day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

என்று மடியும் இந்த அடிமைக் காலம் – வரலட்சுமி

என்று மடியும் இந்த அடிமைக் காலம் – வரலட்சுமி

சில ஆண்டுகளுக்கு முன்னர் பரதேசி என்று ஒரு தமிழ்ப் படத்தைப் பார்த்தோம். அதில் தேயிலைத் தோட்டத்தில் பாடுபட்ட மக்களின் அடிமை வாழ்க்கை பதிவாகியிருந்தது. இப்போது நாம் ஆண்டான் அடிமைக் காலம் போய் மக்களாட்சிக் காலம் வந்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம். ஆனால், இந்தக் காலத்திலும் எல்லோருடைய வாழ்க்கையும் இப்படி மகிழ்ச்சியாக அமைவதில்லை. சிலரது வாழ்க்கை இன்னும் அடிமை நிலையிலேயே கழிவது வருந்தத்தக்கது. என்றபோதும், அப்படியான நிலையில் சிலர் வாழ்க்கை நடத்திவருகிறார்கள். அவர்களில் ஒருவரது வாழ்க்கை பற்றி அறிந்துகொண்டால் நமது சமூகத்தை மேம்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான சிந்தனையைத் தூண்டக்கூடும். அப்படியான கொத்தடிமை வாழ்வு நடத்தியவர்தான் வரலட்சுமி. அதில் அவர் எப்படிச் சிக்கினார், அந்த வாழ்விலிருந்து அவர் எப்படி மீண்டார் என்பது உள்ளிட்ட அவரது வாழ்க்கையின் சம்பவங்களைத் தெரிந்துகொள்வோமா? அவை நமது வாழ்க்கைக்கான துணிவையும் தைரியத்தையும் தரவல்லவை. அவரிடம் நாம் பேசியதிலிருந்து சில துளிகள்…
உங்களைப் பற்றிச் சொல்லுங்க?
எனது பெயர் வரலட்சுமி. திருவள்ளூர் மாவட்டம், திருத் தணி தாலுகா, கன்னிகாபுரம் பஞ்சாயத் தில் உள்ள கங்கையம்மன் நகரில் வசித்துவருகிறேன். நாங்க ரைஸ்மில்லில் கொத்தடிமையாக வேலை செய்து வந்தோம். எனது கணவர் பெயர் கோபால். எனது கணவர் எங்களது திருமணத் திற்காக ஐந்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். வாங்கிய பணத்துக்கு வட்டிக்கு மேல் வட்டி போட்டுள்ளனர். சுமார் 30 ஆயிரம் ரூபாய் கணக்கு எழுதி வைத்திருக்கிறார்கள். எனது கணவர் வாங்கிய கடனுக்காக என்னையும் வேலை செய்யச்சொல்லி வற்புறுத்தினார்கள். எனக்கு ரைஸ்மில்லில் நெல்லை வேக வைக்கும் வேலை என்றார்கள். என்னால் அந்த வேலையின் கஷ்டத்தைப் பொறுக்க முடியாது என்பதால் நான் எனது மாமியார் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
ஆனால் ரைஸ்மில் ஓனர், எனது கணவரிடம் உனது மனைவியும் வேலை செய்தால்தான் கடன் தீரும். அதனால் உனது மனைவியை அழைத்துவா என்று சொல்லியிருக்கிறார். எனது கணவர் என்னை அழைத்துச்செல்வதற்காக வந்திருந்தார். நான் அவருடன் செல்ல மறுத்துவிட்டேன். பிறகு ரைஸ்மில் ஓனரும், எனது கணவரும் வந்து மாமியார் வீட்டிலிருந்த என்னை இழுத்துச் சென்றார்கள்.
எனக்கு நெல்லை வேக வைக்கும் வேலை பற்றித் தொடக்கத்தில் எதுவும் தொியவில்லை. அதனால் எனது கணவருக்கு உதவியாக சிறு, சிறு வேலைகளைச் செய்தேன். துடைப்பத்தைக் கொடுத்து அந்தப் பகுதி முழுவதையும் சுத்தம் செய்யச் சொல்வார்கள். மாலை 4 மணிக்கு ஆரம்பிக்கும் வேலை, முடிவதற்கு விடியற்காலை 4 மணி ஆகிவிடும்.
