day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

துப்பறியும் பெண் புலி -யாஸ்மின்

துப்பறியும் பெண் புலி -யாஸ்மின்

யாஸ்மின்! தனியார் துப்பறியும் துறையில் சாதனை படைத்தவர். இந்தியாவில் இருக்கும் மிகச் சில பெண் துப்பறிவாளர்களில் ஒருவர். வழக்கறிஞராகவும் பரிணாமம் அடைந்தவர். சாதனைப் பெண்மணி, தங்கமங்கை என பல விருதுகளுக்கு சொந்தக்காரர்.  7 ஆண்டு காலமாகத்  துப்பறியும் பணியை செவ்வனே செய்து வருபவர் யாஸ்மின்.

கோவையில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர்தான் யாஸ்மின். அவருடன் பிறந்தவர்கள் நான்கு பேர். அவருக்கு இரண்டு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். அவருடைய கணவர் ஒரு தொழிலதிபர். யாஸ்மினுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். 

யாஸ்மின் துப்பறியும் துறையைச் தேர்ந்தெடுத்தபோது உறவினர்களின் குத்தல் பேச்சு, பயமுறுத்தல், எதற்கு இந்த ஆபத்து என்ற கேள்விகள் என எல்லாவற்றையும் சந்தித்தாராம்.  பிறகு பேசி புரிய வைத்து வீட்டில் அன்பால் அனுமதி வாங்கினாராம். வென்ற பிறகு எந்தச் சிக்கலும் இல்லையாம். எல்லோ ரும் யாஸ்மினைக் கொண்டாடுகிறார் களாம். அவருடைய கணவரே அவருக்குப்  பக்கபலமாக இருக்கிறா ராம். 

  பிஏ   (அரசியல் அறிவியல்) படித்த யாஸ்மின் எல்எல்பி முடித்துவிட்டு வழக்கறிஞராகவும் இருக்கிறார். 

‘என் சிறு வயதில் நண்பர்களோடு ஒளிந்து கண்டுபிடிக்கும் விளையாட்டை விளையாடுவோம். மற்ற பெண்கள் விளையாடும் விளையாட்டை நான் விளையாட மாட்டேன். க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவல்கள்தான் படிப்பேன். அதிலும் முதல் பாதியைத்  தான் படிப்பேன். பிறகு புத்தகத்தை மூடி வைத்துவிட்டு இக்கதையில் குற்றம் செய்தவர்கள் யார்? இப்படி நடந்திருக்குமா ? என யூகிப்பேன். பிறகு புத்தகத்தின் இறுதிப் பக்கத்தைப்   படிப்பேன். நான் யோசித்ததும் ராஜேஷ்குமார் முடித்ததும் சரியாக இருக்கும். சரியாக இருந்தால் நானே எனக்கு சபாஷ் போட்டுக் கொள்வேன்,’ என தனது தனித்துவமான  சிறுவயது நிகழ்வுகளை விளக்குகிறார் யாஸ்மின்.

கல்லூரி முடிந்ததும் யாஸ்மினுக்குத்  திருமணம் செய்து வைத்துவிட்டார்களாம். அப்போது தையல் நிலையம் ஒன்றை வைத்துப் பார்த்து வந்தாராம் அவர். அவருக்குக் கீழ் 4 பேர் வேலை செய்தார்களாம். 

‘வாழ்க்கை இப்படியே ஓடி விடுமோ என்ற பயம் எனக்குள் வந்தது. அச்சமயத்தில் டிடெக்டிவ் பற்றி ஒரு பேப்பரில் படித்தேன். அதை நடத்துகிறவரை நேரில் சென்று சந்தித்தேன். அவர் ஒரு கேசைக்  கையில் கொடுத்து கண்டுபிடிக்கச் சொன்னார். போராடிப் போராடி பல நுட்பங்களைக் கற்றுக் கொண்டேன்‌. பிறகு நானே தனியாக வெரிஃபிகேஷன் சர்வீஸ் ஆரம்பித்தேன்’ என சாதாரண பெண் சாதனைப் பெண்ணாக மாறியதை விளக்குகிறார் யாஸ்மின்.        

