day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

என் அம்மா ஒரு பெண்ணியவாதி

என் அம்மா ஒரு பெண்ணியவாதி

2015 முதல் ஆங்கிலத்தில் புனைவுகள் எழுதிவரும் ஜெயந்தி சங்கர் தனது ஆங்கிலச் சிறுகதைகளை சங்கரி என்ற தனது இல்லப்பெயரில் தானே இந்நூலில் மொழியாக்கம் செய்துள்ளார். இச்சிறுகதை Dangling Gandhi என்ற இவரது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையின் தமிழ் வடிவம். இந்த மொழியாக்க நூல் இனிமேல் தான் அச்சாகவிருக்கின்றது. இதுவரை பல்வேறு விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பெற்றுள்ள Dangling Gandhi நூல் American book fest வழங்கும் 2020 International Book Award, Literary Titan award ஆகிய அனைத்துல விருதுகளையும் வென்றுள்ளது. 1995 முதலே இலக்கியவுலகில் தொடர்ந்து இயங்கி வருகிறார். தற்போது ஆங்கிலத்தில் தனது முதல் நாவலை எழுதி முடித்து நூலாக்கத்திற்காகக் காத்திருக்கும் இவர் இரண்டாவது ஆங்கில நாவலுக்கான பணியைத் தொடங்கிவிட்டார். இவரது ஆக்கங்கள் வேற்றுமொழியில், குறிப்பாக ஆங்கிலம், ரஷ்யன், இந்தி, ஃப்ரெஞ்சில் மொழிபெயர்ப்பு கண்டு வருகின்றன. ஆனந்தவிகடன் நம்பிக்கை விருது உள்ளிட்ட பல்வேறு பரிசுகளும் முக்கிய விருதுகளும் வாங்கியுள்ள இவரது ஒவ்வொரு நூலும் ஏதோவொரு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அண்மைக்காலமாக ஓவிய முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
பாங்கிட் சாலை ‘ஹாக்கர் சென்டர்’ அருகே நடந்து கொண்டிருந்தேன். வெகு சீக்கிரமே நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று அப்போதுதான் எனக்குத் தோன்றியது. சமீபகாலமாய் அடிக்கடி இவ்வாறு தோன்றுகிறது. இளம் மலாய் பெண் ஒருத்தி என்னைப் பார்த்து சட்டென்று அதிர்ச்சி அடைந்தவளைப் போல கலவரத்தோடு தூர விலகி ஓட்டமாய் நடந்தாள். அப்போதுதான் அந்த சொற்களை உரக்க முணுமுணுத்தேன் என்பதே எனக்கு விளங்கியது. ஒரு பொதுத் தொலைபேசியைத் தேடியலைந்தேன்.
ரோஸ் இரண்டாம் ஒலிப்பிலேயே அழைப்பை எடுத்து விட்டாள். ‘யார் பேசுவது?’ என்று சற்றே கவனமான, ஆனால் இனிய பாடல் போன்ற தொனியில் ராகமாய்க் கேட்டாள்.
“தாவேய்” என நான் பதிலளித்ததும் அடுத்த சில நொடிகளுக்கு ரோஸ் மௌனமானாள். மறுபக்கம் அவள் விட்ட மென்மையான சுவாசத்தை என்னால் கேட்க முடிந்தது. ஒருவேளை அது என் கற்பனையாகவும்கூட இருக்கலாம்.
“என் நம்பர ஏன் ‘பிளாக்’ பண்ண ரோஸ்?” என்று கேட்கும்போதே என் பின்னால் இருந்த கோழி பிரியாணிக் கடையிலிருந்து இறைச்சி வெந்த வாடை மூக்கில் மோதி என் பசியைக் கிளப்பியது. என்னையும் அறியாமல் தலையைத் திரும்பிப் பார்த்தேன். உணவகத்தில் அமர்ந்து ‘சைனீஸ் செக்கர்ஸ்’ விளையாடிய முதியவர்கள் சிலர் செய்த சத்தம் என்னை உரக்கக் கத்த வைத்தது. “உனக்கு ஃபேஸ்புக்ல ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பிருந்தேன், அதையும் நீ ரிஜெக்ட் பண்ணிட்ட.”
“என்னைத் தொல்ல பண்ணாதனு பலதடவ உன்கிட்ட சொல்லிட்டேன். உனக்கு இங்லீஷ் புரியாதா?” ரோஸ் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டாள். அவளது குரலில் இருந்த திடீர்க் கடுமை என்னை வியப்பில் ஆழ்த்தியது.