ஒருமுறை நெல்லை வேக வைத்துக் கொண்டிருந்தபோது என் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டது. உடனே எனது கணவர் கையில் வைத்திருந்த ஒரு அன்னக்கூடை நெல்லைக் கீழே போட்டுவிட்டு என்னைக் காப்பாற்றினார். அதற்கு ஓனர் வந்து ’உன் மனைவி என்ன செத்தா போயிட்டா? இப்ப ஒரு அன்னக்கூடை நெல் வீணாகிப்போச்சே’என்று திட்டினார். அதுமட்டுமல்லாமல் அடிப்பதற்குக் கையை ஓங்கிக்கொண்டு வந்தார். தீக்காயத்துக்கு எந்த விதமான மருத்துவ சிகிச்சையும் கொடுக்கவில்லை. மருத்துவமனைக்குப் போவதற்கும் அனுமதிக்கவில்லை. தேங்காய் எண்ணெயைப் போட்டால் சரியாகிவிடும் என்று சொல்லி தேங்காய் எண்ணெயைப் போட்டு உட்காரவைத்துவிட்டார்கள்.
அதுமட்டுமல்லாமல் நான் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தபோது ஒருமுறை நெல்லைக் கொட்டும்போது கீழே விழுந்துவிட்டேன். அப்போது என் காதில் இருந்து ரத்தம் வெளியேறியது. அப்பொழுதுகூட மருத்துவமனைக்கு அனுப்ப வில்லை. ஒரு மூலிகைப் பட்டையை எடுத்துவந்து எண்ணெயில் ஊறவைத்துக் காதில் ஊற்றினார்கள். அப்பக்கூட காதில் ரத்தம் நிற்கவில்லை. ஒரு முதலுதவிக்கோ, மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வதற்கோ என்னை மருத்துவமனைக்கு அனுப்ப வில்லை. மீண்டும் தொடர்ந்து ரைஸ்மில்லில் வேலை செய்துவந்தேன்.
ஒருநாள் திடீரென இடுப்பு வலி ஏற்பட்டது. இதை என் கணவரிடம் தொிவித்தேன். உடனே எனது கணவர் மருத்துவமனைக்குச் சென்று பிரசவம் பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னார். ஓனரிடம் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக அனுமதி கேட்டபோது, அவர் மருத்துவமனைக்கு எல்லாம் செல்ல வேண்டாம். இங்கேயே ரைஸ் மில்லிலேயே பிரசவம் பார்க்கிறவர்கள் யாராவது இருந்தால் அவர்களை வைத்துப் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார். உடனே ரைஸ்மில்லில் உள்ள ஒருவரிடம் கேட்டதற்கு, அவர் இதெல்லாம் மருத்துவமனைக்குப் போனால்தான் பார்க்க முடியும் என்று சொல்லிவிட்டார். உடனே, எனது கணவர் முதலாளியிடம் திரும்பவும்போய் மருத்துவமனைக்குச் செல்வதற்காக அனுமதி கேட்டபோது, அவர் இங்கேயே பிரசவம் பார்க்கிறதா இருந்தா பாருங்கள். குழந்தை செத்தா செத்துப்போகட்டும் என்கிற மாதிரியாக எனது கணவரிடம் கண்டிப்புடன் கூறிவிட்டார். உடனே, நான் இதுக்குமேல் இங்கு இருக்கக் கூடாது என்று யாரிடமும் சொல்லாமல் கழிவறைக்குப் போவதுபோல், நடந்தே மருத்துவமனைக்கு வந்துவிட்டேன்.
