரோடிய முள் மரத்தை வெட்டுவதைவிட அது சிறுசெடியாக இருக்கும்போதே களைவது எளிதல்லவா. அதைத்தான் நாமும் செய்ய வேண்டும். பாலின சமத்துவத்தை மீட்டெடுக்கவும் செயல்படுத்தவும் பெண்களிடம் இருக்கிற மிகப்பெரிய ஆயுதம் ‘குழந்தை வளர்ப்பு’. நம் இந்தியச் சமூகத்தில் குழந்தை வளர்ப்பு என்பது முழுக்க முழுக்க பெண்களுடன் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது. ஒரு தந்தையாக ஆணையும் அதில் பங்களிக்கச் செய்வது எந்த அளவுக்கு அவசியமோ அதே அளவுக்குக் குழந்தை வளர்ப்பில் பாலினப் பாகுபாட்டைக் கடைப்பிடிக்காமல் இருப்பதும் அவசியம்.
குழந்தையை அலங்கரிப்பதில் தொடங்கிவிடுகிறோம் இந்த வேறுபாட்டை. ஆணுக்கு எளிய நிறங்களில் இயல்பாக ஆடை அணிவிக்கிற பலரும் பெண் குழந்தைக்கு மையிட்டுப் பொட்டிட்டுப் பூச்சூட்டி அலங்காரம் செய்கிறோம். பெண் என்றால் தன்னை அலங்கரித்துக்கொண்டு அழகுப் பதுமையாக வலம்வர வேண்டும் என்று அந்தச் சிறு வயதிலேயே அவர்கள் மனத்தில் தவறான எண்ணத்தை வளர்த்துவிடுகிறோம். அழகல்ல, அறிவே பெண்ணின் அடையாளம் என்பதை அந்தக் குழந்தைக்கு உணர்த்த மறந்துவிடுகிறோம். ஆண் குழந்தைக்கு கார், பைக் போன்ற பொம்மைகளை வாங்கித் தரும் நாம், பெண் குழந்தைகளுக்குக் கரடி பொம்மையையும் சொப்புச் சாமான்களையும் வாங்கித்தருகிறோம். தொழில்நுட்ப அறிவு ஆணுக்கும் சமையலறை பெண்ணுக்கும் என்கிற பிற்போக்குத்தனத்தை நாம் குழந்தைகள் மனத்தில் விதைக்கிறோம் என்பதை அறியாமலேயே இதைச் செய்கிறோம்.
உணவு தருவதில் இருவருக்கும் அவ்வளவாகப் பாகுபாடு காட்டப்படுவதில்லை என்றாலும் சில வீடுகளில் ‘வளர்கிற பையன்’ என்று ஆணுக்கு மட்டும் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. ‘உண்டிச் சுருக்குதல் பெண்டிர்க்கு’ அழகு என்பதை மறைமுகமாகச் சொல்வதுடன் வீட்டு ஆண்கள் அனைவரும் சாப்பிட்ட பிறகே பெண்கள் சாப்பிட வேண்டும் என்பதையும் பெண் குழந்தைக்குக் கற்பிக்கிறோம். சொல்லப்போனால், மாதவிடாய், குழந்தைப்பேறு என்று பெண்களின் உடலில் தொடர்ச்சியாக மாற்றம் நிகழ்வதால் ஆணைவிடப் பெண்ணுக்குத்தான் ஊட்டச்சத்து அதிகம் தேவைப்படுகிறது. ஆனால், நாம் பெண்ணைத்தான் ஒல்லிக்குச்சி உடம்புக்காரியாக வளர்த்தெடுக்க நினைக்கிறோம்.
