day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு இல்லாத கல்வி வாய்ப்பா? – மாலதி, கல்வியாளர்

பெண்களுக்கு இல்லாத கல்வி வாய்ப்பா? – மாலதி, கல்வியாளர்


ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு குடும்பமே மேன்மை அடையும். ஆனால் பெண்களுக்காக உயர் கல்வி வாய்ப்புகள் என்ன, அவற்றை அவர்கள் எப்படி பயன்படுத்திக்கொள்வது என்ற குழப்பம் பல குடும்பங்களில் இன்னும் இருக்கிறது. அதைத்தீர்ப்பது எப்படி? கல்வியாளர் மாலதி வழங்கிய பேட்டி…

பெண்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் என்ன?

    கல்விக்கான வாய்ப்பு அனைவருக்கும் சமமானது. பெண்களுக்கு, ஆண்களுக்கு என தனித்துப் பேச வேண்டாம். இன்னும் சில நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் பெண்களுக்கென்று தனியாக கல்வி வாய்ப்புகள் இருக்கிறதா என்ற கேள்விகள் எழுகின்றன. பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை எனலாம். பெண்கள் உயர்கல்விக்கு செல்லும் போது கவனிக்க வேண்டிய ஒரே ஒரு விஷயம், இந்த துறை எனக்குப் பிடித்திருக்கிறதா  என்பது மட்டுமே.

பெண்களுக்கான உயர்கல்வி பாதி நேரம் தடை பெறுவதற்குக் காரணம், சமுதாய சிந்தனையே.  ஒரு பெண் வேலைக்குச் செல்கிறாள் என்றால், அவள் காலையில் சென்று மாலை திரும்பவேண்டும்,  குழந்தை பெறும்போது விடுப்பு வேண்டும், அதிக வருமானத்தை விட சாதாரண வேலையே போதுமானது, இரவு நேர பணி இருக்கக் கூடாது என்பது போன்ற பொது மனப்பான்மையே பெண்கள் பெரிய அளவில் உயர்கல்வியைத் தவிர்ப்பதற்குக் காரணம். மருத்துவப் படிப்பு செலவைப் பார்த்து தயங்கும் அடித்தட்டு மக்கள் அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் அறுவை சிகிச்சை பிரிவு, மயக்க மருந்து துறை, கதிரியக்கவியல், பிசியோதெரபி போன்ற துறையில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதால் இம்மாதிரியான படிப்புகளில் சேரலாம். 

பள்ளிப் பருவத்தில் இருந்தே பெண் குழந்தைகள் தொடர்ந்து படிப்பதற்கு எந்தவிதமான உதவிகள் தரப்பட வேண்டும்?

சமுதாயத்தில் பெண் என்பவள் அடுத்த வீட்டிற்கு அனுப்ப வேண்டிய ஒரு பண்டம். ஆகையால் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? அவள் அவளது கணவனுக்கு சம்பாதித்து கொடுப்பாள். நமக்கு எதுவும் தரப்போவது இல்லை என்ற சிந்தனைதான் இன்றளவும் அதிகமாக இருக்கிறது.

இதனை உடைக்க வேண்டும் என்றால் குழந்தைகளுக்கு ஆறாம் வகுப்பிலிருந்தே அவர்களுக்கான கல்வி வாய்ப்புகள் என்ன, அவர்களது உரிமை என்ன  என்பதை சொல்லிக் கொடுக்கத் துவங்க வேண்டும். அப்போதுதான் அது கடைசி வரை அவர்களுடன் நிலைத்திருக்கும்.  

படிப்பு மட்டும்தான் வாழ்க்கையில் ஊன்றுகோல்.  நிறைய பெண் குழந்தைகளுக்கான கல்வித் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. பணம் தருகிறார்கள். நம்முடைய குழந்தைகளை ஆணோ பெண்ணோ இடைநிற்றல் இன்றி படிக்கவைக்க வேண்டும். பெண் குழந்தைகளுக்கு தைரியத்தையும் அவர்களுக்கான வாய்ப்பையும் சொல்லித் தர வேண்டும்.