மருத்துவமனையில் செக்கப்புக்கு இதுவரை செல்லவில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு நான், ’ரைஸ் மில்லில் வேலை பார்க்கிறேன். என்னால் வர இயலவில்லை’ என்று சொல்லிவிட்டேன். மருத்துவமனையில் ஆபரேசன் செய்தால்தான் குழந்தையை வெளியே எடுக்க முடியும் என்று சொல்லிவிட்டார்கள். அதற்கு எனது கணவர் கையெழுத்திட வேண்டும் என்றும் கண்டிப்புடன் சொல்லிவிட்டார்கள். உடனே மருத்துவமனையில் இருந்து ஒருவர் மூலம் ரைஸ்மில்லில் இருக்கும் எனது கணவருக்கு தகவல் சொல்லி அனுப்பினோம். ஆனால், அந்த ரைஸ்மில் ஓனர், நம்ம சொல் பேச்சு கேட்காமல் போயிடுச்சில்ல, நீ போகாத என்று எனது கணவரைத் தடுத்து நிறுத்திவிட்டார்.
எனது கணவர் வராததால் நான் மருத்துவமனையில் கதறி அழுதேன். நான் அழுவதைப் பார்த்த பக்கத்து பெட்டில் இருந்து ஒரு அம்மா ‘என் பொண்ணு மாதிரி இருக்க, நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்’ என்றபடி என்னுடைய ஆபரேசனுக்கு அந்த அம்மாதான் கையெழுத்துப் போட்டாங்க. அதன்பின்தான் எனக்கு ஆபரேசன் செய்தார்கள். எனக்குப் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையைப் பார்க்கக்கூட எனது கணவர் வரவில்லை. பின்னர் அந்த அம்மா கையெழுத்துப் போட்ட பின்னர்தான் என்னை மருத்துவமனையிலிருந்து அனுப்பிவைத்தார்கள்.
அங்கிருந்து ஆட்டோ பிடித்து நேராக ரைஸ்மில்லுக்கே குழந்தையுடன் சென்றேன். உடனே உன்னையும், குழந்தையையும் மருத்துவமனையில் வந்து பார்க்க முடியவில்லையே என்று எனது கணவர் அழ ஆரம்பித்துவிட்டார். பின்னர் சமாதானமும் ஆகிவிட்டார். ஆனால், அந்த ரைஸ்மில் ஓனரோ எதுவும் சொல்லவில்லை. சுமார் 9 நாட்கள் மட்டுமே ஓய்வில் இருக்க அனுமதித்தார்கள். பின்னர் திரும்பவும் துடைப்பத்தைக் கையில் கொடுத்து வேலை செய்யச் சொல்லிவிட்டார்கள்.
எனது கணவர், ரைஸ்மில் ஓனரிடம் எனது மனைவிக்குப் பொிய ஆபரேசன் செய்திருக்கிறார்கள். அதனால் அவளை வேலை எல்லாம் செய்யச் சொல்ல வேண்டாம் என்றும், நாளைக்கே அவளுக்கு ஏதாவது நடந்துவிட்டால் அவர் குடும்பத்தினருக்கு யார் பதில் சொல்வார் என்றும் சொன்னார். அதற்கு ரைஸ் மில் ஓனர், அதெல்லாம் எதுவும் ஆகாது. ஏதாவது ஆனால் பார்த்துக்கொள்ளலாம் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
அப்படி, இப்படியாகப் பல்லைக் கடித்துக்கொண்டு காலத்தைக் கடத்தினோம். குழந்தைக்கும் 5 வயதாகிவிட்டது. மற்ற குழந்தைகள் எல்லாம் பள்ளிக்குப்போவதைப் பார்த்து என்னுடைய குழந்தைக்கும் பள்ளிக்குப் போக வேண்டும் என்ற ஆசை வந்தது. உடனே, ஓனரிடம் போய்க் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று அனுமதி கேட்டதற்கு, ’படிச்சி என்னத்த கிழிக்கப்போவுது. பேசாமல் ரைஸ்மில்லிலேயே ஏதாவது வேலை செய்யச்சொல்லு’ என்று சொல்லிவிட்டார்.
