day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

மாயநிழல் அத்தியாயம்-5 லதா சரவணன்

மாயநிழல் அத்தியாயம்-5 லதா சரவணன்

அடர்த்தியாகக் கட்டிய மல்லிகைச் சரத்தை ஈரத்துணியிலிருந்து எடுத்து மகளின் தலையில் சூட்டி நெட்டி முறித்தாள் காத்தாயி! போனமுறை சந்தையில் 50 ரூபாய்க்கு வாங்கிய சீட்டிப் புடவையைக் கிழித்துத் தைத்திருந்த பாவாடை, தாவணி சற்றே சாயம் போய் பல்லை இளித்திருந்தது. அதிலும் மகளின் அழகு குறையாமல் இருந்தது காத்தாயிக்கு ஏக சந்தோஷம்! பண்ணையார் வீட்டுப் பிள்ளை படிப்பை முடிச்சிட்டு ஊருக்கு வருதுதாம். தோட்டத்தையும் வீட்டையும் ஒழிச்சித்தரச்சொல்லி முதுகொடிய வேலை செய்துவிட்டுத் திரும்பும்போது மாலை தோட்டத்தில் பறித்துக் கட்டி வைத்திருந்த பூச்சரத்தையும், குவளை நிறைய நெல்மணிகளையும் கொடுத்தாள் அந்த மகராசி. அது இன்று மகளின் தலையில் குடிகொண்டு மலர்ந்து அவளைப் பார்த்துச் சிரித்தது.

“சாரதா பராக்குப் பார்க்காம மாவு மில்லுக்குப்போய் முறுக்குக்கு மாவரைச்சி வைச்சிடு. தம்பி வருதுன்னு அம்மா தேன்குழல் அதிசரம்னு பலகாரம் செய்யணும்னு சொன்னாங்க. நான் போறேன். பழைய சாதத்திலே மோர் கரைச்சிவிட்டு இருக்கேன். சின்ன வெங்காயத்தை உரிச்சிப்போட்டு மதியத்துக்குச் சாப்பிட்டுக்கோ” என்று கைவேலையைச் செய்தபடியே பேசினாள் அம்மா.

“சரிம்மா. பெரிய வீட்டுலே செய்யற பலகாரத்தை எனக்குக் கொஞ்சம் கொண்டு வாயேன்” என்ற மகளிடம்,

“தேவைக்குத்தான் ஆசைப்படணும் சாரதா. வயித்தை நிறைக்கக் கஞ்சியும், உடலை மறைக்க மாத்துத்துணியும்கூட இல்லாம எத்தனையோ பேரு அவதிப்படறாங்க. ஆனா, நம்ம நிலைமை அப்படியில்லையே. கிடைச்சதை வெச்சி திருப்திபடணும்” என்றாள்.

மகளின் வாடிப்போன முகத்தைப் பார்த்ததும், “நான் பண்ணைவீட்டு அம்மாகிட்டே கேட்டு ஏதாவது வாங்கிட்டு வர்றேன்” என்று தலையைத் தடவியபடியே வழிந்த வியர்வைத் துடைத்தபடி வெளியே சென்றாள்.

தட்டிபோட்ட வீடு பண்ணைவீட்டின் வேலையாளுக்கு என்று கட்டித்தரும் குடிசை. கூரையை வேய வேண்டும் இந்தப் பண்டிகைக்குப் பிறகு என்ற நினைப்போடு காத்தாயி பெரிய வீட்டை நோக்கிச் சுடும் தரையையும் பொருட்படுத்தாமல் நகர்ந்தாள்.

சற்றே மங்கிப்போன கண்ணாடியில் தன் முகத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தாள் சாரதா. வியர்வையின் தீற்றலில் லேசாக பவுடர் ஆங்காங்கே திட்டுத்திட்டாய். வெயில் கொஞ்சம் கொஞ்சமாய் ஏறிக்கொண்டு இருக்க வெப்பம் கூரையைத் தாண்டி தகிக்க ஆரம்பித்தது. வாசல் பக்கம் காத்தாட நிற்போம் என்று வெளியே வந்தவளின் கண்களில் தெருக்கோடியில் அந்த உருவம். தோளிலும் கைகளிலும் இரண்டு மூன்று பைகளைச் சுமந்தபடி கிராப் தலையோடு நடந்து வந்துகொண்டு இருந்தான் அவன். அழகான வெள்ளை ஜிப்பாவும் கறுப்பில் குழாயும். யாராக இருக்கும் என்ற நினைப்போடு அவள் பார்க்க அவனின் பார்வை மட்டுமல்ல நடையும் அவளை நோக்கியே இருந்தது. ஒருவேளை இதுதான் அம்மா சொன்ன பண்ணை வீட்டுப் பையனாக இருக்குமோ என அவள் எண்ணி முடிக்கையிலேயே அவன் அவள் வீட்டு அருகே சமீபித்திருந்தான்.

அந்நிய ஆடவர்களின் முன் நிற்பது அத்தனை நல்லதில்லை என்று அம்மா கடிந்து கொள்வாளே என்பதையும் மீறி அவனின் முகத்தைச் சற்று அருகே பார்க்க வேண்டும் என்பதைப் போன்ற ஒரு துடிப்பு சாரதாவிடம்.

