day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

வாழ்க்கையை அனுபவமாகப் பார்க்கிறேன் – -துர்கா நீலிமா ராணி

வாழ்க்கையை அனுபவமாகப் பார்க்கிறேன் – -துர்கா நீலிமா ராணி

 

‘அரண்மனைக் கிளி’ துர்கா என்றால் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எல்லாம் தெரியும் என்பார்கள். அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்துப் புகழ் பெற்றவர்தான் நீலிமா ராணி. ‘ஒரு பெண்ணின் கதை’ என்ற சின்னத்திரை தொடர் மூலம் அறிமுகமானவர்  நீலிமா ராணி. குழந்தை நட்சத்திரமாக நுழைந்து சிறந்த சின்னத்திரை நடிகையாய் பரிணாமம் அடைந்தவர். சினிமாவிலும் நடித்துத் தாக்கம் கொடுத்தவர்.  திரைப்படம்  மற்றும் நெடுந்தொடர்  தயாரிப்பாளராகவும் உள்ளவர்  நீலிமா. திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை 20 ஆண்டுகளுக்கும் மேலாகத்  தக்கவைத்துள்ளார் அவர்.

பெரியதிரையிலும் சின்னத்திரையிலும் தோன்றி தாக்கம் கொடுத்திருக்கும் நீலிமா ராணி, இரண்டு வடிவங்களுக்கும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்று கூறுகிறார்.

‘பெரியதிரைக்கும்  சின்னத்திரைக்கும்  நிறைய வித்தியாசம் இருக்கிறது. சின்னத்திரை என்பதில் நேற்று எடுப்பதை இன்று பார்க்க முடியும். அப்படி இல்லை என்றால் YouTube வழியாகவோ இதர சமூக தளங்கள் மூலம் குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே பார்க்கும் ஆர்வம் இருக்கும். ஆனால் சினிமா என்பது பாதுகாக்கப்படும் பொக்கிஷம். அன்று வந்த பராசக்தி போன்ற படங்கள் நம்மிடம் இன்றளவும் பேசும் பொருளாகவும் வரலாற்றுக் காவியமாகவும் பாதுகாக்கப்படுகின்றன. அதுதான் சினிமா தரும் தாக்கம்’ என்கிறார் அவர்.

பொதுவாக சின்னத்திரைத் தொடர்கள் இல்லத்தரசிகளின் அன்றாடப் பணிகளைப் பாதிக்கின்றன என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.  இல்லத்தரசிகள் தொலைக்காட்சியே கதியாக அமர்ந்துவிடுகிறார்கள் என்றுகூட ஆண்கள் புகார்கள் கூறுகிறார்கள். இதனால் குடும்பங்களில் பிரச்சினைகள் வருகின்றன என்றுகூட கூறப்படுவதுண்டு. இதை நீலிமா ராணி வன்மையாக மறுக்கிறார்.       

’பெண்கள் தங்களின் அன்றாட வேலைகளை விட்டுவிட்டு சீரியல் பார்க்கிறார்கள் என்பது ஏற்புடையது அல்ல. எப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுத்  தான் பெண்கள் தங்கள் பணிகளைச்  செய்கின்றார்கள். வேலைகளை முடித்துவிட்டுத்  தான் சீரியல் பார்க்க நேரம் ஒதுக்குகிறார்கள் அவர்கள். அதேபோல் அவர்களின் நேரம் இதில் மட்டுமே விரயம் ஆகிறது என்பதையும் ஏற்றுக்  கொள்ள முடியாது. அண்டை வீட்டாரோடு பேசுவது போன்ற நிகழ்வுகள் கூட நேரத்தை எடுத்துக்கொள்ளும். ஆகவே பெண்களுக்கு  நேரத்தை எப்படி, எதற்கு செலவிடுவது என்பது நன்றாகத்  தெரியும். நானும் ஒரு குடும்பத்  தலைவி  என்பதால் இதைக் கூறுகிறேன்,’ என்று புன்னகைக்கிறார் நீலிமா.

நீலிமா என்றால் துர்கா என்றுதான் தொலைக்காட்சி ரசிகர்கள் நினைக் கிறார்கள். ஆனால் அவருக்கு முதல் வரவேற்பு கொடுத்த பாத் திரம் ‘வாணி ராணி’ டிம்பிள் கதாபாத்திரம்தானாம்.

’வாணி ராணி’ தொடரில்  ராதிகா அவர்களின் மகளாக  நடித்திருந்தேன். டிம்பிள் என்பது அதில் என் பெயர். அதுதான் எனக்கு மிகுந்த வரவேற்பைத்  தந்தது. அதற்குப்பிறகு  ‘அரண்மணைக்  கிளி’ துர்கா கதாபாத்திரம் வரவேற்பைத்  தந்துள்ளது. நிறைய பேர் என்னை  துர்கான்னு கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் டிம்பிள் கதாபாத்திரம்தான் எனக்கு மிகப்  பெரிய வரவேற்பைத்  தந்தது,’ என்று கூறுகிறார் நீலிமா.