உடனே, நான் நம்ம நிலைமைதான் குழந்தைக்கும்போல என்று நினைத்து அவ்வப்போது அழுதுகொண்டேயிருந்தேன் பின்னர் அங்கு ஒரு அம்மா தன்னுடைய குழந்தைகளை ஹாஸ்டலில் கொண்டுபோய் விடப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு இருந்தார். உடனே நானும் எனது குழந்தையைக் கூட்டிச்செல்லும்படி கேட்டேன். ஹாஸ்டல் எங்க இருக்கிறது என்று முகவரி எல்லாம் கேட்டேன். காஞ்சிபுரத்தில் உள்ளது என்று சொன்னார்கள். எனது கணவருக்கும், முதலாளிக்கும் தொியாமல் என் குழந்தையை அனுப்பிவைக்கிறேன். அவளை ஹாஸ்டலில் சேர்த்துவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். நான்தான் கொண்டு சேர்த்துவிட்டேன் என்று யாரிடமும் சொல்லக் கூடாது என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டுதான் அந்த அம்மாவும் சம்மதம் தொிவித்தார். அந்த அம்மாவோவின் பசங்களோடு சேர்த்து என் பொண்ணையும் அனுப்பிவைத்தேன்.
உன் பொண்ணை எங்கே என்று முதலாளி கேட்டார். அதற்கு என் பொண்ணு என் மாமியார் வீட்டில் இருக்கிறாள் என்று சொல்லிவிட்டேன். என் பொண்ணு இப்போது 7ஆவது படிக்கிறாள். ஹாஸ்டலில் சேர்த்துவிட்டதில் இருந்து இன்றுவரை என் பொண்ணை நான் பார்க்கவில்லை. ஒருமுறை ஹாஸ்டலில் கிறிஸ்மஸுக்கு லீவு விட்டபோது, அங்கே உள்ளவர்கள் எல்லோரும், அந்த அம்மாவிடம் என் குழந்தையை அழைத்துக்கொண்டு என்னிடம் காண்பியுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். அவர் என்னிடம் என் குழந்தையை அழைத்து வந்திருந்தார்.
அப்போது ரைஸ்மில் முதலாளி, என் மகளைப் பார்த்து இந்தப் பொண்ணு இத்தனை நாளா எங்க இருந்தாள், கிராமத்தில் இருந்தால் இந்த அளவுக்கு டீசன்டா பேச மாட்டாளே என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார். உடனே என் பொண்ணு, நான் ஹாஸ்டலில் தங்கியிருந்து படிக்கிறேன் என்று சொன்னாள். அதைக் கேட்டதும் ரைஸ்மில் ஓனர், இனி படிக்க எல்லாம் போக வேண்டாம் உன் அம்மாவுக்கு ஒத்தாசையாகக் கூட மாட இங்கேயே வேலை பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டார். அதில் இருந்து என் பெண்ணைப் படிக்க அனுப்ப முடியவில்லை.
பின்னர் 12 வயதில் பெரியவளாகிவிட்டாள். வயதுக்கு வந்து ஒரு வருடம்தான் ஆனது. அதுக்குள்ளேயே அவளுக்குக் கல்யாணம் செய்து வைத்துவிட்டார்கள். மருமகனும் அங்கேயேதான் வேலை செய்துவந்தார். பின்னர் சுமார் 1 வருடம் கழிந்தது, மருமகன், உங்க அப்பா, அம்மா வாங்கிய கடனுக்கு அவர்கள் வேலை செய்யட்டும். நான் எதற்கு வேலை செய்ய வேண்டும். நான் போகிறேன் என்று சொல்லிவிட்டு அன்றைக்குப் போனவர்தான் இன்றுவரை வரவில்லை. அதன்பின்னர் என் மகள் அங்கேயே வேலை பார்த்துக்கொண்டு எங்களுடனே இருந்துவிட்டாள். சில நாட்களுக்குப் பின்னர் எங்களுக்கு ஒருவர் உதவி செய்தார். அதனால்தான் நாங்கள் ரைஸ்மில்லில் இருந்து வெளியில் வர முடிந்தது.