“நா விரும்பறதெல்லாம் உன் நட்ப மட்டும் தானே ரோஸ். ப்ளீஸ்.”
“ஆனா, எனக்கு உன்னோட நட்பு வேணாமே. உன் வயசு நண்பர்களே இல்லயா, உனக்கு?“
“அவங்களையெல்லாம் விட்டுட்டேன். அவங்களோடு பயங்கரமா சண்ட போட்டேன். அவங்களும் என்னைய அவாய்ட் பண்றாங்க, கண்டபடி கேலி செய்றாங்க. எல்லாத்துக்குமே காரணம் நீதான்.” புரிய வைக்க எவ்வளவோ முயன்றேன். ஆனால் அவள் கேட்பதாயில்லை.
“முட்டாள் தனமாகப் பேசாதலா. அவங்கள விட்ருனு நானா உன்கிட்ட சொன்னேன்?”
“பிட்ச்!” என்றபடி தொலைபேசியின் ‘ரிசீவரை’ ஓங்கி அதன் இடத்தில் அறைந்தேன். யாரேனும் கேட்டு விட்டார்களா என சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துக் கொண்டேன்.
எனக்கு இரு வாரங்களுக்கு முன்னர் வந்த ‘வாட்ஸ்ஆப்’ அழைப்பு நினைவுக்கு வந்தது. அதற்கு முன்னால் குழுவிலேயே ஒவ்வொருவரும் என்னைப் பற்றி பகடி செய்து என்னைக் கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.
“தாராளமா உங்க தோழிகள கூட்டிட்டு வரலாம். தாவேய் அவனோட புத்தம்புது ‘கேர்ள் ஃப்ரெண்ட்’டோட வரலாம்.” – ஹான்.
என் பால்ய நண்பன் ரவி மட்டும் அன்றைக்கு என்னைத் தடுத்திருக்காவிட்டால ஹானைக் கொன்றுவிட அவன் வீட்டுக்கே போயிருப்பேன்.
வியர்க்க விறுவிறுக்க, பதட்டமாக நடந்தேன். புகிட் பாஞ்சாங் பிளாசாவின் கீழ்த் தளத்தில், முன்பொரு பொதுத் தொலைபேசியைப் பார்த்திருந்தேன். அங்கே போன பிறகுதான் என்னிடம் இருபது காசு இல்லை என்பது எனக்குத் தெரிந்தது. சில்லறை மாற்றவென்று அவசரமாக மெக்டொனால்ட்டில் சிறிய கோக் வாங்கப் போனேன். அங்கே போனதும் எனக்கு ஒரு டபுள் சீஸ் பர்கர் சாப்பிடும் ஆவல் மிகுந்தது. ஆனால் ரோசை அழைத்த பின்னர் வாங்கித் தின்ன முடிவு செய்தேன்.
முதல் முறையாக என் சமீபகாலப் பசி மிகுதியை சற்றே கவலையோடு உணர்ந்தேன்.
“நீ ஹாவ், ரோஸ் என்ன மீண்டும் வாட்ஸ்ஆப்பில் சேர்த்துக்கோ ப்ளீஸ்,” அவளது குரலைக் கேட்டதுமே கெஞ்சினேன்.
“மறுபடியும் நீயா? இங்க பாரு, நீ நல்ல குடும்பத்துப் பையனா தெரிற,..”
“வேற எதுலயும் கவனம் குவிக்க முடில ரோஸ். மறக்கமுடில ரோஸ் உன்ன. என்கூட சேந்தா உன் வருமானம் பாதிக்கப்படும்னு பயப்படறியா?”
“ஆமா, எனக்கு என்னோட ஆண் வட்டத்த விரிவாக்கணும். உன்னமாதிரி உணர்ச்சிப் பிழம்பெல்லாம் கண்டிப்பா என்ன பாதாளத்துக்கு இழுத்துரும்.” – கத்தினாள். “என் சேவை தேவைனா என் ஏஜேண்ட்கிட்ட பேசு.”
“ஒழுக்க விதிகள் பூஜ்ஜியமான இதெல்லாம் ஒரு தொழிலா?” -அவளை உசுப்பேற்ற முயன்றேன்.