அவனுக்கும் அப்படியிருந்திருக்குமா? அதற்குள் பண்ணையாட்கள் அவனைச் சூழந்துகொண்டார்கள். “ஏன்டா பிள்ளை பொட்டியைத் தூக்கிட்டு வர்றான். நீங்க எல்லாம் என்ன வேடி க்கை பாக்குறீங்க?” வேலை யாட்களைக் கடிந்துகொண்ட பண்ணையார் மகனை உச்சி முகர்ந்தார்.

“வண்டியிலே ஏன் வரலை சிவராமா?”

“நடக்கணுமின்னு தோணுச்சிப்பா… அம்மா எங்கே?”

கேள்விக்குப் பதிலாய் ஆரத்தியோடு அம்மாவும் வர இந்தக் களேபாரங்கள் எல்லாம் அடங்கியதும் பதுங்கிப் பார்த்துக்கொண்டு இருந்தவளின் பக்கம் அவன் குறும்போடு கண்சிமிட்டிச் சிரிக்க விதிர்விதிர்த்துப் போனாள்.

பழைய நினைவுகளில் சிக்கிக்கொண்டு இருந்த மனைவியைப் பின்புறமிருந்து கட்டியணைத்தான் சிவராமன். “சாரதா என்ன யோசிக்கிறே? பண்ணையாட்கள் எல்லாரும் நமக்காகத்தான் காத்திருக்காங்க போகலாமா?”

“ஒண்ணுமில்லை. முதல் முதலா உங்களைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. இந்த மாடி பால்கனி வழியாத்தானே என்னைப் பார்ப்பீங்க?”

“ம்… வீட்டுவாசலில் கோலம் போட, பெருக்க, இன்னும் அநேக காரணங்கள் இல்லாமலேயே நீ என்னை வந்து வந்து பார்த்துட்டுப் போவியே?” மனைவியை வாகாகச் சாய்த்துக்கொண்டான்.

“விடுங்க எங்கே இருக்கோம்னு மறந்துடீங்களா?”

 அவன் பிடியில் இருந்து சட்டென விலகியவளின் பார்வை மீண்டும் அந்த வீட்டை நோக்கியே போனது!

“அம்மா ஞாபகம் வந்திடுச்சா?”

“ம்…” அவள் குரல் தழுதழுத் தது. “எனக்காகவே வாழ்ந் தாங்க. நானே அவங்க இறப்பிற்குக் காரணம் ஆகிவிட்டேன். நல்ல மனசோட என்னை உங்க குடும்பம் ஏத் துக்கிட்டாலும் எனக்கு மனசுக்கு வருத்தமா இருக்குங்க.”

“தம்பி எல்லாரும் காத்துட்டு இருக்காங்க. பெரியவர் உங்களை வரச்சொன்னார்” என்று பவ்யமாய் ஒருத்தன் சொல்லிப்போக அப்போதைக்கு அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இருவரும் இறங்கினார்கள்.

நெல் அம்பாரியாய்க் குவிக்கப்பட்டு இருக்க, சீவிய இளநீர்கள் அலங்கரிக்கப்படாத மேஜையின் மேல் காத்திருந்தன. அருகிலேயே குவிந்திருந்த சொற்ப ஜனங்களுக்கு மத்தியில் சிலரிடம் சிவராமனையும், சாரதாவையும் பார்த்ததும் சலசலப்பு. பொருட்களை விநியோகிக்க ஆரம்பித்தார்கள்.

கூட்டம் அமைதியாய் கலைய ஆரம்பிக்க இரண்டு பெண்கள் மட்டும் தனித்து நின்றார்கள். “அட என்னம்மா நீங்க இரண்டு பேரு மட்டும் தனியா இருக்கீங்க? வாங்கிட்டுப் போங்க”

அவர்கள் அப்போதும் நகராமல் நிற்க அதில் ஒருத்தி மட்டும் துணிவாய், “அய்யா நாங்க இத்தனை நாள் ஊழியம் பார்த்தது பண்ணைவீட்டுப் பெரிய மனுஷங்க கையால பரிசு வாங்கிக்க. காத்தடிச்சி குப்பை கோபுரத்திலே போய் உட்கார்ந்து கிட்டா அது கலசம் ஆகிடாது. தப்பு பண்ணி பெத்தவ சாவுக்குக் காரணமான இவளை நீங்க வேணா மன்னிக்கலாம். அவளைப் பெத்தவ ஆத்மாவும் என்னை மாதிரி உண்மையான ஊழியக்காரங்களின் ஆன்மாவும் மன்னிக்காது. நீங்க கொடுக்கிறதா இருந்தா கொடுங்க. இல்லை இவ கையாலதான் வாங்கணும்னா அந்தப் பிச்சை எனக்குத் தேவையில்லை” அவள் முகத்தில் அடித்தார்போலப் பட்டென்று பேசவும் சாரதா சுணங்கிப்போனாள். முகம் சுரத்திழந்து போனது. செய்வதறியாது கணவனைப் பார்க்க அவன் பார்வையும் அந்நேரம் மலைத்துப்போய்.

