day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஏன் மாதவிடாய் நாட்களில் மனப்பதற்றம் ஏற்படுகிறது? டாக்டர் சுகந்தா

ஏன் மாதவிடாய் நாட்களில் மனப்பதற்றம் ஏற்படுகிறது? டாக்டர் சுகந்தா

பெண்கள் எதிர்கொள்ளும் பலவகைச் சிக்கல்களில் தவிர்க்க இயலாதது மாதவிடாய். இது மாதந்தோறும் ஏற்படும் இயற்கையான நிகழ்வு என்றாலும், மாதவிடாயின்போது, பெண்களில் சிலருக்கு உடல்ரீதியான பாதிப்புடன் மனமும் சோர்ந்துபோகும். சிலருக்குப் படபடப்பும் சேர்ந்துவிடும். அதை பி.எம்.டி. (PRE Menstrual Tension) என்று குறிப்பிடுகிறார்கள். பி.எம்.டி. என்றால் என்ன, அது எந்த வகையில் பெண்களைப் பாதிக்கிறது, அதன் அறிகுறிகள் என்னென்ன போன்ற பலவகையான சந்தேகங்கள் பெண்களுக்கு எழுவது இயல்பு. அப்படியான சந்தேகங்களுக்கு விடை தருகிறார் டாக்டர் சுகந்தா.
கேள்வி: பி.எம்.டி. என்றால் என்ன? அதனுடைய அறிகுறிகள் என்னென்ன?
பதில்: பி.எம்.டி. என்பது ப்ரீ மென்சுரல் டென்ஷன். மாதவிடாய் நாட்களில் நால்வரில் மூவருக்கு இது ஏற்படலாம்.இது அதிகமாகும்போது, அதை மென்சுரல் சின்ட்ரோம் என்று கூறுகிறோம்.
கேள்வி: இவை இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
பதில்: நம்முடைய மனம் சார்ந்த பிரச்சினைகளை ரத்தப் பரிசோதனை மூலம் கண்டறிய முடியாது. உடல் சார்ந்த அறிகுறிகளே ரத்தப் பரிசோதனையில் தென்படும். ஆகவே, நாம் அதைச் சரிப்படுத்த ஒரு மருத்துவரைப் பார்க்க வேண்டி உள்ளது. பொதுவாக, மாதவிடாய் ஏற்படுகிற வயதுக்குள் இருக்கும், 15 வயது முதல் 45 வயது கொண்ட பெண்களிடம் உடல்ரீதியில் அந்த அறிகுறிகள் நேரிடையான தொடர்பு கொண்டதாக இருந்தால் நாம் நோயை அறிந்துகொள்ள முடியும். சாதாரணமாக இதை ஆய்வகத்திலோ சோதனை மூலமாகவோ கண்டுபிடிக்க முடியாது.
கேள்வி: மாதவிடாய்க்கு முந்தைய நாட்களில் தற்கொலை எண்ணம் ஏற்படும் என்று சொல்வது உண்மையா?
பதில்: அப்படியான எண்ணம் வரலாம். மாதவிடாய் தவிர்த்த பிற சிக்கல்களுக்கும் பெண்கள் ஆளாகும்போது, அதாவது வேலையில்லாமல் இருந்தாலோ, ஏதாவது பழக்கத்துக்கு அடிமையாகியிருந்தாலோ, இதுபோல், அதிகப்படியான மன அழுத்தம் கொண்டவர்களுக்கு போஸ்ட் மென்சுரல் டென்சன் இருந்தது என்றால், தற்கொலை எண்ணம் எழ வாய்ப்பு அதிகம் உள்ளது. அதேபோல், ப்ரீ மென்சுரல் டென்ஷன் பற்றி அறிந்துகொள்வதற்கு முன்னர் பிற உளவியல்ரீதியான அம்சங்களை ஆராய்ந்துகொள்வது நல்லது.
கேள்வி: சாதாரணமாக இதுபோன்ற நேரத்தில் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் போஸ்ட் மென்சுரல் டென்சன் நேரத்தில் ஆண்கள் மேல் வெறுப்பு வரும் என்றும் சொல்கிறார்களே. அப்படியான வெறுப்பு வர வாய்ப்புள்ளதா?
