day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பெண்கள் பின்தங்குவது ஏன்? – யமுனா

பெண்கள் பின்தங்குவது ஏன்? – யமுனா

 

செவ்வாய்க் கோளுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தின் முதன்மைப் பணிகளில் பெண்கள் ஈடுபட்டாலும்கூட, பொருளாதார அறிவிலும் தொழில்நுட்பத் தேர்ச்சியிலும் ஆணைக் காட்டிலும் பெண்கள் பின்தங்கியுள்ளனர் என வாதிடுவோர் உண்டு. அது உண்மையா?

இந்தக் கேள்வியின் விடையை, ‘ஏன் பாலினச் சமத்துவம் தேவை?’ என்கிற தலைப்பில் ‘பே.டி.எம்.’ உருவாக்கிய காணொலி சொல்கிறது. வெவ்வேறு வயதுகொண்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் ஒரு நேர்க்கோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அம்மா – மகன், கணவன் – மனைவி, நண்பர்கள் என்று இரண்டிரண்டு பேராகத் தேர்ந்தெடுத்திருந்தார்கள். அவர்களுக்குச் சிறு போட்டி அறிவிக்கப்படுகிறது. அங்கே கேட்கப்படுகிற கேள்விகளுக்கு ஆம் என்று பதில் சொல்கிறவர்கள் ஓரடி முன்னே செல்ல வேண்டும், இல்லை என்பது பதிலாக இருந்தால் அவர்கள் ஓரடி பின்னே செல்ல வேண்டும். ‘நீங்கள் பத்து வயதுக்குள்ளேயே மிதிவண்டியை ஓட்டக் கற்றுக்கொண்டீர்களா?’ என்பது முதல் கேள்வி. ஒரு பெண்ணைத் தவிர அனைவரும் முன்னால் சென்றார்கள்.

‘இசை பயின்றிருக்கிறீர்களா, பள்ளியில் ஏதாவதொரு விளையாட்டைக் கற்றுக்கொண்டீர்களா, பள்ளி நாட்களிலேயே உங்கள் ஆடையை அயர்ன் செய்யத்  தெரியுமா, வீடியோ கேம் விளையாடியிருக்கிறீர்களா, உங்களுக்காக மட்டுமல்லாமல் வேறு யாருக்காவது காலை உணவு அல்லது தேநீர் தயாரித்திருக்கிறீர்களா’ என்று அடுத்தடுத்து கேள்விகள் வர, பங்கேற்றவர்களின் முகங்களில் மகிழ்ச்சியும் ஆரவாரமும். சமையல் குறித்த கேள்விகளுக்கு ஆண்கள் பின் தங்க, விளையாட்டு உள்ளிட்ட கேள்விகளுக்குப் பெண்கள் பின்னடைந்தனர்.

ஆனால், அடுத்தடுத்த கேள்விகள் இந்த உற்சாகத்தை உடைத்தன. ‘உங்கள் வீட்டுக்கான அனைத்துக் கட்டணங்களையும் நீங்கள்தான் செலுத்துவீர்களா, இன்றைய தங்கம் விலை குறித்துத் தெரியுமா, உங்கள் வருமானத்தின் சம்பள விகிதம் குறித்துத் தெரியுமா, நீங்கள் கையெழுத்திடும் டாக்குமெண்ட்டில் எழுதியிருப்பதைப் படித்துப் பார்ப்பீர்களா, யாருடைய அனுமதியும் இல்லாமல் உங்கள் பெயரில் ஏதாவது ஒரு வாகனத்தை வாங்கியிருக் கிறீர்களா’ என்று கேள்விகள் நீள, பெண்களின் முக ங்களில் குடியிருந்த ஒளி குறைந்தது. பொருளாதாரம் தொடர்பான கேள்விக்கு மூத்த பெண்கள் பின் தங்க, காப்பீட்டுத் திட்டங்கள், முதலீடுகள், பட்ஜெட் போன்ற கேள்விகளில் இளம்பெண்களும் பின்னடைந்தனர். கேள்விகள் எல்லாம் முடிந்தபோது சில ஆண்கள்  மட்டுமே முன்னால் இருந்தனர். திரும்பிப் பார்க்குமாறு அவர்களிடம் சொல்லப்பட்டது. திரும்பிப் பார்த்தபோது பெண்கள், தொடங்கிய இடத்திலேயே நின்றிருந்தனர்.

