day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

யாரும் அநாதை இல்லை! – ரோஜா ஸ்ரீ

யாரும் அநாதை இல்லை! – ரோஜா ஸ்ரீ

அநாதையாக இறக்க நேர்கிற யாரும் அநாதை கிடையாது. அவர்களுக்குத் தாயாகவும் தந்தையாகவும் மகளாகவும் இருந்து அடக்கம் செய்துவருகிறார் ரோஜா. ரத்த பந்தங்களே கைவிட்டுவிடும் இந்நாளில், முகமறியாத மனிதர்களுக்கு இறுதிக்கடன் செய்யும் ரோஜாயுடன் ஒரு நேர்காணல். 

எத்தனை வருடங்களாக இதனைச் செய்துவருகிறீர்கள்?

14 வயதில் தொடங்கியது இது. 20 வருடங்களாக இதைச் செய்து வருகிறேன். இதுவரை 8000-க் கும் மேற்பட்ட இறுதிச் சடங்குகளைச் செய்து இருக்கிறேன். எனக்கு 7 வயது இருக்கும் போதே அம்மா இறந்துவிட்டார். உறவினர்கள் வீட்டில்தான் வசித்து வந்தேன்.  ஒருநாள் சுடுகாடு பக்கம் சென்றபோது, ஒரு பிணத்தை நாய் சீண்டிக்கொண்டு இருந்தது. என்னுடன் வந்தவர்கள் எல்லாம் ஓடிவிட்டார்கள். இறந்து கிடந்தவரை யாரோ கொலைசெய்து விட்டார்கள் என்று நினைத்து, போலீஸ் ஸ்டேஷன் சென்று அவர்களைக் கையோடு அழைத்து வந்தேன். காவலர்கள் என்னைத் திட்டி, ‘இவர்கள் அநாதை, இவர்கள் உடலை எரிக்க யாரும் இல்லை. அதனால்தான் இப்படி இருக்கிறார்கள். நீ இங்கெல்லாம் வரக் கூடாது’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள். எனக்கு இதே சிந்தனையாக இருந்தது. அதனால் 3 நாட்கள் கழித்துக் காவல் நிலையம் சென்று காவல் அதிகாரிகளிடம், `நான் அநாதைப் பிணங்களை எடுக்கிறேன்’ என்றேன். அவர்கள், ‘இது ஒன்றும் விளையாட்டல்ல. அம்மா அப்பாவிடம் போய் சொல்லிவிட்டு வா’ என்றார்கள். நான் யாரிடமும் கேட்காமலேயே `என் வீட்டில் சொல்லிவிட்டேன்’ என்றேன். `திருவான்மியூரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சென்று நான் அநாதைப் பிணங்களை எடுக்கிறேன்’ என்று  சொன்னேன். அதன்பின் எந்த இடத்தில் அநாதைப் பிணம் இருந்தாலும் என்னையும் அழைப்பார்கள். அந்தப் பிணக் கிடங்கிற்குச் சென்றால் அங்கு ஆண், பெண் என  எல்லோரும் உடை இல்லாமல்  இருப்பார்கள்.  சில நாட்கள் நான் இரவில் தூங்கவே இல்லை. பின் போகப் போக பழகிவிட்டது. எனக்கு முழுமையாக  உதவுவதும் ஊக்குவிப்பதும் காவல் துறை அதிகாரிகள்தான். 

உங்கள் குடும்பத்தினர் இதற்குச் சம்மதித்தனரா?

என் குடும்பத்தில் யாருக்கும் தெரியாது. தெரியாமல்தான் நான் செய்யத் தொடங்கினேன். கொஞ்சம் காலம் சென்றதும் சொல்ல ஆரம்பித்தேன். ஆனால், என் உறவினர்கள் நம்பவில்லை. அடக்கம் செய்யும்போது எடுத்த புகைப்படங்களை காட்டிய பின்தான் நம்பினார்கள்.  `வெட்டியான் வேலை செய்கிறாயா?. பேய் இருக்கும், உனக்குப் பயம் இல்லையா’ என்று கேட்பார்கள். `சுடுகாட்டில் பேய் இல்லை நீங்கள்தான் பேய்’ என்பேன். சில நேரங்களில், என் அப்பா `பிணம் எடுக்காதே’ என்பார். அம்மா இல்லாத அநாதையான நான்தான், இந்த அநாதைகளைப் பார்த்துக்கொள்ளவேண்டும்.  