“அன்னைக்கி ராத்ரி நீ என்கிட்ட வந்தப்ப ரொம்ப ஒழுக்கசீலனாதான் இருந்தியா? உங்கம்மா புகட்டிய வார்த்தைகளை இங்க என்கிட்ட வந்து துப்பாத, சரியா?”
“தற்கொல செஞ்சிகிட்டு, அதுக்குக் காரணம் நீதான்னு எழுதி வைப்பேன்.”
“இங்க பாரு, மறுபடியும் என்னைக் கூப்பிடாத. கூப்டா போலீஸ்க்குப் போவேன்.”
“ஓகே போ, போய் புகார் செய். உன் குடும்பத்துக்கு நீ என்ன மாதிரி வாழ்க்கை வாழறன்னு தெரியட்டுமே. முக்கியமா உன் மகளுக்கு தெரியணும். பத்தொன்பது வயசாச்சில்ல, அவளுக்கு நல்லாவே புரியும்.”
“வாய மூடுடா பன்னி!” – இரைந்து கத்தி இணைப்பைத் துண்டித்தாள்.
“நீதான் நாய்.”
“அம்மா, நீ இன்று இரவு திரும்பி வருவாயா?” – என் அம்மாவுக்கு செய்தி அனுப்பினேன்.
“நாளை இரவுதானே. ஏன்?” அம்மா ஒரு பெரிய ஸ்மைலியுடன் பதில் போட்டாள்.
துக்கத்துக்கு வந்த எல்லா உறவினர்களும் போயிருப்பார்கள். ஏன் அம்மா திரும்பிவர மேலும் ஒருநாள் எடுக்கவேண்டும் என வியப்பாக இருந்தது. பதிலாக, “எனக்கு ரொம்பப் பசிக்கிது,” என செய்தி அனுப்பினேன். அம்மா ஒரு சலிப்பு ஸ்மைலி அனுப்பிவிட்டு போய்விட்டாள். “பசிச்சா ஹாக்கர்லபோய் சாப்டுடா” என்ற அம்மாவின் குரல் ஒலித்தது.
வீட்டு வாசல் கதவு திறக்கும் ஓசை கேட்டு தூக்கத்திலிருந்து சட்டென விழித்துக் கூடத்துக்குள் நுழைந்தேன். கண்களைக் கசக்கிக் கொண்டேன்.
“ஏதுவுமே சரியில்லம்மா.”
அம்மாவைக் கண்ட கணத்தில் பசியில் வயிறு கண்டபடி ஓலமிட்டது.
“உன் ரிசல்ட்ஸ் வரப்போகுதில்ல, அதுனால ஸ்ட்ரெஸ் ஆயிருப்ப,” என்றாள் அம்மா தொலைக்காட்சியில் இருந்து கண்களை எடுக்காமலே.
“ஐயோ, வந்ததுமே ஏம்மா டிவி?”
காலையில் இருந்தே மேக மூட்டமாகவும், வெளிச்சம் குறைவாகவும் மழை வருவதுபோல இருந்தது. என் வயிற்றில் இருந்த அமிலங்களோ பெரிய ரகளை செய்து கொண்டிருந்தன. இரு ரொட்டித் துண்டுகளைக் கையில் எடுத்தேன். “சமைக்கலயாம்மா?”
“ம், சமைக்கலாம்.”
“எனக்குள்ள பலவித குரல்கள் கேக்குதுமா.”
“குரல்களா? நீ ரொம்பக் களைப்பா இருக்க, அதான்.“ தன் கையை நீட்டி என் நெற்றியைத் தொட முயன்றாள். தலையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாலும் நான்கு விரல்களால் என் நெற்றியைத் தொட்டு ஏவிட்டாள். “காய்ச்சல் இல்லயே.”
அவசரமாக ஒரு ரொட்டித் துண்டை விழுங்கினேன். “எனக்கு ஷிசோஃப்ர்னியா இருக்குனு நெனைக்கறேன்மா.”
“எதையாச்சும் உளறாத. நெறைய கூகிள் செய்றனு நெனைக்கறேன்” அவள் சிரிக்க முயன்றாள்.
“ஈரச் சந்தைக்குப் போகப் போறேன். என்னோட வறியா? திரும்ப வரும்போது அங்கயே நாம பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்.”
“நா இந்த உலகத்துல வாழவே லாயக்கில்லனு அந்தக் குரல் என்கிட்ட சொல்லுதும்மா, சமீப காலமா நானே என்னோடு பேசறதும் அதிகரிச்சிட்டே போகுதுனு ஃப்ரெண்ட்ஸ் சொல்றாங்க.”