சாரதா அழுதபடியே வேகமாய் உள்ளே ஒடினாள். “போடா நீ போய் சமாதானப்படுத்து. அம்மாவும் அப்பாவும் உங்களைப் பார்க்கணும்னு காத்திருக்காங்க. இந்தா புள்ளே நீ போ அப்பறம் வந்து பரிசை வாங்கிக்கோ” என்று அவளை விரட்டும் சாக்கில் நல்லா பேசுனே என்று கையில் கத்தையாய் சில சலவைத்தாள்களைத் திணித்தார் சிவராமனின் சித்தப்பா. இவை ஏதும் அறியாமல் மனைவியைச் சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தான் சிவராமன், வலை இறுகலாகப் பின்னப்பட்டு இருப்பதை அறியாமல்.

அந்த உயர்ரக செல்போன் இறப்பின் நேரத்தைத் தள்ளிப்போட்டுத் தன் உயிரைத் தக்க வைத்துக் கொண்டதற்குச் சாட்சியாய் வலப்பக்கமுனையில் நான்குகோடுகள் மேலும் கீழுமாய் உயர்ந்து பின் நிலையாய் நின்றன. டிஸ்பிளேயில் நீலகண்டனின் எண்! இரண்டு முறை அடித்து ஓய்ந்தது. பின் சற்றே பலவீனமான குரலில், “யாரு?” நீலகண்டனின் குரல் ஒலித்தது. “அப்பா” என்று வெடிக்கும் ஜெயாவின் குரல்.

“என்னை…காப்பாத்துங்கப்பா…” என பலத்த மூச்சிரைப்போடு. நான்கைந்து முறை நீலகண்டன் பதற்றத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டார். “ஜெயா எங்கேம்மா இருக்கே? உனக்கு என்னம்மா ஆச்சு?”

“அப்பா…..” என்ற தீனமான அலறலோடு ஜெயாவின் குரல் ஓய்ந்தது. மேலும் பல முறை அதே எண்ணிற்கு முயன்று பார்த்தும், நடைபாதைவாசிக்கு எட்டாத பங்களாவைப் போல கானலாகவே அந்த எண்ணின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நீலகண்டன் உடனே விக்ரமிற்கு அழைத்தார்.

லீனா விக்ரமின் அறைக்குள் நுழையவும், விக்ரம் நீலகண்டனின் போன் பேச்சை முடிக்கவும் சரியாய் இருக்க, என்ன என்பதைப் போல பார்த்தாள் அவள்.

“நீலகண்டனிடம் இருந்து ​போன்”

“என்னவாம்?” லீனாவின் குரலில் ஏக அலட்சியம்.

​சொன்னான். “இப்போ வந்த போன்காலை வைத்துப் பார்க்கும் போது பணத்திற்காகக் கடத்தப்பட்டது போலத்தான் தெரிகிறது. ஜெயாவை அவர்கள் அடித்துத் துன்புறுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது.”

“அப்படியா?” வெகு சாதாரணமாகக் கேட்ட லீனாவை வியப்பாய் பார்த்தான் விக்ரம்.

“உன்னோட நடவடிக்கைகள் எல்லாமே வித்தியாசமாக இருக்கு லீனா. என்னாச்சு எனிதிங் பிராப்ளம்?”

“விக்ரம் நமக்கு இதைப்போல ஆயிரம் கேஸ். எதுக்கு அலட்டிக்கிறே? நம்மால முடிந்த வரையில் விசாரிப்போம். விவரத்தைச் சொல்லலாம். எனக்கென்னவோ நீலகண்டன் விஷயத்திலும் அந்த ஜெயா விஷயத்திலும் நீ எக்ஸ்ட்ரா கேர் எடுத்துக்கொள்வது சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஒருத்தருடைய கஷ்டத்திற்குத் தீர்வு சொல்வதுதான் நம்வேலை. அதிலேயே உழல்வது இல்லை. மத்த கேஸிலும் கவனம் செலுத்து” சொல்லிவிட்டு அவள் நகர,  “லீனா காலேஜ்லே என்ன சொன்னாங்க? என்றான்.

“நத்திங். சும்மா ஜெனரல் வெரிபிகேஷன்தான். எக்ஸாம் நெருங்கப்போகுது இல்லையா?” என்றவள், “அங்கிள் போன் பண்ணினார். உன் போன் ரீச் ஆகலையாம். ஒரு வாரத்திற்கு முன்னாடி கல்லூரி டூர் போயிருந்த அ​சோக் மதியம் வந்துட்டானாம்.  முடிந்தா ஒருதரம் உன்​னை வீட்டுக்கு வந்துட்டு​ப் போகச்​ சொன்னார்”  “நான் நீலகண்டன் வீட்டுக்குப் போறேன். வருவதாய் இருந்தால் வா. வெளியில் வெயிட்பண்றேன்” என்று விக்ரம் சொல்லிவிட்டுப் போக லீனாவின் முகம் பேயறைந்தார்போல் இருந்தது எது வரையில் இவன் அறிந்திருக்கிறான் என்று!

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!