day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

நான் வில்லி அல்ல – சாந்தி வில்லியம்ஸ்

நான் வில்லி அல்ல – சாந்தி வில்லியம்ஸ்

மாலை வேளைகளில் சின்னத்திரை மெகா தொடர்களில் வில்லியாக மிரட்டுபவர்தான் சாந்தி வில்லியம்ஸ். வில்லியாக வலம் வந்தாலும் ஒரு கதாநாயகியின் மனம் கொண்டு இருப்பவர் அவர். ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சாந்தி வில்லியம்ஸ் என்றால் சீரியல் பார்க்கும் குழந்தையும் மிரண்டு போகும்.

‘மெட்டிஒலி’ என்ற தொடரில் ராஜம் என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் சாந்தி வில்லியம்ஸ். ’சித்தி,’ ’வாணி ராணி,’ என அவர் தொட்ட அனைத்து தொடர்களிலும் அழியா தடம் பதித்தார். நடிப்பில் வில்லியாகவும் குடும்பத்திற்கு கதாநாயகியாகவும் வெற்றிச் சிகரத்தை தொட்டுக் காட்டியவர்  சாந்தி. தோற்றத்தில் எளிமையும், குணத்தில் பொறுமையும் அதிகம் கொண்டவர் என்று பார்த்தாலே தெரிந்துவிடுகிறது.

தனது 13 ஆம் வயதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார் சாந்தி வில்லியம்ஸ். ‘நான் சென்னையில் உள்ள அசோக் நகரில் ஜவஹர் வித்யாலயா பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். என் பள்ளிக்கு அருகில் மலையாளத்தில் ‘செம்மீன்’ என்ற படத்தை இயக்கிய ராமு காரியட் வசித்து வந்தார். அவர் மலைவாழ் மக்களை மையப்படுத்திய கதைக்கு கநாயாகியாக நான் பொருந்துவேன் என்று என் தந்தை அனுமதி பெற்று நடிக்க வைத்தார். அந்தப் படத்திற்காக 1973 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றேன். இதை எண்ணும் போது எனக்குப் பெருமையாக இருக்கிறது’ என்று கூறுகிறார் சாந்தி வில்லியம்ஸ்.

அதனைத் தொடர்ந்து பல மலையாள படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார் சாந்தி வில்லியம்ஸ். ஆனால் அவை மக்களிடையே சிறந்த வரவேற்பைப் பெறவில்லை. ‘1979இல் தமிழில் சிறந்த இயக்குனர் மகேந்திரன் இயக்கிய, ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படத்தில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.  250 நாட்களுக்கு மேல் ஓடியது. அந்தப் படத்திற்குப் பிறகு எனக்குத் திருமணமாகி விட்டது. அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால் என்னால் நடிக்க முடியவில்லை’ என மனம் திறக்கிறார் சாந்தி வில்லியம்ஸ்.

1979ஆம் ஆண்டு சாந்தகுமாரி ஆன அவர் ஓர் அழகிய காதலுடன் சாந்தி வில்லியம்ஸ் ஆக மாறினார். ‘நெஞ்சத்தை கிள்ளாதே’ படம் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒளிப்பதிவாளர், இயக்குனர் வில்லியம்ஸ் மலையாளத்தில், ‘மிஸ்டர் மைக்கேல்’ என்ற படம் இயக்கிக் கொண்டிருந்தார்.  அந்தப் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலுக்காக என்னை நாடினார். என்னைப் பார்த்துவிட்டு விரும்பி, திருமணம் செய்துகொள்ள என் அப்பாவிடம் பேசினார். ஆனால் அவர் கருப்பாக குள்ளமாக இருந்ததால் நான் மிகவும் யோசித்தேன்.  கடவுள் எழுதிய எழுத்தை யாரால் மாற்ற முடியும்? ஹோட்டல் மேலிருந்து குதிப்பேன் என வில்லியம்ஸ் ஆர்ப்பாட்டம் செய்து இறுதியில் கல்யாணம் செய்து கொண்டார்’ என இயல்பாகக் கூறுகிறார் சாந்தி.

வில்லியம்ஸ்  12 படங்களுக்கும் மேலாக சொந்தமாக இயக்கியுள்ளாராம். ’வில்லியம்ஸ் வேலையில் இருக்கும்போது வீடு, குடும்பம் இருப்பதை மறந்து வேலையில் மூழ்கிவிடுவார். மிஸ்டர் மைக்கேல், ராசலீலா, பொன் தூவல் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார் வில்லியம்ஸ். கடைசியில் அவர் எடுத்த படங்கள் எல்லாம் பிளாப் ஆகத் தொடங்கியது. வீடு, சொத்துக்கள் எல்லாம் ஒன்று ஒன்றாக கரையத் தொடங்கின.  அவரும் மனம் வருந்தி உடல்நலம் குன்றினார். உயர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். வீட்டில் நிலைமை கொஞ்சம் மோசமான பிறகு நான் நடிக்கலாம் என முடிவெடுத்தேன்.  நான் நடித்து அவரைக் காப்பாற்றினேன். ஐந்து வருடம் என்னால் முடிந்த அளவிற்கு நன்றாகப் பார்த்துக் கொண்டேன்.’