தொடக்கத்தில் இருவரும் சமமாக முன்னேற எந்த இடத்தில் பெண்கள் பின்னடைவைச் சந்தித்தனர்? பொருளாதாரம், பணத்தைக் கையாளுதல் போன்றவை சார்ந்த கேள்விகள் வந்தபோதுதான் பெண்களால் ஓரடிகூட முன்னால் வைக்க முடியவில்லை. ‘ஏன் நான் பின் தங்கினேன்? ஆண்களைப் போல நானும் முதல் வரிசைக்குச் சென்றிருக்கலாம். ஆனால், இதெல்லாம் நமக்குப் புரியாது என்று நானே சிலவற்றைப் பற்றி அறிந்துகொள்ளாமல் தவிர்த்துவிட்டேன். அதுதான் இதற்குக் காரணம்’ என்று ஒரு பெண் சொன்னார்.

‘இது என் கண்ணைத் திறந்துவிட்டது. பணத்தைக் கையாள்வது அல்லது சேமிப்பது போன்றவாற்றில் என் வீட்டு ஆண்களையே நான் நம்பிக்கொண்டிருந்தேன்.

‘என் சிறு வயதிலிருந்தே பணம், சேமிப்பு போன்றவை குறித்து நான் தெரிந்துகொண்டிருக்க வேண்டும்.’

‘இதையெல்லாம் வீட்டு ஆண்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைத்திருந்தேன். அது தவறு என்று இப்போது புரிகிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவே இப்படியொரு இடைவெளி உருவாகியிருப்பதை உணரவில்லை.’

‘ஆணுக்குக் கம்பீரமான ஆண்மையைப் பறைசாற்றும் தன்மையையும் பெண்ணுக்குப் பாரம்பரியம், பண்பாடு போன்ற அடையா ளங்களையும் உருவாக்கி வைத்திருக்கிறோம்.’

‘சமையல், விளையாட்டு என்று கேள்விகள் கேட்கப் பட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் முன்னும் பின்னுமாகச் சென்றுகொண்டிருந்தோம். ஆனால், அடுத்தடுத்த கேள்விகளில்தான் ஆணுக்கும் பெண்ணுக்குமான இடைவெளி புரிந்தது.’

‘இதையெல்லாம் பெண்களால் செய்ய முடியாது என்று நினைத்தேன். அது எவ்வளவு பெரிய பாகுபாடு என்று இப்போது புரிகிறது.’

–    அந்த விளையாட்டில் பங்கேற்றவர்கள் சொன்னவை இவை. வீட்டின் மின் கட்டணத்தைச் செலுத்துவதில் தொடங்கி நாட்டின் பொருளாதாரம், பட்ஜெட், முதலீடு போன்றவை குறித்தும் பெண்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் அல்ல. பணம் என்பது ஆண்கள் மட்டுமே கையாளக்கூடிய அல்லது முடிவெடுக்க வேண்டிய பொருள் அல்ல. அதனால் பொருளாதார அறிவை ஆண் – பெண் இருவருக்கும் பொதுவில் வைப்போம். பணம் சார்ந்த முடிவை  எடுப்பதில் பெண்களின் பங்களிப்பும் அவசியம். எந்த முடிவையும் ‘அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்’ என்று வீட்டு ஆண்களைக் கைகாட்டுவதை விட்டுவிட்டு, பெண்களும் அவற்றை அறிந்துகொள்ள வேண்டும். பொருளாதார விடுதலையும் தற்சார்பும் பெண்களின் உரிமைகளே!

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!