பீகார், உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு வருவது குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், ஒன்று வறுமை. மற்றொன்று சமுதாய மாற்றம், பாலியல் தொல்லை, வன்கொடுமை.

தொழில்நுட்பம் பெண் கல்விக்குச் சாதகமாக இருக்கிறதா? 

தொழில்நுட்பம் வளர்ந்து வந்த பிறகு அனைவருக்கும் மதிப்பு கிடைத்து உள்ளது என எண்ணுகிறோம். ஆனால் உண்மையில் பின்னோக்கி நகர்த்தப்பட்டு உள்ளோம். பெண்களை ஒரு போதைப் பொருளாக, பொழுதுபோக்காகப் பார்க்கும் கண்ணோட்டமே அதிகமாக எழுந்துள்ளது. 

இப்பொழுதுதான் அரசாங்கம் “பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம்” என்றும் முயற்சி எடுத்துக் கொண்டுள்ளது. ஆனால் அது மட்டும் போதாது. அனைவரும் அரசுடன் இணைந்து இதற்கான விழிப்புணர்வைக் கொண்டு வர வேண்டும்.       

தொழில்நுட்பக் கல்விகளில் பெண்கள் திறம்பட வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?

கப்பல் கட்டுமானத் துறை, கட்டுமான பொறியியல் போன்ற துறைகளைப் பெண்கள் தேர்ந் தெடுப்பதில்லை. ஒரு சில படிப்புகள் ஆண்களுக்காகவே என்று இருந்தது. கடந்த பத்து வருடத்தில்தான் பொறியியலில் அதிக பெண்கள் நுழைந்தனர். இதற்கான காரணம், இது ஆண்களுக்கான தொழில், இது பெண்களுக்கான தொழில் என்று சமுதாயத்தில் கண்ணுக்குத் தெரியாத ஒரு வேலி போட்டு வைத்துள்ளோம்.  சாதாரணமாக ஒரு இயந்திர பொறியியல் துறையில் ஒரு பெண் படிக்கும்போதும், ஒரு செய்முறை இடத்தில் நின்று வேலை செய்யும்பொழுதும், தோழமையுடன் ஊக்குவிக்காமல் உனக்கு எதற்கு இது? மென்பொருள் துறையை எடுத்து இருக்கலாமே என்ற கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறார் கள். அப்பெண் மன உளைச்சலுக்கு உள்ளாகிறாள். அனைத்தையும் மீறி வெற்றிகரமாகப் படிப்பை முடித்துக் கொண்டு வெளியே வந்தாலும் வேலைவாய்ப்பு என்பது கேள்வியே!      

அணு விஞ்ஞானம் விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் பெண்கள் போதுமான அளவுக்கு வந்திருக்கிறார்களா?

போதுமானதாக இல்லை. சமீபத்தில்  செயற்கைக்கோள் ஏவப்பட்ட 

போது  கூட எண்ணிக்கையில் குறைந்த பெண்களே இருந்தனர். ஏனெனில் இத்துறையில் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டும். அணுக்கரு, உயிரியல் தொழில்நுட்பம் போன்ற ஆராய்ச்சித்துறைகளில் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும். இதற்கு அந்தப் பெண் திருமணம் ஆகாமலோ அல்லது குடும்பத்தின் உறுதுணையுடனோ இருக்கவேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளில் குடும்ப உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே அப்பெண்களின் வேலையின் தன்மையைப் புரிந்து கொண்டு அவர்களுக்குத் துணை நிற்க முடியும். இல்லையெனில், குடும்பச் சுமை காரணமாக ஓரிரு வருடங்களில் பெண்கள் தாமாகவே இத்துறைகளில் இருந்து வெளியேற நேரிடுகிறது. எனவே காரணங்கள் களையப்பட்டு இம்மாதிரியான துறைகளில் பெண்கள் பங்கு அதிகரிக்க வேண்டும்.

 

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!