அம்மா என் சமீபத்திய குறுஞ்செய்திகள் பற்றிக் குறிப்பிட்டு தன் கவலையை மீண்டும் தொடக்கத்தில் இருந்து விளக்கினாள். மனதை வலுவாக்கிக் கொள்வதன் முக்கியத்துவம் பற்றி எனக்கு உரை நிகழ்த்தினாள். அவளை முறைத்து என் உள்ளங்கையை விரித்து உயர்த்திக் காட்டி ‘ நிறுத்து’ என சைகை செய்தேன்.
“மணி இன்னும் ஒன்பது கூட ஆகல. நீ ஏன் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கக் கூடாது?”
“அப்ப நா கற்பனை செய்றேனு நெனைக்கிறாயா?” தீவிர முகபாவத்துடன் கேட்டேன். “ரொம்பப் பசிக்கிதுமா. எனக்கு கப் நூடல்ஸ் செஞ்சி தா. உன்னோட சந்தைக்கி வறேன்.”
“எதாச்சும் ஜிம்ல சேந்து, உடம்பை சுறுசுறுப்பாக வைச்சிக்கப்பாரு.”
“நாங்கண்டிப்பா உங்கிட்ட ஒரு விஷயத்தப் பத்தி சொல்லியே தீரணும்மா” கூச்சலிட்டு டிவியை அணைத்தேன்.
“என்னோட இந்த ரகசியத்தோடயேதான் நீ சாவேன்னு என் தலைல அடிச்சி சத்தியம் செய்.”
“தாவேய்.. ப்ளீஸ் அதைப்போடேன். அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதிப் பிரச்சார ஒளிபரப்பு.”
புன்னகையுடன் அம்மா டிவி ரிமோட்டை நோக்கிச் செல்வதைக் கண்டதும், “உன் யூஎஸ், உனது ஹிலாரி எல்லாம் ஒழியட்டும்” என கன்னா பின்னாவென்று கத்தினேன்.
“இப்ப என்ன ஆச்சி உனக்கு?” அம்மா கொஞ்சம் கவலையோடு கேட்டாள். “பசியா?”
“எப்போதான் பசிக்கல எனக்கு?”
“அதுக்கு நாந்தான் காரணம்னு சொல்றியா? இதுமாதிரி கண்டபடி கத்தாத. உன்னோட ஹார்மோன்கள் மீது போடு பழிய. பசிச்சா சாப்டு, கத்தாத.”
“என் பசிய நெனச்சி நா ஏற்கனவே நொந்து போய்ருக்கேன். இதுக்கு ஏதாச்சும் செய்ய முடியுமானு மண்டையப் பிச்சிட்ருக்கேன்.”
“ஏன்? ஹானோடு சண்டையா?”
“ஒவ்வோர் இரவும் நா ஒரு பெண்ணப் பத்திக் கனவு கண்டு, அந்தத் தொந்தரவுல சில வாரங்களா சரியாவே தூங்கலம்மா. போன வாரம் ஒருநாள் முப்பத்தோராம் மாடி வரை போய்ட்டு சட்டுனு திரும்பி வந்துட்டேன்.”
“இவ்வளவு அசடா இருக்காதடா தாவேய்! உனக்கு ஓய்வு தேவை. உன்னோட முன்னாள் காதலியா?” அவள் டானிஷ் பாத்திரத்தைப் பாதி தண்ணீர் நிரப்பி அடுப்பின் மீது வைத்தபடியே பேசினாள்.
அம்மாவைத் தொடர்ந்து சமையலறைக்குள் போனேன். “இல்லமா. நாற்பத நெருங்கிட்ருக்கற ஒரு பொண்ணு.”
அம்மா குளிர்பதப் பெட்டியை நெருங்கி அதனுள் இருந்தவற்றை ஒவ்வொன்றாக வெளியில் எடுத்தாள். உறைந்த பட்டாணியை ‘ப்ரீசர்’லிருந்து எடுத்து, காரட். பீன்ஸ், பூண்டு மற்றும் காளான்களை காய் வெட்டும் பலகை மீது வைத்து வெட்டத் துவங்க்கினாள்.
“வெறும் கனவுதானே!” என்றாள்.