பதில்: ஆண்கள் மேல் வெறுப்பு வரும் என்று சொல்ல முடியாது. ஆனால், மிகப் பதற்றத்துடன் காணப்படுவார்கள். திடீரென தூக்கத்திலிருந்து விழித்து அழக்கூடும். காலையில் எழுந்த உடன் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். திடீரென ஒரு சோகம் அல்லது பயம் வந்துவிடும். ஒன்று பசியே இல்லாமல் இருப்பார்கள் அல்லது அதிகப்படியாகச் சாப்பிடுவார்கள். சிலர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வார்கள். எதிலும் கவனமின்றி இருப்பார்கள். இவை அனைத்தும் நடத்தைசார்ந்த அறிகுறிகள். உடல்ரீதியான அறிகுறிகள் என்றால், தசைவலி, மூட்டு வலி, தலைவலி போன்றவை இருக்கலாம். நரம்பியல்ரீதியான பிரச்சினை, உடல் சோர்வு, தைராய்டு பிரச்சினை போன்ற எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நாளடைவில் உடல் எடை கூடக்கூடும். அதை வெயிட் கெய்ன் என்றுகூடச் சொல்வார்கள். சிலர் மார்பகம் வலிக்கிறது என்றும் சொல்வார்கள். இதுபோன்ற அறிகுறிகளைக் கொண்டுதான் நாம் நோயைக் கண்டறிய முடியும்.
கேள்வி: இதுபோன்ற நேரத்தில் தம்மை யாரும் கண்டுகொள்ளவில்லை என்கிறபோது பலர் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள் என்றும் அதேநேரத்தில் காதல் தோல்வி அடையக்கூடும் என்றும் சொல்லப்படுகிறதே அது உண்மையா?
பதில்: பொதுவாக இன்றைய காலகட்டத்தில் சமூகம் எதிர்பார்க்கிற மாதிரியான ஒரு வாழ்க்கையைத்தான் நாம் வாழ நினைக்கிறோம். நமக்கான வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ளாமல் சமூகம் விரும்பும்வகையில் வாழ விரும்புகிறோம். சமூகம் நம்மை எப்படிப் பார்க்கிறது, எப்படி மதிப்பிடுகிறது போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாம் எப்படி இருக்கிறோம், எப்படி வாழ்கிறோம் என்பதை இயல்பாக வெளிப்படுத்தாமல் நமது உணர்வுகளை சற்று மிகையாக வெளிப்படுத்துகிறோம். எதிர்தரப்பினரும் அப்படி வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் விளைவே காதல் தோல்வி. காதல் உறவு என்பதால் நமது எதிர்பார்ப்பும் அதிகமாகிவிடுகிறது. இயல்பாக இல்லாமை, சகிப்பின்மை போன்ற காரணங்களால் காதல் தோல்வியில் முடியலாம். ப்ரீ மென்சுரல் டென்ஷன் பாதிப்பு கொண்ட பெண்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுப்பதால் காதல் தோல்வி போன்ற சிக்கல் ஏற்படுகிறது. மற்ற பெண்களைவிட இந்தப் பெண்களுக்குப் பாதிப்பு இருப்பதால் அவர்களிடம் இப்படியான மனப்போக்கு காணப்படக் கூடும்.
கேள்வி: வேறு உறவின் காரணமாக, தன் குழந்தையை அல்லது தன் பெற்றோரைக் கொலை செய்யும் அளவுக்குச் சிலர் செல்கிறார்கள். இதற்குப் பின்னாலும் பி.எம்.டி. இருக்கிறது என்கிறார்களே, அப்படியா?
பதில்: இது மிகவும் தவறான கருத்து. இதுதான் காரணம் என்று சொல்ல முடியாது. ஆனால், இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். நூறு காரணங்கள் இருக்கலாம். முதல் பத்துக் காரணங்களில் ஒன்றாக இது இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதுபோன்ற இயல்புக்குமாறான நடத்தை, உளவியல் கோளாறு போன்றவற்றுக்கு ஏதேனும் சமூகக் காரணத்தையோ மரபியல்ரீதியான காரணங்களையோ கண்டுபிடிக்கிறார்கள். மனரீதியான இந்தப் பிரச்சினைக்கு முக்கியமான காரணமாக பி.எம்.டி. இருக்காது. அதேபோன்று முதல் 10 காரணங்களுக்குள்ளும் இது வராது.