ஒரு பிணத்தை எடுக்க எவ்வளவு செலவாகும்? எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

ஒவ்வொரு பிணம் எடுக்கவும் 3000 ரூபாய் செலவாகும். முதலில் வீட்டில் கொடுத்த பணத்தில்தான் செய்தேன். அப்போது 1500 தான் செலவானது. இப்போதுதான் அதிகமாகச் செலவாகிறது. ஜானகி, ராம்குமார், சுரேஷ், சுதாகர், கணேசன் என்று எனக்குச் சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்கு உதவுவார்கள். 4 உடல்களை எடுத்தால் 2 உடலுக்கான செலவைப் பார்த்துக்கொள்வார்கள். 

உங்களால் மறக்க முடியாத நிகழ்வு ஏதேனும் உண்டா?

பல கதைகள் உண்டு. 3 வருடத்துக்கு முன் கோட்டூர்புரம் பாலத்திற்கு அடியில் பிறந்து கொஞ்ச நாட்களே ஆன ஒரு பெண்குழந்தை தொப்புள்கொடியோடு கிடந்தது.  அதேபோல சாஸ்திரி நகர் காவல்நிலையம் அருகே பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையை வீசிவிட்டுச் சென்றிருந்தனர். இப்படி இதுவரை 20 குழந்தைகளையாவது அடக்கம் செய்திருப்பேன்.  இறந்தே பிறக்கும் குழந்தைகளையும் அடக்கம் செய்துள்ளேன். வெளிமாநிலங்களில் இருந்து வந்து பிரசவம் பார்த்துக் குழந்தை இறந்து பிறந்தால் அடக்கம் செய்ய பணம் இருக்காது. அதனால், நான் அந்தக் குழந்தைகளை அடக்கம் செய்வேன். 

ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தெருவில் இறந்துகிடந்தார். அவர் உடன்பிறந்த அண்ணனைப் பார்த்தபோது, இறந்தவர் யாரென்றே தனக்குத் தெரியாது என்று சொல்லிவிட்டார். அவர் மனைவியைப் பார்த்தபோது, `பணம் வேண்டுமானால் தருகிறேன்; அவர் உடலை எரித்துவிடு’ என்றார்கள். நான் `பணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்’ என்று சொல்லி அவரை ரோஜாக்கூட்டத்தோடு புதைத்துவிட்டேன். 

திருமணம் ஆனபின் பலர் பெற்றோரைப் பார்ப்ப தில்லை. நடுத்தெருவில் விட்டு விடுகின்றனர். ஆயிரத்தில் பத்துப் பேர்தான் பெற்றோர்களைப் பார்த்துக் கொள்கின்றனர். இவர் களெல்லாம் மாறவேண்டும். நீங்கள் பெற்றோரைப் பார்த்துக் கொள்வதைப் போலத்தான் உங்கள் பிள்ளைகள் உங்களைப் பார்த்துக் கொள் வார்கள். அதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிள்ளையும் நாளை இப்படித்தான் செய்யும். 

கொரோனா காலத்தில் பிணங்களைப் புதைக்க இடம் இல்லாமல் இருந்தது. அப்போது என்ன செய்தீர்கள்?

கொரோனா காலத்தில் ஒருநாளைக்கு 10 உடல்களை எடுப்பேன். புதைக்க இடம் இருக்காது. உடலை எரிக்க நீண்டவரிசைகளில் நிற்க வேண்டும். வரிசையில் நீண்டநேரம் நின்று அந்த உடலை எரித்துவிட்டு வருவேன். சுடுகாட்டில் உட்கார்ந்து சாப்பிடுவேன். 

பொதுவாழ்க்கைக்கு வந்ததால் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதேனும் அசௌகரியம் ஏற்படுகிறதா?