‘இந்தத் துறையில் காலையில் வேலையை ஆரம்பித்து மாலையில் முடித்து வீட்டு வேலையில் கவனம் செலுத்தலாம் என எதுவும் திட்டமிட முடியாது. ஒரு வழக்கை ஒரு வாரத்தில் முடித்து விடலாம். சில வழக்குகள் முடிக்க முடியாதபடி சிக்கலாகவும் இருக்கலாம். வருடம் முழுவதும் வழக்குகள் வந்தபடியே இருக்கும். நாம் ஒருவரை சேலத்தில் தேடிக் கொண்டிருப்போம். அவர் சென்னையில் ஒரு பாரில் குடிப்பதாகத்  தகவல் வந்தால் சென்னைக்கு அவர் குடித்துவிட்டு கிளம்புமுன் அவர்தானா என்று பார்க்க அந்த பாருக்குப் போக நம்மிடம் ஆள்பலம் இருக்க வேண்டும். மேலும் தொழில்நுட்பத்தில் நாம் முன்னணியில் இருக்க வேண்டும். கண்ணுக்குத்  தெரியாத கேமராக்கள், ரெக்கார்டர் இப்படி எது வந்தாலும் சமாளிக்கும் நெஞ்சுரம் வேண்டும். சில மிரட்டல்கள் போன்களில் எரிச்சல் தரும். அவற்றை நிதானமாக சமாளிக்கும் திறமை வேண்டும். நம்மைப்  பாதுகாக்க எப்போதும் யாருக்கும் தெரியாமல் மப்டி செக்யூரிட்டி இருக்க வேண்டும்’ என தைரியப்  பெண்மணியாகத்  தன் அடுத்த பரிணாமத்தைக்  காட்டுகிறார் யாஸ்மின்.

இந்தத் துறையில் எப்போது வேலைக்கு அழைப்பு வரும் என்று சொல்ல முடியாது என்று கூறுகிறார் யாஸ்மின். இரவில் உறங்கிக் கொண்டிருக்கும்போது அழைப்பு வந்து உறக்கத்தைக் கெடுக்குமாம். அப்போது உற்சாகமாக அழைப்பை எடுத்துப் பேச வேண்டுமாம். குடும்பத்தோடு திரைப்படம் பார்க்கக் கிளம்பும்போது வழக்கில் தொடர்புடைய ஒருவர் வேறு ஒரு ஊரில் பேருந்தில் ஏறிக்கொண்டிருக்கிறார் என்று கூறுவார்களாம். அப்படியே திட்டத்தைக்  கைவிட்டுவிட்டு, அந்த நபரை எப்படிப் பின்தொடர்வது, அடுத்த திட்டங்கள் என்ன என்றெல்லாம் வேலையில் மூழ்கிவிட வேண்டியதாக இருக்குமாம். இதனால் குடும்பத்தில் ஏமாற்றம் வந்துவிடுமாம். எதையும் சமாளிக்க வேண்டும் என்கிறார் அவர்.

‘எந்த நேரமும் தாக்குதல் கூட வரலாம். தற்காப்புக் கலை மிகவும் அவசியம். மிரட்டல் என்று எடுத்துக்கொண்டால் அது சர்வ சாதாரணம். தாங்கணும். தாங்கி நிற்க வேண்டும்’ எனக்  கூறுகிறார் யாஸ்மின்.

தனியார் துப்பறியும் நிறுவனங்களில் திருமணம் பற்றிய விசாரணைகள்தான் அதிகம் வருகின்றன என்று கூறுகிறார் யாஸ்மின். திருமணத்துக்கு முன் மணமகன், மணமகள் பற்றிய விசாரணை, வேலை பற்றிய ஊர்ஜிதம், வேலை செய்யும் இடத்தில் வேறு காதல் உறவு மற்றும் பழக்க வழக்கம், சொத்து விபரம் பற்றி விசாரிக்கச் சொல்லும் வழக்குகள்தான் பெரும்பாலும் வருகின்றன என்று யாஸ்மின் கூறுகிறார். 

திருமண உறவில் சந்தேகம், விவாகரத்துக்குத்  தேவையான சாட்சியங்கள் போன்ற வழக்குகளும் அதிகம் வருகின்றனவாம். 

‘வாழ்வின் எல்லா தருணத்திலும் டிடெக்டிவ் தேவைப்படுகிறது. ஒரு இளம் இயக்குநருக்கு திரைப்பட வாய்ப்பு தரலாமா? படத்தை எடுத்து முடிக்கும் அளவிற்கு அவர் தகுதியானவரா? அவருக்கு என்னென்ன பழக்கம் இருக்கின்றது? அவரின் பின்புலம் என்ன? இதுபோன்ற வழக்குகளும் வரும். மேலும் ஒருவரை கம்பெனி பார்ட்னராக சேர்த்துக்கொள்ள முடியுமா? இதுபோன்ற வழக்குகளும் வரும்’ என்கிறார் யாஸ்மின்.

துப்பறியும் துறையில் என்ன தேவையோ அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் அவர். சைக்கிள் ஓட்டியபோது இருசக்கர வாகனம் கற்றுக்கொண்டாராம். பிறகு கார் கற்றுக்கொண்டாராம். ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் ஜிம் போனால்தான் உடல் தகுதி இருக்குமாம். பிறகு குதிரை ஏற்றம்கூட கற்றுக்கொண்டாராம் யாஸ்மின்.          

‘கேஸ் விஷயமா அடிக்கடி வக்கீல் பார்க்கவேண்டிய நேர்ந்தது. அடுத்தவரை சார்ந்திருத்தல் எரிச்சலாக இருந்ததால் நானே எல்எல்பி படித்துவிட்டு வழக்கறிஞர் ஆனேன். பிறகு என்ன தேவைப்படுகிறதோ அதைத்  தேடி நானே ஓடுவேன். கற்றுக் கொள் வேன்’ என கம்பீரமாகக்  கூறுகிறார் யாஸ்மின்.