பதின் பருவத்தில் ஆண் குழந்தை வெளியே சென்று விளையாட அனுமதிக்கிற நாம். பூப்பெய்திய பெண்ணை வீட்டு வேலைகளைச் செய்யச் சொல்லிப் பழக்குகிறோம். இதற்குப் பதிலாகப் பெண்ணையும் விளையாட அனுப்பலாம். ஆணுக்கு வீட்டு வேலைகளைப் பழக்கலாம். வீட்டு வேலையில் ஆண் வேலை, பெண் வேலை என்று எந்தப் பாகுபாடும் இல்லை என்பதை இரண்டு குழந்தைகளுக்குமே சொல்லித்தர வேண்டும். தாயையும் சகோதரியையும் மதித்து நடக்க ஆண் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். இப்படி வளர்க்கப்படுகிற ஆண் குழந்தைகள், தன்னுடன் படிக்கும் மாணவிகளையும் தன் வாழ்க்கைத் துணையையும் மதித்து நடப்பார்கள்.
ஆணைச் சிங்கம் என்று போற்றி வளர்க்கிற நாம், பெண்ணுடலைப் புனிதம் என்று போதிக்கிறோம். அதனால்தான் இந்த நூற்றாண்டிலும்கூட, ‘அவன் ஆம்பள. சட்டையில்லாமக்கூட ரோட்டுல போவான், உன்னால அப்படிப் போக முடியுமா?’ என்கிற தேய்ந்துபோன வழக்கையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண் டிருக்கிறோம்.
எப்போதும் ஆணைச் சார்ந்தே வாழ வேண்டிய கட்டாயத்துக்குப் பெண்கள் தள்ளப்படுவதும் தவறு. இல்லத்தரசியாக இருக்கிற நிலையிலும் தன்மானத்துடனும் சுய மரியாதையுடனும் வாழலாம். கணவன் வெளி வேலைக்குச் சென்று சம்பாதித்தால், தாங்கள் வீட்டு வேலைகளைத் திறம்படச் செய்கிறோம் என்று ஒவ்வொரு பெண்ணும் நினைக்க வேண்டும். வெளி வேலைக்குச் சற்றும் குறைந்ததல்ல, பெண்கள் செய்கிற வீட்டு வேலைகள். பெண்கள் வீட்டுக்குள் செய்கிற ஒவ்வொரு வேலைக்கும் சம்பளம் என்று கணக்கிட்டால் பத்தாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் தர வேண்டும். ஆனால், ஊதியம் இல்லை என்பதாலேயே பெண்களின் உழைப்பு புறக்கணிக்கப்படுவது வேதனை.
“ஆண்களின் உழைப்புக்குக் கொஞ்சமும் குறைந்ததல்ல பெண்களின் உழைப்பு. வீட்டு வேலைகளிலும் குழந்தைகள், முதியோர் பராமரிப்பிலும் பெண்கள் செலவிடும் உழைப்பும் நேரமும் ஆண்களைவிட அதிகம். அதற்கெல்லாம் நாம் ஊதியம் தருவதில்லை என்பதாலேயே அதை நாம் புறக்கணித்துவிட முடியாது” என்று 2021 ஜனவரி மாதம் வழங்கிய ஒரு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. கார் விபத்தில் பலியான இல்லத்தரசிக்கு அவரது வீட்டு வேலைகளுக்கான ஊதியத்தை அடிப்படையாகக் கொண்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, பெண்களின் உழைப்புக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம்.
இன்று பெண்ணியம் என்பதே தவறான சொல்லாகப் பார்க்கப்படுவதற்குக் காரணம், பெண்ணியம் என்கிற பெயரில் வெளிப்படுகிற ஆண் வெறுப்புச் சிந்தனை. ஆண் செய்யக் கூடிய அனைத்தையும் செய்ய முயல்வது பெண்ணியமல்ல. ஆணால் தொட முடியாத உயரங்களையும் அடைவதுதான் பெண்ணியம். ஆணையும் பெண்ணையும் சமமாக நடத்தும் போது அங்கே பெண்ணுரிமை முழக்கத்துக்கு அவசியமில்லை. நாம் அப்படிச் செய்யத் தவறுகிற போது, ஆணாதிக்கச் சிந்தனையோடு வளர்க்கப்பட்ட ஆண்கள் சமூகத்தின் எல்லா நிலைகளிலும் பெண்களை அடிமைப்படுத்திக்கொண்டு தான் இருப்பார்கள். அதனால், விழித்துக்கொள்வோம்; ஒன்றிணைந்து செயல்படுவோம்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!