பெரியதிரையில் என்னதான் சூப்பர்ஸ்டார் நடிகையாக இருந்தாலும் ஒரு நடிகருக்கு நிகரான ஊதியம் தரப்படுவதில்லை என்ற குறைபாடு தொடர்ந்து இருக்கிறது. ஆனால் சின்னத்திரையில் அது போன்ற ஒரு நிலை இல்லை என்று மறுக்கிறார் நீலிமா ராணி.

’பெரிய திரைக்கும் சின்னத் திரைக்கும் ஊதிய விகிதம் வேறுபடுகிறது. ஏனென்றால் பெரியதிரையில் ஆண்களின் ஆதிக்கம் அதிகம். ஆண்களை மையப்படுத்திதான் திரைக்கதைகள் அமைக்கப்படுகின்றன.  ஆனால் சின்னத்திரையில் அப்படிக்  கிடையாது. இங்கு அமைக்கப்படும் கதைகள்  பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்படுகின்றன. ஆகவே இங்கு பெண்ணாதிக்க கதைகள்தான் அதிகம். எனவே  சின்னத்திரையைப்   பொறுத்தவரை பெண்களுக்கு ஊதிய பாகுபாடு கிடையாது,’ என்று பெருமையுடன் கூறுகிறார் நீலிமா.

 மீ டூ இயக்கம் பற்றி கருத்துக் கூறி மாட்டிக்கொள்ள விரும்பவில்லை நீலிமா ராணி. 

‘மீ டூ பற்றி நான் கருத்து ஏதும் கூற விரும்பவில்லை. நான் என்னுடைய திரையுலகப்  பயணத்தில் மீ டூ போன்ற விஷயங்களால் பாதிக்கப்படவில்லை. அதே நேரம் அது மாதிரியான செயல்கள் அறவே இல்லை என்று கூறிவிட முடியாது. பாதிப்புகள் இருப்பதால்தானே அதனை வெளிக்கொண்டு வருகிறார்கள். மீ டூ மட்டும் அல்ல. எந்தப்  பிரச்சனையையும் தைரியமாக சமுதாயத்தில் வெளிப்படுத்துவது வரவேற்கப்பட வேண்டியதுதான்,’ என்று ஆதரவு தருகிறார் நீலிமா.

நீலிமாவின் பெரிய  பொழுதுபோக்கு புத்தகங்கள் படிப்பது. அது அவருக்கு மிகவும் பிடித்த விஷயமாம். பிறகு அவருடைய மகளுடன்  நேரத்தைச் செலவிடுவது அவருக்கு மிகவும் பிடிக்குமாம்.  

‘அவளிடமிருந்து நிறைய விஷயங்களைக்  கற்றுக்கொள்கிறேன்,’ என்று பெருமிதம் காண்பிக்கிறார் நீலிமா ராணி.

நீலிமா ராணிக்குப்  பெரிய லட்சியங்கள் இல்லையாம். வாழ்க்கையை அதன் போக்கில் எடுத்துக்கொள் கிறாராம். ’நான் பல வருடங்களாக சின்னத்திரையில் நடித்து வருகிறேன். நான் எதையும் தீர்மானிப்பது கிடையாது. நடப்பதை ஏற்றுக்கொள்வேன்,’ என்கிறார் அவர்.

அவர் தயாரித்த முதல் தொலைக்காட்சித் தொடர் ‘நிறம் மாறாத பூக்கள்.’அது 593 பகுதிகள் தொடராக   வெற்றிகரமாகப்  போனது. இப்போது அவர் இரண்டாவது தொடர் தயாரித்துள்ளார். ‘என்றென்றும் புன்னகை’ என்ற பெயரில் ஜீ தமிழில் அது ஒளிபரப்பு ஆகப்போகிறது. புதிதாக ‘ஈவன்ட் மேனேஜ்மென்ட்’ கம்பெனி ஒன்றை அவரும் அவருடைய கணவரும் சேர்ந்து தொடங்கியிருக்கிறார்கள்.

‘இது எதுவுமே நான் எதிர்பார்க்காதவை. வாழ்க்கையை ஒரு அனுபவமாக ஏற்றுக்கொள்கிறேன். நம் வாழ்வில் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை எதிர்த்துப்  போராடவேண்டும். வெற்றி பெறுவது என்பது வேறு. நாம் முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும்,’ என்று நம்பிக்கையுடன் விடை கொடுக்கிறார் நீலிமா ராணி.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!