இந்தத் துறையில் பொறுமை மிகவும் அவசியம் என்று கூறுகிறார் அவர். ஒரே இடத்தில் எட்டு மணி நேரம்கூட காத்திருக்க வேண்டியிருக்குமாம். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மன நோயாளியைப் போல், பிச்சைக்காரரைப் போல் வேடமிட்டு  நடித்துக்கொண்டு வலம் வரத்  தெரிய வேண்டும். அதற்கு நன்றாக நடிக்கத்  தெரிய வேண்டும். சட்டென்று சக மனிதர்களிடம் பேசிப் பழகத் தெரிய வேண்டும். ‘பொதுவாக ஏதாவது விசாரிக்க வேண்டும் என்றால் யாரும் போலீசுக்குப் போவதில்லை. போலீசுக்குச்  சென்றால் குடும்ப மானம் போய்விடும் என்று நினைப்பார்கள்.எனவே யாருக்கும் தெரியாமல் கண்டுபிடித்து சொல்லுங்களேன் என்று எங்களிடம் வருவார்கள்’ எனப் புன்னகைக்கிறார் யாஸ்மின்.           

இவரைப் பற்றி தமிழ், ஆங்கிலம்  என பல முன்னணிப் பத்திரிகைகள் கட்டுரைகள் எழுதியுள்ளன. பேட்டி எடுத்துள்ளன. பல இணைய வானொலிகளிலும், பல தொலைக்காட்சிகளிலும் இணைய வலைக்காட்சிகளிலும் இவருடைய நேர்காணல் வந்துள்ளது. சாதனைப்  பெண்மணி விருது, தங்க மங்கை விருது, சிறந்த சேவையாளர் விருது, சிறந்த மகளிர் விருது போன்ற பல விருதுகளை யாஸ்மின் வாங்கியிருக்கிறார்.

யாஸ்மின் பொழுதைக் கழிப்பது எப்படி என்று கேட்டால், ‘இசை கேட்டபடி  என் காரில் என் தோழி ரேணுகாவுடன் ஊர் சுற்றுவது பிடிக்கும். மலைப் பிரதேசங்களில் பயணிப்பது ரொம்பப் பிடிக்கும். நான் ஒரு டிசைனர். அதனால் விதவிதமான மாடல் துணி ரொம்ப தேடித்தேடி கலெக்ட் பண்ணுவேன். நானே டிசைன் பண்ணுவேன். அதனால்  கொஞ்சம் ஷாப்பிங்கும் ஜாலிதான்’ என தனது மறுபக்கத்தைக்  காட்டுகிறார்.         

‘நம் நாட்டுப் பெண்கள் எந்தத்  துறையாக இருந்தாலும் நாம் சிங்கம் என்று உணரவேண்டும். உண்மையிலேயே ஆம்பள சிங்கம் வேட்டைக்கு செல்லாமல் பெண் சிங்கம் கொண்டுவரும் இரையைச் சாப்பிட்டுவிட்டு வெட்டி பந்தா காட்டும். நீங்கள் பெண் சிங்கமாக இருங்கள்’ என பெண்களின் மகத்துவத்தை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறார் யாஸ்மின்.

‘சமூகப் பொறுப்பை நிறைவேற்ற ஒரு பெண் வெறும் குடும்பத்தலை வியாக இருந்தால் மட்டும் போதாது.  அவளின் சுதந்திரம், தனித்துவம், தைரியம், சமூகத்தை எதிர்கொள்ளும் ஆற்றல் போன்றவற்றை எல்லாம் பொருளாதார சுதந்திரமும் அதிகாரமும் தான் தர முடியும். அதை எப்படிப்  பெற முடியும்? அதற்கு ஒரே எளிய வழி. அவள் வேலைக்குச்  செல்வதுதான்’ எனப்  பெண்களுக்கு அறிவுறுத்துகிறார் யாஸ்மின்.

 ‘எப்போதும் காதலனோடும் கணவனோடும் பின்னால் உட்காருபவளாக மட்டும் இருக்காமல் நீங்கள் ஓட்டுபவராக இருங்கள். அவர்களைப் பின்னால் உட்காரச் சொல்லுங்கள். அந்த அளவிற்குத்  தன்னம்பிக்கையை பெறுங்கள். போராடுங்கள். பெண் சமூகத்திற்காகப்  போராடுங்கள்’ என விழிப்புணர்வு தருகிறார் யாஸ்மின். பல பெண்களுக்கு உதாரணமாக,தேடலையே வாழ்க்கையாக அமைத்துக் கொண்டு வாழும் யாஸ்மின் தனியார் துப்பறியும் துறையின் ஒரு பெண் முன்னோடி மட்டுமல்ல, பெண் சமூகத்திற்கே ஒரு முன்னோடி என்று கூறலாம்…

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!