மயிலாப்பூர் சாய்பாபா கோயிலுக்குச் செல்லும் வழக்கம் கொண்டிருந்தாராம் சாந்தி வில்லியம்ஸ். அங்குதான் அவர் சின்னத்திரை அரசி என்று வர்ணிக்கப்படும் ராதிகா சரத்குமாரைச் சந்தித்தாராம். 

‘ராதிகா சரத்குமார் என் கணவரின் சிறந்த நண்பர். சாதாரணமாகப் பேசும் பொழுது மீண்டும் நடிக்கும் எண்ணம் இருக்கிறதா? என அவர் கேட்டார். நான் ஆம் எனக்கூற ‘சித்தி’ தொடரில் வாய்ப்பு கொடுத்தார். ’சித்தி’ தொடரில் நான் நடித்த கதாபாத்திரம் நேர்மறையான கதாபாத்திரம். அது எனக்கு மிக மன நிறைவைக் கொடுத்தது’ என்கிறார் சாந்தி.

மெட்டி ஒலியில் ராஜம் என்ற கதாபாத்திரம் சாந்தியை மனதளவில் பாதித்ததாம்.

‘நான் மிகவும் கஷ்டப்பட்டேன்.  ஆனால் அந்தக் கதாபாத்திரம் எனக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பை வாங்கிக் கொடுத்தது. ஒரு கடைக்குச் சென்றால் கூட  அங்கு ஒரு குழந்தை , ‘அம்மா ராட்சசி’ என்று கூறும். அதைக் கேட்கையில் மனம் துன்புறும். ஆனால் அவரது அம்மா, ‘இல்லங்க, அவ தினமும் சீரியல் பாக்குறா’ என்று சொல்லும்போது மனம் மகிழ்ச்சி தரும்’ எனக் கூறுகிறார் சாந்தி வில்லியம்ஸ்.

கணவர் வில்லியம்ஸ் மறைவு சாந்தி வில்லியம்ஸைப்  புரட்டிப்போட்டது. ‘அவர் இறக்கும் தறுவாயில் நான் அவருடன் இல்லை. அவர் ஹைதராபாத்தில் இறந்தார். நாங்கள் சென்னையில் இருந்தோம். அவரை எங்கும் அடக்கம் செய்ய ஒத்துக்கொள்ளவில்லை. காரணம், அவர் எந்த சமூகத்தையும் சார்ந்தவர் அல்ல. இறுதியாக நான் பிடிவாதம் பிடித்து மந்தவெளியில் அவருக்கு ஒரு லட்ச ரூபாய் செலவில் கல்லறை கட்டி உள்ளேன். நான் நடித்துப் பெயர் வாங்கும்போது அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். அவர் எங்களுடன்தான் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’ என கண் கலங்குகிறார் சாந்தி வில்லியம்ஸ்.

சின்னத்திரை தொடர் என்றாலே ஒரு ஆணுக்குச் பல உறவுகள், ஒரு பெண்ணுக்குப் பல தொடர்புகள் என்று ஆகிவிட்டது. இதை சாந்தி வில்லியம்ஸ் கண்டிக்கிறார்.

‘நிஜ வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்களே தொடரில் கதையாக வருகிறது. ஒரு ஆணுக்குப் பல பெண்கள், ஒரு பெண்ணுக்குப் பல ஆண்கள் என்று கூறுவதெல்லாம் மிக முறைகேடானது. இந்தக் காலத்தில் இதுவும் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. நாம் தமிழ் கலாச்சாரப்படிதான் வாழ்கிறோமா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.  இதைத்தொடர்களில் காட்டும் பொழுதாவது திருந்துவார்களா என்பதற்காகத்தான் காட்டப்படுகிறது.  மெட்டி ஒலியில் நான் ஒரு மோசமான மாமியாராக நடித்திருப்பேன். அதைப் பார்த்து உண்மையில் பல மாமியார்கள் மனம் திருந்தியுள்ளதாக கேட்டறிந்தேன’ என மனம் திறந்து விளக்குகிறார் சாந்தி வில்லியம்ஸ்.

நிறைய தொடர்களில் நடித்திருக்கும் சாந்தி வில்லியம்சுக்கு இயக்குனர் ஆகும் ஆசை இல்லையாம். 

‘நான் இன்னும் நடிப்பில் ஜூனியராகத் தான் இருக்கிறேன். கற்றுக்கொள்ள வேண்டியது அவ்வளவு இருக்கிறது’ என தன்னடக்கத்துடன் கூறுகிறார் சாந்தி.

 

சிறு வயதிலேயே திருமணம் செய்து பல வெற்றிகளையும் பல திருப்பங்களையும் பல இன்னல்களையும் கண்டவர் சாந்தி வில்லியம்ஸ். அவை எதையும் கண்டு மனம் சோராது தைரியத்துடன் தன் நான்கு குழந்தைகளுக்கும் நல்வாழ்வை அளித்துள்ளார் அவர். ஒரு பெண் என்பவள் எதையும் தைரியமாய் எதிர்கொண்டு வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் சாந்தி வில்லியம்ஸ்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!