வெங்காயம், காய்கறித் துண்டுகளை ஒரு தனி வாணலியில் வதக்கி, நூடுல்சை வேக வைக்கும் பாத்திரத்தில் போட்டு, கொஞ்சம உப்பு மற்றும் மிளகுப்பொடி தூவி அதை நிறைவு செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“ஒரு பெண். நிஜத்தில் அவள் ஒரு விலைமாது.”
“சீ, என்ன அபத்தம்?” முகஞ்சுளித்த அம்மாவின் அந்த எதிர்வினை என்னை சட்டென்று பதறச் செய்தது.
அமைதியாக இருப்பதுபோல பாவனை செய்து, “உண்மையா தான்,” என்றேன்.
கிளறும் கரண்டியைப் பாதியில் நிறுத்தியபடி, “என்ன சொல்ற தாவேய்?”
“போன மாசம் நடந்திச்சி. நீ இப்போ உணர்ச்சிவசப்படாதம்மா. அம்மா, கெஞ்சிக் கேக்கறேன்,” அவளருகில் அமர்ந்தேன்.
வாய் பிளந்து அதிர்ச்சியில் என்னையே உற்று நோக்கினாள்.
வருத்தத்தை மறைத்தபடி, “உன்ன விட பதினைஞ்சி வயது அதிகமானவளா?” என்ற வெட்டியான கேள்வியைக் கேட்டாள்.
“பதினாலு. இப்ப அதுவாம்மா முக்கியம்? என் நெலமைக்கி அவதான் பொறுப்பு” என்று சோபாவின் ஒற்றை இருக்கையில் அமர்ந்தேன்.
“என்னடா சொல்லற?” அவள் குரலில் சிறு எரிச்சலும் மிகுந்த கோபமும் வெடித்தன.
“அந்த சம்பவத்துக்கு அப்புறம், நா ரொம்பவே ‘விரும்பப்பட்டவனா’ உணர்ந்தேன். என்னால அவளத் தவிர வேற எதையுமே நினைக்க முடியாத அளவுக்கு.” என் கண்களில் வழிந்த பெரிய கண்ணீர் துளிகள் அம்மாவுக்குத் தந்த அதே அதிர்ச்சியை எனக்கும் தந்தன. எனக்கே நான் அவ்வளவு அழுவேனென்று தெரியாது.
“ஆனா அவதான் உன்ன அழிச்சிட்டானு தானே கொஞ்ச முன்னாடி சொன்ன. தாவேய், கொழந்தமாதிரி அழுவறத மொதல்ல நிறுத்து,” என்றாள் அம்மா, தன் பற்களைக் கடித்தபடி.
“என்னைய முழுசா நொறுக்கிட்டாம்மா,” என்றேன் கண்ணீரைத் துடைத்தபடி.
“அவ நம்ம வீட்டு வாசலுக்கு வந்து உன் கையப்பிடிச்சி இழுத்துக்கிட்டுப் போனாளா?” அம்மா திடீரெனக் கேட்டாள்.
“அவளால் எப்டி இவ்ளோ மோசமான தொழில குடும்பத்துக்குத் தெரியாம செய்ய முடியுது?அதுவும் பத்தொன்பது வயது மகளுக்குத் தெரியாம?”
“அது நமக்குத் தேவையில்லாதது.”
“அப்டின்னா அவ தொழில நீ அங்கீகரிக்கி றியாம்மா?”
“அவ என்ன என்னோட கூடப் பொறந்தவளா? இல்ல, ஒண்ணுவிட்ட சகோதரியா? அங்கீகரிக்கறதுக்கு? என்ன பேசற நீ? அது அவளோட தொழில். அதோட அவ வாழ்க்கைப் பின்னணியும் நமக்குத் தெரியாது, தெரிய வேண்டிய அவசியமும் இல்ல.”
“அவ உன் மகனோட வாழ்க்கையைச் சீரழிச்சவம்மா. அப்படிப்பட்ட பெண்ணுக்கு நீ எப்டி ஆதரவாகப் பேசற?”
“அவ உன் பாதைல குறுக்கிடல. நீதான் அவ வழில குறுக்கிட்ட. அவளுக்கு எதிரா பேச எனக்கு எதுவுமில்ல.”
“பசங்க அன்னைக்கி எனக்கு நெறையவே ஊத்திவிட்டுட்டாங்க,” என்று என் தரப்பை நியாயப்படுத்தினேன்.
“உன்னால சமாளிக்க முடியாதுனா நீ ஏன் குடிக்கற?”
