day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

இந்தியாவின் முதல் நன்னீர் கப்பலோட்டி-நிலோஃபர்

இந்தியாவின் முதல் நன்னீர் கப்பலோட்டி-நிலோஃபர்

ஆண்கள் மட்டுமே அரசாண்ட இடத்தில் தடம் பதித்து, இந்தியாவின் முதல் நன்னீர் பைலட் என்கிற சாதனையைப் படைத்திருக்கிறார் நிலோஃபர். சென்னை அண்ணாநகரில் பிறந்து, வளர்ந்தவர் இவர்.
பள்ளி வயதில் மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருந்தது. ஆனால், 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு படித்த நாட்களில் நாம் எங்கே இருக்கிறோம் என்ற நினைப்பு அவருக்கு வந்தது. அவரது குடும்பத்தில் தனியார் கல்லூரியில் படிக்க வைக்கக்கூடிய அளவுக்கு வசதி இல்லை. அரசுக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்றால் 98 சதவீதம் மதிப்பெண் எடுத்தால்தான் இடம் கிடைக்கும். அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றால் வேறு என்ன படிக்கலாம் என்று யோசித்தபோது, பெற்றோருக்குப் பாரமாகவும் இருக்கக் கூடாது, அதே நேரத்தில் மற்றவர்களைப் போல் பொறியியல் படிக்கக் கூடாது என்பதில் திடமாக இருந்தார். நிலோஃபரின் சகோதரி பொறியியல் படித்துவிட்டு ஐ.டி. துறையில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார். அதனால், வித்தியாசமாக ஏதாவது படிக்க வேண்டும் என்று நிலோஃபர் எண்ணினார். அந்த நேரத்தில் ஒரு செய்தித்தாளில் மெரைன் பைலட் படிப்பு குறித்த விளம்பரம் வந்தது. அந்தப் படிப்பில் சேர இந்திய அளவில் தகுதித் தேர்வை எழுத வேண்டும். அதில் வெவ்வேறு மையத்தில் இருந்து சுமார் 3000-க்கும் அதிகமானோர் எழுதினர். அதில் 300 மாணவர்கள் மட்டும் தேர்வானார்கள். அதில் இருந்து 250 மாணவர்களைத்தான் தேர்வு செய்தார்கள். அவர்களில் நிலோஃபரும் ஒருவர்.
படிப்புடன் வேலைக்கும் உத்தரவாதம் கொடுத்ததால் அந்தப் படிப்பைத் தேர்வு செய்ததாகச் சொல்கிறார் நிலோஃபர். இந்தப் படிப்பு குறித்து மாணவர்களிடம் அப்போது போதிய விழிப்புணர்வு இல்லை என்கிறார் அவர்.
“நான் படிக்கும்போதெல்லாம் இந்தப் படிப்பு குறித்து மாணவர்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. என்னுடன் படித்தவர்களின் குடும்பத்தில் யாராவது ஒருவர் இந்தத் துறையில் இருந்திருப்பார்கள். அதுபோன்று தெரிந்தவர்கள்தான் உண்டு. பெரிய அளவில் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், இப்போது அப்படி இல்லை. இது இன்டர்நெட் காலம். மாணவர்கள் எல்லாரும் விழிப்புடன் இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. இன்று ரொம்ப வித்தியாசமான படிப்பெல்லாம் இருக்கிறது. நாங்கள் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத படிப்பையெல்லாம் இந்தக் காலத்து மாணவர்கள் படிக்கிறார்கள். என்ஜினியரிங் படிப்புமீது ஆர்வம் வந்து படித்ததுபோன்று இப்போது, மரைன் என்ஜினியரிங், மரைன் படிப்புகளை ஆர்வத்துடன் படிக்கிறார்கள்” என்கிறார் நிலோஃபர்.
