day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

சேவை பிரியா!

சேவை பிரியா!

‘மக்கள் சேவை மகேசன் சேவை’ என்பதற்கேற்ப தொடர் தொண்டு செய்து வருபவர் பிரியா ஜெமிமா. 32 வயதான பிரியா ஜெமிமா GEO India Foundaion என்னும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தை நடத்திவருகிறார். அதன் மூலம் உதவி என்று அழைப்பவர்களின் கண்ணீரைத் துடைத்து வருகிறார்.
தனது 3 வயதில் பெற்றோரை இழந்து வாடிய பிரியா ஜெமிமா, கிறிஸ்தவ விடுதி ஒன்றில் வளர்ந்து, யார் என்று அறியாத பலரின் உதவியால் பத்தாம் வகுப்பு வரை படித்தார். அதன்பின் தொழில் கல்வி பயின்று, பணியாற்றி, அதில் வரும் ஊதியத்தில் MBA வரை படித்து முடித்தார்.
‘வாழ்க்கையில் எனக்கு உதவிய அந்த முகம் தெரியாத மனிதர்களைப் போன்று, நான் பலருக்கு உதவ எண்ணினேன்’ என்கிறார் பிரியா.
ஆப்பிள் நிறுவனம், மேரி பிரவுன் என பல முன்னணி மென்பொருள் மற்றும் பெரு நிறுவனங்களில் பிராண்ட் மேலாளராகப் பணியாற்றினார் அவர்.
‘அங்கு நான் பெற்ற ஊதியத்திலிருந்து பதினைந்து சதவீதத்தை பிறரின் நலனுக்காக செலவிடுவேன்’ என்று புன்னகைக்கிறார் அவர் .
பிரியா ஜெமிமா மணந்து கொண்ட ஜார்ஜ், ஸ்போர்ட்ஸ் கேமராமேனாகப் பணிபுரிகிறார்.
‘எனது கனவரின் ஊக்கமும் ஆதரவும் இல்லை எனில் நான் இல்லை’ என்று தன் வாழ்க்கைத் துணையை எண்ணிப் பெருமிதம் கொள் கிறார் பிரியா.
தனது வேலையை விடுத்து, நிகழ்ச்சி மேலாண்மைத் தொழிலை ஆரம்பித்தார் பிரியா. அதில் வரும் வருமானத்தில் பிறருக்கு சேவை செய்தார். 2015இல் ஜியோ இந்தியா ஃபவுண்டேஷன் என்னும் அரசு சாரா தொண்டு நிறுவனத்தை நிறுவினார் அவர்.
‘ஒரு சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்நிறுவனத்தை செயல்படுத்த துவங்கினோம்’ என்று கூறுகிறார் அவர்.
தனது தொண்டு நிறுவனத்தின் முதல் முயற்சியாக பூங்காக்களிலும், பள்ளிகளிலும், மரத்தோட்டம் அமைக்கத் தொடங்கினார் பிரியா ஜெமிமா. பின்னர் மைக்ரோ காடுகளை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். அது இன்று 15 மியாவாக்கி காடுகளாக ஏறத்தாழ ஒரு லட்சம் மரங்களைக் கொண்டுள்ளது.
‘மரம் நடுவதற்கு ஒப்புதல் பெற ஒரு பெண்ணாகப் பல கேலி கிண்டலுக்கும் இடர்ப்பாடுகளுக்கும் ஆளாக வேண்டிய சூழல் இருக்கும்’ என்று சிக்கல்களை விளக்குகிறார் பிரியா.
கல்வி உதவி தேவைப் படும் முந்நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிரியாவுடைய நிறுவனத்தின் உதவியோடு பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்வி படித்து வருகின்றனர். அவரது நிறுவனம் 35 அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளின் சுவர்களை விழிப்புணர்வு ஓவியங்கள் கொண்டு அலங்கரித்திருக்கிறது. மேலும் ஒரு வருடத்தில் 10 குழந்தைகளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய உதவுவது, தற்கொலை எண்ணமுள்ளவர்களுக்கு ஆலோசனை வழங்குவது போன்ற பல நற்பணிகளைச் செய்து வருகிறது பிரியாவின் ஜியோ இந்தியா பவுண்டேஷன்.
‘நான் உதவி செய்துவிட்டு அவர்களைத் திரும்பிப் பார்த்தால் அவர்களின் கண்கள் பேசும் மொழிக்கு மொழிபெயர்ப்பு ஏதும் கிடையாது. அதுதான் என்னை இப்பணியில் மேலும் துடிப்போடு இயங்கும் உத்வேகத்தை அளிக்கிறது’ என்று உற்சாகம் கொள்கிறார் அவர்.
பின்னர் சானிட்டரி நாப்கின் மற்றும் அதை எரியூட்டும் கருவியைத் தயாரிக்கும் தொழிலிலும் பிரியா ஈடுபட்டார்.
‘அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளி மாணவிகளுக்கும், சேரி மற்றும் கிராமப்புறத்தில் வாழும் பெண்களுக்கும் தேவையான சானிடரி நாப்கின்களை இலவசமாக வழங்கி வருகிறேன். அவற்றை எரியூட்டும் கருவிகளையும் அப்பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறேன்’ என்று விவரிக்கிறார் பிரியா ஜெமிமா.
மேலும் பழங்குடி மக்களுக்காக குடும்ப அட்டை பெற வழி வகுப்பது, பட்டா கிடைக்க ஏற்பாடு செய்வது, 100 நாள் வேலை வாங்கித் தருவது என சாதாரண மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பெற்றுத் தருகிறார் பிரியா.
இருளர் இனக் குழந்தைகளின் நல்வாழ்விற்காக இரண்டு கிராமங்களில் பாடசாலைகளைக் கட்டித் தந்துள்ளார் பிரியா.
தன் நிறுவனத்தை சர்வதேச அளவிற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதைத் தன் கனவாக எண்ணி வாழ்கிறார் பிரியா.
‘நான் இச்சமூக பொறுப்பிலிருந்து விடுபட நினைத்ததில்லை, நினைக்கப்போவதும் இல்லை. நான் இவ்வுலகிலிருந்து விடுபட்டாலும் எனது நிறுவனம் என்றென்றும் மனிதர்களின் வாழக்கைக்கு விடையாக இருக்குமே தவிர, ஒருபோதும் சேவையிலிருந்து விடைபெறாது’ என்று கூறி மெய்சிலிர்க்கச் செய்கிறார் பிரியா ஜெமிமா.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!