2004-ம் ஆண்டு கொத்தடிமையாக இருந்த நாங்கள் மீட்கப்பட்டோம். சுமார் ஒரு வருடமாக வறுமையில் வாடினோம். பின்னர் அரசு உதவித்தொகை மூலம் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டு, கூலி வேலை செய்துகொண்டு வாழ்க்கையை நடத்திக்கொண்டும் இருந்தோம். பின்னர் ‘விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் மறுவாழ்வு நலச்சங்கம்’ சார்பில் மாதந்தோறும் கூட்டம் நடக்கும். அதில் நமக்கான அரசு சலுகைகள் என்னென்ன, அதை எப்படிப் பெற வேண்டும் என்று வழிகாட்டுவார்கள். ஒவ்வொரு மாதமும் நம் வாழ்க்கைக்குத் தேவையான விழிப்புணர்வுக் கூட்டம் நடத்துவார்கள். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, ஜாதிச் சான்றிதழ் மற்றும் பல அரசு சலுகைகள் போன்றவற்றை எவ்வாறு பெறுவது என்பனபோன்ற வழிமுறைகளைச் சொல்லித்தந்தார்கள். அதைக் கேட்டு அதன் படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு எனக்கும், என்னுடன் இருக்கும் 38 குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கும் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் அரசு சலுகைகளை வாங்கிக் கொடுத்துள்ளேன்.
விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள் மறுவாழ்வு நலச்சங்கத்தின் திருவள்ளூர் மாவட்டத் தலைவியாக இருக்கிறேன். மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் ஒரு பதவியிலும் இருக்கிறேன். SRLM என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குழு அமைக்கப்பட்டு, அரசின் சலுகைகள், திட்டங்கள் மற்றும் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்தக் குழுவில் ‘டிரஸ்சர் கோஆர்டினேட்ட’ராக இருக்கிறேன்.
தனியாக வேலை ஏதும் செய்கிறீர்களா? அங்க மட்டும்தான் வேலை செய்கிறீர்களா?
தனி வேலை என்றுதான் சொன்னார்கள். 8 பேருக்குத் தையல் மிஷின் கொடுத்தார்கள். அதை வைத்து எங்களுக்குத் தேவையான வருமானத்தை ஈட்டுகிறோம். அதனால் எங்களுக்கான வாழ்வாதாரம் அதிகரித்திருக்கிறது. இப்பொழுது சந்தோசமாக வாழ்ந்து வருகிறோம். அதேபோன்று கொரோனா நோய் பெருந்தொற்று காலத்தில் எங்கள் சமுதாய மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கே, அதாவது சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்த நேரத்தில், எனது தலைமையில் மாவட்ட நிர்வாகத்தை அணுகி அரிசி, பருப்பு கிடைக்க வழிவகை செய்தோம். அதேபோன்று எங்க சமுதாயத்தைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்க வழியில்லாமல் இருந்தார்கள். அவர்கள் அனைவரையும் தற்போது பத்தாவது வகுப்புவரை படிக்கக்கூடிய அளவுக்கு கொண்டுவந்துள்ளேன்.
உங்க குழந்தைகள் என்ன படிக்கிறார்கள்?
எனக்கு ஒரே ஒரு பெண் குழந்தைதான். என்னுடைய பெண் 7வது வரைதான் படித்துள்ளார். முதல் திருமணமாகி கணவர் விட்டுச் சென்றுவிட்டார் என்று ஏற்கனவே சொன்னேன் அல்லவா? அவள் டெய்லரிங் வேலை பார்த்துவருகிறாள். இன்னொரு திருமணம் செய்து மகளுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். அவருடைய பிள்ளைகள் முறையே 10ஆம் வகுப்பு, 6ஆம் வகுப்பு மற்றும் 3ஆம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்போதுதான் என்னுடைய குடும்பம் சந்தோசமாக இருக்கிறது. திருமண வயது பூர்த்தி ஆகாதவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பவர்களை அடையாளம் கண்டு அந்தத் திருமணத்தை தடுத்து நிறுத்துவது போன்ற சமூக சேவையும் செய்திருக்கிறேன்.
நான் பட்ட கஷ்டம் இனி யாருக்கும் வரக் கூடாது. அதேபோன்று, தமிழகம் முழுவதும் உள்ள கொத்தடிமைகள் மீட்கப்பட வேண்டும். வறுமையில் வாடுபவர்கள் தங்களுடைய வறுமையில் இருந்து மீண்டு வரவேண்டும் என்பதே என்னுடைய ஆசை.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!