முதலில் என் கணவருக்கு நான் உடல்களை எடுப்பது தெரியாது. தெரிந்தபின் பிரச்சனை ஆனது. வெட்டியான் வேலை செய்கிறாயான்னு  கோபப்பட்டுப் பிரிந்து போய் பெரிய பிரச்சனை ஆனது. அதன்பின் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் ரோஜா செய்வது ஒரு சமூக சேவை என்று என் கணவருக்குப் புரிய வைத்து எங்களைச் சேர்த்துவைத்தார்கள். 4 வருடம் பிரிந்து இருந்தோம். அதன்பின் நான் புதைத்த ரோஜாக்கூட்டங்கள் சேர்ந்து எங்களைச் சேர்த்துவைத்தன. என் பிள்ளை நான்காம் வகுப்புப் படிக்கிறான். நான் பெற்றெடுத்தது ஒரு பிள்ளையாக இருந்தாலும் வளர்த்தபிள்ளைகள் பலர் உள்ளனர். எல்லோருக்கும் ஒரு விஷயத்தைத்தான் சொல்லிக்கொடுப்பேன். நாம் பிறருக்கு உதவியாய் இருக்கவேண்டும். நமக்கு இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்குக் கொடுக்கவேண்டும். அடுத்தவர்களைச் சாப்பிடவைத்துப் பார்ப்பது தனி சுகம். இதைத்தான் நான் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கிறேன். அம்மா இல்லை என்று நான் வருத்தப்பட்டேன்.  இன்று, 1000 பேர் என்னை அம்மா என்று அழைக்கிறார்கள். என் கஷ்டங்களை நான் யாரிடமும் சொன்னதில்லை. இதுவரை நான் வாடகை வீட்டில்தான் இருக்கிறேன்.  நாம் போகும்போது எதையும் கொண்டு போகப்போவதில்லை. பிணவறைக்குள் செல்லும் போது எனக்குத் தோன்றும் விஷயம் இது. எல்லா மனிதனும் இறப்பதற்குள் ஏதேனும் ஒரு நல்ல விஷயமாவது செய்யவேண்டும் என்பதுதான். அநாதைகள் என்று யாரும் இல்லை, எல்லாம் ரோஜாவின் உறவுகள், ரோஜாவின் கூட்டம். 

உடல்களை அடக்கம் செய்யும் முறை என்ன? ஓர் உடலை அடக்கம் செய்ய எவ்வளவு நேரமாகும்?

ஓர் உடல் வந்தவுடன் பிணவறையில் இருந்து அழைப்பு வரும். அங்கிருந்து உடலைச் சுடுகாட்டிற்கு எடுத்துவர வேண்டும். அங்கு குழி தோண்டவேண்டும். சில நேரங்களில் நானே தோண்டிவிடுவேன். இந்த வேலை முடிய  குறைந்தது 3 மணிநேரம் ஆகும். அதிலும் கொரோனாவால் இறந்தவர்களை 18 அடி ஆழத்தில்  புதைக்கவேண்டும். இப்போது புதைக்க இடமில்லை என்பதால் எரித்துவிடுகிறோம். சில நேரங்களில் போலீஸ், டாக்டர், ஆம்புலன்ஸ் என்று ஏதோவொன்று தாமதமாகிவிடும். அதுபோன்ற சமயங்களில் காலையில் சென்றால் எல்லாம் முடிய மாலை ஆகிவிடும். இப்போது நானே ஆம்புலன்ஸ் ஓட்ட ஆரம்பித்துவிட்டேன். நண்பர் பிரபாகரன் அப்பா மற்றும் ஜேப்பியார் எனக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார்கள் . அதுபோல் வெங்கடேஷ் எனக்குத் தள்ளுவண்டி வாங்கிக் கொடுத்தார்.  

நானும் என் நண்பர்களும் சேர்ந்து கொரோனா காலத்தில் சாலையோரம் இருப்பவர்களுக்கு உணவு கொடுத்துள்ளோம். ஜானகி ராம், குமார் என்று பலரும் எனக்கு உதவுவார்கள். எல்லா நேரமும் நண்பர்களே உதவுவார்கள் என்று நினைக்க முடியாது. மாதம் ஒருமுறை கேட்டால்தான் கொடுப்பார்கள். அதனால், கடன் வாங்கித்தான் சிலநேரம் அடக்கம் செய்கிறேன். இதுபோன்ற நேரத்தில் யாரேனும் உதவினால் நன்றாக இருக்கும்.  இந்தச் சமூகத்திற்கு நான் சொல்ல விரும்புவது அநாதையாக யாரும் பிறப்பதில்லை, அநாதையாகக் கைவிடப்படுகிறார்கள். அப்படிச் செய்யாமல் இருங்கள்; அதுவே போதும்.

 

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!