கேள்வி: இந்த பி.எம்.டி.யைக் கையாள உணவுப் பழக்கங்கள் கைகொடுக்குமா, எந்த வகையான உணவு எடுத்துக்கொள்ளலாம்?
பதில்: நாம் அதிக வருத்தமான மனநிலையில் இருந்தாலோ, மன அழுத்தத்தில் இருந்தாலோ என்ன மாதிரியான ஆலோசனையைத் தருவார்கள் என்பது நமக்கே தெரியும். முதலில் நமது பணிச்சுமையைக் குறைப்பார்கள். நமக்குத் தேவையான ஓய்வெடுக்கச் சொல்வார்கள். நிம்மதியான உறக்கத்தை வலியுறுத்துவார்கள். இதுபோன்ற நேரத்தில் கணினி, மொபைல் போன் பயன்பாட்டைக் கண்டிப்பாகக் குறைத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு, உடல் பருமன் போன்ற பிரச்சினைகளைக் கையாள எப்படியான உணவுமுறைகளைப் பின்பற்றுகிறோமோ அதே போன்ற உணவு முறைக்கு மாறிக்கொள்ள வேண்டும். உணவைச் சுருக்கி, உணவு எடுத்துக்கொள்ளும் வேளைகளை அதிகப்படுத்திச் சாப்பிட வேண்டும். மூன்று வேளையில் உண்ணும் உணவை, ஓரிருவேளைகளை அதிகப்படுத்தி சிறிது, சிறிதாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும். ப்ரீ மென்சுரல் நேரத்தில் வயிறு உப்புசம் கொண்டது போல் இருக்கும். வயிறு உப்பலாக, சற்று வீக்கமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இதைக் குறைப்பதற்கு உணவுப் பழக்கம் உதவும். நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்கள், பழங்கள், தானியங்கள் போன்ற உணவுவகைகளை உண்ண வேண்டும். அதேபோல் கால்சியம் அதிகம் உள்ள உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். முக்கியமாக, காபி, டீ போன்ற பானத்தைத் தவிர்ப்பது நல்லது. மது உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மற்றபடி 30 நிமிடம் நடைப்பயிற்சி, மிதிவண்டிப் பயிற்சி, மூச்சுப்பயிற்சி, யோகா போன்ற உடற்பயிற்சியை மேற்கொண்டால் உடல்ரீதியான மனரீதியான மாற்றம் வரும்.
கேள்வி: பி.எம்.டி. என்பது குறிப்பிட்ட வயதுக்குள்தான் வருமா?
பதில்: ப்ரீ மென்சுரல் டென்ஷன் ஏற்படும் வயது என்று பார்த்தால், 15 வயதில் இருந்து 45 வயது வரை இருக்கலாம். சராசரி இந்தியப் பெண்களுக்கு என்றால் 45 வயதுதான். பொதுவாகவே 15 வயதில் இருந்து 45 வயதுக்குள்தான் வரும். இந்த வரம்பைத் தாண்டி வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு.
கேள்வி: இதற்கு நிரந்தரமான தீர்வு கிடையாதா? மெனோபாஸ் காலத்துக்குப் பின்னர்தான் குணமாகுமா?
பதில்: கண்டிப்பாக வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. ப்ரீ மென்சுரல் டென்ஷன் மட்டும்தான் என்றால் மெனோபாஸ்க்கு அப்புறம் கண்டிப்பாக முழுவதும் நின்றுவிடும்.
கேள்வி: உணவு மூலமாகவும் சிகிச்சை பெறுவதன் மூலமாக நிறுத்த முடியுமா?
பதில்: நமது வாழ்வு முறையை பி.எம்.டி.யைச் சமாளிக்கும் வகையில் மாற்றிக்கொள்வது நல்லது. அதையும்மீறி இதுபோன்று பிரச்சினை வந்தால் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். மன அழுத்தம் போக்கும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரையின்பேரில் எடுத்துக்கொள்ளலாம். உடல் வலி, மூட்டுவலி போன்ற வலிகளுக்கு மருந்து மாத்திரைகள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தியும் பலனில்லை, அடிக்கடி ஏற்படுகிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!