“ரவியோட பொறந்த நாள். ரோஸ்தான் எங்க குழுவுக்கு ’கம்பெனி’ கொடுத்தா.”
“அப்ப ரவி எங்க போனான்?“
“சீக்கிரமே கெளம்பி ஏர்போர்ட் போயிட்டான். அன்னைக்கி அவனோட சைனா ஃளைட். அஃபிஷியல் டிரிப்.”
“அன்னைக் கிதான் இது நடந்திச்சா?“ அவள் கண்கள் மீண்டும் கலங்கின. “இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு எப்பவுமே தெரியாது தாவேய்.”
“அவளப் பத்தியே நெனச்சிட்ருக்கேன்.”
“உன் அக ராதியில் இதுக்கு ‘விரும்பப்படுதல்’னு பொருளா?”
“நா அவள ரொம்ப நேசிக்கறேனு நெனைக்கிறேன்.”
“முட்டாள்! அதயே அவ நூத்துக்கணக்கான ஆண்களுக்குச் செய்வானு கூடப் புரியாத அளவு நீ சின்னவனா என்ன? அது அவ தொழில், நிஜமில்லன்னு கூடப் புரியாதா? இருபத்துநாலு வயசு நிறையப் போகுது, தயவு செஞ்சி புரிஞ்சிக்க தாவேய்,” அவள் தன் கன்னங்களைத் துடைத்துக் கொண்டாள்.
“…”
“ஒருவித உடனடி திருப்தி அல்லது காமம். நீ உன் உணர்ச்சிகளையும் தேவைகளையும் தவறான பெயர்களால குறிப்பிடற. அதோட கண்டபடி குழப்பிக்கற.”
“என்னால அவள மறக்க முடிலமா. நீ ஏன் அவ பக்கமே பரிஞ்சி பேசற?”
“அவளுக்கு சார்பாக நான்பேசல. அவ உன் வாழ்க்கைய அழிச்சானு நீ சொன்னதுக்குதான் எனக்கு கோபம் வந்திச்சு.”
“அப்பழுக்கற்ற பெண்ணியவாதியப்போல பேசறமா நீ. அவ என் வாழ்க்கைய அழிச்சது உண்மை. ஆனா, உனக்கு எம்மேல இரக்கமே இல்ல.”
“உன் வாழ்க்கைய அவ அழிச்சதா நா நெனைக்கல.”
“எனக்கு அவ சூனியம் வச்சிட்டதா ரவி நெனைக்கறான்.”
“ரப்பிஷ்,” என்ற அம்மா, “சரி, உன் விஷயத்துக்கே வருவோம். நீ ஒரு மருத்துவரப் பார்க்கறது நல்லதுனு நினைக்கிறேன். நாளைக்கே நாம கவுன்சிலிங் போவோமா?”
“நானே போய்க்கறேன்” என்று அவசரமாகக் குறுக்கிட்டதும், “சரி, போ” என்றாள்.
“ப்ளடி பிட்ச்!” என என் வாட்ஸ்ஆப்பைப் பார்த்தபடி முணுமுணுத்தேன். “துரோகி!”
“அப்போ நீ என்ன?” முழுக் கோபத்துடன் என் அம்மா என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
“அவளால நிம்மதியாக தூங்க முடியும்னு நெனைக்கிறாயாமா?”
டிவி அருகே இருந்த என் பணப் பையை எடுத்தபடியே பேச்சை மாற்றினேன்.
“அதப்பத்தி உனக்கு என்ன கவல? போயி தாலாட்டுப்பாடி தூங்க வைக்கப் போறியா?” அம்மா என்னை உற்றுப் பார்த்தபடியே கேட்டாள்.
என்னையுமறியாமல் என் பணப்பையைப் பார்த்தபடியே, “அந்த மாதிரி வருமானத்தை வச்சி ..,” என்றேன்.
“அவ உன் விஸ்கில அன்னைக்கி மயக்க மருந்து கலந்தாளா?”
“இல்லையே, அப்டி எதுவும் நடக்கலயே.”
“அப்புறமென்ன? தாவேய், கவலையா இருக்கு உன்ன நெனச்சி. நானும் உன் அப்பாவும் உனக்கு சின்ன வயசுலருந்து சொல்லிக் கொடுத்த நெறிகள் எதாச்சும் உன்கிட்ட மிச்சம் இருக்கான்னு இப்போ தேடறேன். நகை முரண்தான், உன் தாத்தா உனக்கு தாவேய்னு பெயர் வச்சது. அதற்கு ‘மிகவும் உயர்ந்தவன்’னு பொருள்.”