“சென்னையில் IMU-இன் தலைமையகம் இருக்கிறது. indian maritime university சென்னை ECR-இல் உத்தண்டி என்ற இடத்தில் உள்ளது. நாங்கள் படிக்கும்போது, வேறு கோர்ஸ் கிடைக்காதவர்கள்தான் இந்தப் படிப்புக்கு வருவார்கள் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், இப்பொழுது அப்படி இல்லை. இந்தப் படிப்புக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. போட்டி இருக்கிறது. நன்றாகப் படிக்கிற மாணவர்கள்கூட இந்தப் படிப்புக்கு வருகிறார்கள். அரசுக் கல்லூரிகளிலும் இந்தப் படிப்புக்கு இடமுண்டு. அதற்கு IMU-வின் நுழைவுத் தேர்வு எழுதி உள்ளே வர வேண்டும். தனியாரில் கல்லூரிகளிலும் இதைப் படிக்கலாம். சென்னையில் அமிட் யூனிவர்சிட்டியும் அதில் ஒன்று. நாங்கள் படிக்கும்போது அந்தக் கல்லூரி VIT நிர்வாகத்தின்கீழ் இருந்தது. இப்பொழுது யூனிவர்சிட்டியாக மாற்றிவிட்டார்கள். மதுரையில் RLC என்ற கல்லூரி ஒன்று உள்ளது. சென்னையில் வேல்ஸ் பல்கலைக்கழகத்திலும் இதைப் படிக்கலாம். எங்கே சேர்ந்தாலும் அந்தக் கல்லூரி DG shipping (directorate general of shipping) அங்கீகாரம் பெற்றிருக்கிறதா என்று பார்த்துக்கொள்ள வேண்டும். வருடந்தோறும் அங்கீகாரம் பெறும் கல்லூரிகளின் பட்டியலை அவர்களுடைய இணையதளத்தில் வெளியிடுவார்கள். நாம் படிக்கப்போகும் கல்லூரி அங்கீகாரம் பெற்றிருக்கிறதா என்று பார்த்த பின்புதான் சேர வேண்டும். இல்லை என்றால் நம் படிப்பு வீணாகிவிடும்” என்று சொல்லும் நிலோஃபர், இந்தத் துறையில் பெண்களின் பங்களிப்பு குறைவு என்கிறார்.
”இந்தத் துறையைப் பொறுத்தவரையில் பெண்கள் குறைவு. உலக அளவில் பார்த்தால் 2 சதவீதப் பெண்கள்தான் இந்தத் துறையில் இருக்கிறார்கள். இந்த 2 சதவீதத்திலும் 70 சதவீதம் பேர் cruise industry hospitality-யில் இருக்கிறார்கள். Cruise ship-இல் இருந்தாலும் மேனேஜர், வரவேற்பாளர், கேட்டரிங் போன்றவற்றைத்தான் செய்வார்கள். 30 சதவீதம் பேர்தான் கார்கோ ஷிப்பில் இருக்கிறோம். அதாவது சரக்குக் கப்பலில். இந்தக் காலத்தில் இந்த வேலை சம்பந்தமாக நிறைய பெண்கள் விழிப்புணர்வு அடைந்திருக்கிறார்கள். இந்த வேலை குறித்து மற்ற பெண்களிடம் எடுத்துச் சொல்லி, விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள். அதேபோன்று நாங்கள் என்னென்ன வேலைகள் செய்கிறோம் என்பதைப் பற்றி எடுத்துக்கூறி, வெளியில் தெரியவர வேண்டும் என்று செயல்படுகிறோம். இந்தியாவில் சுமார் 10, 12 கேப்டன்கள் இருக்கிறார்கள். இது மிகக் கடினமான பணி. இங்கே பொறியாளர்களும் இருக்கிறார்கள். நான் பைலட்டாக இருக்கிறேன். இந்தியாவிலேயே பைலட்டாக நான் மட்டும்தான் இருக்கிறேன். இன்னும் அதிகமாக பெண்கள் இந்தத் துறைக்கு வருவார்கள் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.