“எனக்கு தாத்தா அந்தப் பெயரிட்டார்னு தெரியும். அதுக்குப் பொருளும் தெரியும். நீ இப்ப என்னை எடை போடறியாமா?”
“நா உன் தோழி மட்டுமல்ல, உன் அம்மாவும்கூட, ஆனா நீ எப்பவுமே அதை வசதியா மறந்துடுவ.”
“உனக்கு என்னை நெனச்சி வருத்தமாம்மா?” அவளைக் கேட்டேன்.
“நா வருந்துவேன்னு தானே மொதல்ல சொல்லாம மறச்சே.“
“நீ ஓர் ஆண் கெடையாது. அதனால என் மனசுல என்ன போராட்டம்னு உனக்குப் புரியாது,” என்றேன் அவளது பரிவை சற்றேனும் பெற்றுவிடும் முயற்சியில்.
“எல்லாத்தையும் உன் மேல போட்டுக்கிட்டு அலசினா மட்டுமே உனக்கு நிம்மதின்றது சாத்தியம். அவளக் குத்தம் சொல்ல புறவயமான காரணங்கள உன் செய்கைகளுக்காகத் தேடாதே.”
சூப் நூடல்ஸ்களைக் கிண்ணத்தில் ஊற்ற சமையலறைக்குச் சென்றாள். மேசையருகே அமர்ந்தபடி மின் விசிறியைச் சுழல விட்டேன். “ஆஹா, இதுக்குத்தானே ஏங்கினேன். ஆமா, அப்பா எப்போ திரும்பறாரு?”
“அடுத்த புதன். இந்த வாரக் கடைசில ஜோகூர் வரச் சொன்னாரு உன்னை. உன்கிட்ட சொல்லச் சொன்னார்.”
“ஏன் இவ்வளவு நாள்?” என்றேன் என் கைபேசியைப் பார்த்தபடி.
ரவியின் குறுஞ்செய்தி – “காலை உணவை என்னுடன் அருந்துவாயா? இன்னும் பத்து நிமிஷத்தில் வழக்கமான இடத்துக்கு வா.”
“சரி” என பதிலிட்டேன்.
அம்மா என்னையே உற்றுப் பார்த்தபடி, “அவரோட ஒரே சகோதரி, தாய்போல இருந்தவர், இப்போ காலமாகிட்டார். அப்டியே போட்டுட்டு அப்பாவால வர முடியாது.”
அவசரமாகக் கிளம்பினேன். அம்மாவின் குரல் பின் தொடர்ந்தது.
“சந்தைக்கு வரேன்னு சொன்னியே.”
“சாரிமா. ரவியப் பாக்கப்போறேன். அவனோட பிரேக் ஃபாஸ்ட்.”
“அப்ப அதென்னடா?” உணவு மேசை மீது இருந்த பெரிய கிண்ணத்தை அம்மா சுட்டினாள்.
தோள் குலுக்கி, “ஹஹ்ஹா, அது முதல் பிரேக் ஃபாஸ்ட். ரவியோட ரெண்டாவது,” என்றபடி கையை உயர்த்தி அசைத்து விட்டுக் கீழே இறங்கி ஓடினேன்.
*
மருத்துவர் அறையில் இருந்து நான் வெளியே வந்ததுமே, ரவி சட்டென நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தபடி சடாரென்று இருக்கையிலிருந்து எழுந்தான்.
“வெறும் மன அழுத்தம்ன்றார்.”
சுற்று முற்றும் பார்த்து ரவி, “சொன்னேன்ல,” என்றான் தற்பெருமையுடன்.
“சாதாரண ஃப்ளூ மாதிரி பேசற?”
“இப்பல்லாம் மன அழுத்தம் சாதாரண சளி போலதான். டாக்டர்கிட்ட எல்லாத்தையும் சொன்னியா?”
“அஃப் கோர்ஸ்” என்றேன் பதட்டமாக.
“சாதாரண மன அழுத்தம்தான், வேறு விசித்திரமான எதுவுமில்லன்றதால நீ ஏமாத்தமா இருக்கே போல.”
உணவங்காடி நோக்கி நடந்தோம். “நா எப்டியாச்சும் ரோசோட மகள் தொலை பேசி எண்ணைக் கண்டுபிடிக்கணும். அவளோட பழைய ஏஜெண்ட்டால ஒரு பிரயோசனமுமில்ல.”
“அவ நம்பர் உனக்கெதுக்கு?” ரவி என்னைப் பார்த்துக் கேட்டான்.
“தெரியவேணாமா அவங்கம்மாவப் பத்தி அவளுக்கு?”
“ஏன் இந்தளவு கெடுபுத்தி உனக்கு? இந்த தாவேய் எனக்கு மிகப் புதியவன். அப்டி செய்றதால நீ என்ன சாதிப்ப?”
“அவளுக்குக் குற்ற உணர்வே இருக்காதா? வெட்கமே கெடையாதா? மகளுக்குத் தெரிய வந்தா என்ன நடக்கும்னு கூடவா அவளுக்குத் தெரியாது?”
“இதோ பார். அவ குடும்பம் உன்ன நம்புவாங்கனு நெனைக்கிறாயா? அவ நட்பு வேணும்னு ஏன் இந்த வேட்கை உனக்கு? தாவேய் ஒண்ணு கேக்கணும்னு பல நாளா நெனச்சிருந்தேன். கை மறதியா நீ எதையாச்சும் அவ எடத்துல விட்டுட்டு வந்தியா?”
“இல்லயே. ஏன்?”
“அவளுக்கு சூன்யக்காரி மாதிரியான தோற்றம் இருக்கறதா என் நண்பர்கள் சொன்னாங்க. இந்தப் பெண்கள் தொழில்ல நெலச்சி நீடிக்க அதையெல்லாம் செய்வாங்களாம். நம் மன் ப்ராய் எண்ணெய்னு தாய்லாந்துலருந்து வருது, கேள்விப்பட்ருக்கியா?”
“நிச்சயமா கடல் கடந்து அதெல்லாம் சிங்கப்பூர் வந்திருக்காது. கடல் கடந்தாலே வீரியம் போகும்னு சொல்வாங்க. அதோட விலையும் மிக அதிகம்.”
“மாற்றுகளும் இருக்கு. பச்சை, சிவப்பு, வெள்ளை, கருப்பு, மஞ்சள் நிறக் கயிறுகளக் கட்டி ஒரு பைய அந்த சூனியப் பொருட்களோடு கட்டிடுவாங்க. வீரியம் அப்டியே இருக்கும். ஆனா அசல் கிடைப்பது சிரமம்னு என கேள்விப்பட்ருக்கேன்.”
“ஹே. நொறுக்குத் தீனி வாங்கலாமா?” எனக் கேட்டேன்.
“நாம வயிறு நெறையப் பகலுணவு சாப்பிட்டுட்டுதானே இங்க வந்தோம்?”
“நாம் சாப்ட்டோமா?”
என் தீவிரமான முகத்தைப் பார்த்த ரவி, “இரவு உணவு பத்தி நெனைக்க முடியாத அளவு என் வயிறு நெறஞ்சி கெடக்கு. நீ என்னப் போல் இரண்டு மடங்கு சாப்பிட்டே” என்றான்.
“நம்பறாயோ இல்லையோ, எனக்குக் கடுமையான பசி.”
“இதென்னப்பா கட்டுக்கடங்காத பசி?”
“தெர்லயே. எவ்ளோ சாப்டாலும் போதமாட்டேங்குது.”
“பொறக்கும்போதே சாப்பாட்டு ராமனாப் பொறந்துட்டியோ?”
“ஹிஹி,..”
“சிரிப்பெல்லாம் இருக்கட்டும். இந்தப் பசிய பத்தி டாக்டர்கிட்ட சொன்னியா?”
ஆமென்று தலையாட்டினேன். “ஹே ரவி, நா அங்கருந்து அன்னிக்கிக் கெளம்பும்போது ஏதோ ஆபாச நாத்தம் அடிச்சிது.”
“நெசமாவா? ஐயோ, அப்டினா அது பிண எண்ணெய்தான்.“ அதிர்ந்து நின்ற ரவி, “நம் மன் ப்ராய் எண்ணெயேதான்.”
“அவளோட இருந்த அந்த ராத்திரிக்கி முன்னாடி எனக்கு இவ்ளோ பசிக்காது ரவி. எப்பவுமே நா இவ்ளோ சாப்பிட்டதில்லடா.”

– ஜெயந்தி சங்கர்
தமிழில்: சங்கரி

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!