2006-ஆம் வருடத்தில் இருந்து இந்தத் துறையில்தான் இருக்கிறேன். தினசரி மறக்க முடியாத நிகழ்வுகள் நடந்துகொண்டேதான் இருக்கும். நிறைய நாடுகளைச் சுற்றிவருவதால், ரொம்ப அழகான நாடுகளை எல்லாம் சுற்றிப்பார்க்கும்போது அவற்றை மறக்க முடியாது. துருக்கி, இஸ்தான்புல்லுக்குச் சென்று சுற்றிப்பார்த்ததை மறக்க முடியாது. அங்கெல்லாம் வீட்டின் முகப்பை மலர்களால், செடிகளால் அழகாக அலங்கரித்து வைத்திருப்பார்கள். ஆரம்பக் காலத்தில் நான் பைலட்டாகப் போகும்போது எல்லோரும் சந்தேகத்துடனேயே பார்ப்பார்கள். நிறைய கேப்டன்கள் நான் வந்த பின்பும் எனக்குப் பின்னால் வேறு பைலட் வருகிறார்களா என்றெல்லாம் நம்பிக்கை இல்லாமல் எட்டிப் பார்த்திருக்கிறார்கள்” என்று சிரிக்கிறார் நிலோஃபர். தனித்துவமான இந்தப் பணிக்காகப் பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் இவர் பெற்றிருக்கிறார்.
“என்னுடைய பணியில் மிக உயர்ந்த விருது மகளிர் தினத்தன்று குடியரசுத் தலைவர் கைகளால் பெற்ற தேசிய அளவிலான விருதுதான். பெண்களுக்குக் கொடுக்கப்படுகிற மிக உயரிய விருது இது. என் வாழ்வின் சிறந்த தருணம் அது. உத்வேகம் அளித்த நிகழ்வும் அதுதான். குழந்தை பிறக்கும்போதே, ஒவ்வொரு பெற்றோரும், அது ஆண் குழந்தையாக இருந்தால் என்ஜினியராக்க வேண்டும், பெண் குழந்தை என்றால் டாக்டராக்க வேண்டும் என்று நினைப்பது தவறான முடிவு. பெற்றோர்கள் அவர்களுடைய ஆசைகளைக் குழந்தைகள்மீது திணிக்கக் கூடாது. பெண் குழந்தை, ஆண் குழந்தை என்று பாரபட்சம் காட்டாமல், அவர்கள் போக்கில் விட்டாலே, அவர்களுக்குப் பிடித்த விஷயங்களைச் சிறப்பாகச் செய்வார்கள். அதுபோன்று சுதந்திரம் கொடுத்து வளர்க்க வேண்டும். நாம் நினைத்ததைச் செயல்படுத்த வேண்டும் என்கிறபோது பெண்களுக்குக் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கண்டிப்பாகத் தேவை. யாருடைய தயவும் இல்லாமல் முடிவெடுத்துவிட்டால் பெண்கள் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். நம்மால் இதைச் செய்ய இயலுமா என்று நினைக்காமல் அந்தக் கனவை நிறைவேற்றிக்கொள்ள உழைக்க வேண்டும். பெண் என்றால் இதைச் செய்ய முடியும், இதைச் செய்ய முடியாது என்று உலகமே சொல்லிக்கொண்டிருக்கிறதை நாம் சிறு வயதில் இருந்தே பார்க்கிறோம். உதாரணத்துக்கு ஒரு பொம்மை கடைக்குப் போனால்கூடப் பெண்ணுக்கு பார்பி பொம்மைதான் இருக்கும். ஆண்கள் பகுதிக்குச் சென்று பார்த்தால் பல வகை மோட்டார் கார்கள், அறிவியல் தொழில்நுட்பத்தால் இயங்கும் பொம்மைகளை அடுக்கிவைத்திருப்பார்கள். இப்படி பாகுபாடுகள் நிறைந்த சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம். அதனால், இந்தச் சமூகம் நமக்கு உதவும் என்று எதிர்பார்ப்பதை விட்டுவிட்டு, இப்போதைக்கு நாம்தான் நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் கறாராக இருந்து நம் ஆசையை நாம் பூர்த்திசெய்துகொள்ள வேண்டும். இதைச் செய்ய முடியும், இதைச் செய்ய முடியாது என்பதை நாம் செய்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு யாரோ சொல்லி நம் மனதை மாற்றிக்கொள்ளக் கூடாது. நம் இலக்கை நாமே முடிவுசெய்து, அந்த இலக்கை அடைகிற வரைக்கும் கஷ்டபட்டு நாம் நினைத்ததை செய்து முடிக்கலாம். ஆண்களே கால்பதிக்கத் தயங்கும் துறைகளில்கூடப் பெண்கள் துணிந்து செயல்படுகிறார்கள். அதனால், பெண்களால் எல்லாம் முடியும்” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் நிலோஃபர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!