day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

கடலை மிட்டாயால் இனிக்கும் வாழ்க்கை!

கடலை மிட்டாயால் இனிக்கும் வாழ்க்கை!

நம் கண்ணையும் நாவையும் கவரும் வகையில் இன்று விதவிதமான நிறத்தாள்களில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் வந்தாலும் பலருக்கும் பிடித்த தின்பண்டம் கடலை மிட்டாய். இனிப்பை விரும்பாதவர்கள்கூடக் கடலை மிட்டாயைத் தவிர்க்க மாட்டார்கள். காலம் மாறியபோதும் மாறாத இந்தச் சுவைதான் நந்தினையைத் தொழில்முனைவோராக மாற்றியுள்ளது.

கடலை மிட்டாய் செய்வதுதான் நந்தினியின் குடும்பத் தொழில். பெரியவர்கள் 35 வருடங்களாகச் செய்துவந்த தொழிலில் புதுமையைப் புகுத்தி இயற்கைக்கு ஊறுவிளைவிக்காத வகையில் செயல்பட்டு முத்திரை பதித்துவருகிறார் நந்தினி. Organutz என்கிற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவருகிறார். 

“ஆரம்ப காலத்தில் என் அப்பா இதைக் குடிசைத் தொழிலாகச் செய்து ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டும் அனுப்பிவந்தார். நான் இந்தத் தொழிலை மேலும் வளர்க்க நினைத்தேன். அதனால் அதனைச் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பேக் செய்து விற்பனை செய்துவருகிறேன்.  கடலை மிட்டாய்  என்றாலே நிலக்கடலையை வைத்து மட்டும்தான் செய்ய முடியும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால், நாங்கள் தமிழ்நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் 11 வகையில் செய்து வருகிறோம்” என்கிறார் நந்தினி. 

பொதுவாக நம் கிராமங்களில் எள் அல்லது நிலக்கடலையில் கடலை மிட்டாய் செய்வார்கள். நந்தினியோ இந்தக் கடலை மிட்டாய்களுடன் முருங்கை, பிரண்டை, கறிவேப்பில்லை எனப் பல சத்தான பொருட்களைக் கலந்து  செய்கிறார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பலாக்கொட்டையில் இருந்து எடுக்கப்பட்ட பொடியில் கடலை மிட்டாய்களைச்  செய்கின்றனர். தன் தந்தை செய்துவந்த தொழில் என்பதால் இதனை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல இவருக்கு அதிகம் முதலீடு தேவைப்படவில்லை. 15 ஆயிரம் ரூபாயை வைத்தே தன் நிறுவனத்தைப் புதுப்பித்துவிட்டார் நந்தினி. அந்தப் பணம்கூட, இயற்கைக்கு உகந்த வகையில் மிட்டாய்களை பேக் செய்யத் தேவைப்பட்ட பொருட்களை வாங்குவதற்கான பணம்தான். அதையும் தன்னுடைய சேமிப்பில் இருந்து எடுத்துப் பயன்படுத்திக்கொண்டார். தேவையான மற்ற எல்லாப் பொருட்களும் தன் அப்பாவிடம் இருந்ததால் செலவு கையைக் கடிக்கவில்லை என்கிறார் நந்தினி.

“இதில் லாபம் என்று பார்த்தால் 30 முதல் 40 சதவீதம் வரை எதிர்பார்க்கலாம். இது எல்லா இடங்களிலும் விற்பனையாகும் பொருள் என்பதால் நாம் பயப்படவும் தேவையில்லை. அதனால், இதற்குச் சந்தையில் பெரிய வரவேற்பு உள்ளது. இந்தத் தொழிலில் வேலை அதிகம் என்பதால் அவ்வளவு எளிதாக யாரும் வர மாட்டார்கள். காற்று நிறைய இல்லாத இடத்தில் 10 மணி நேரம் இருக்க வேண்டும். ஒரு கடலை மிட்டாய் நல்ல முறையில் கிடைக்க 45 நிமிடம் சட்டியைக் கிண்டவேண்டும். இப்படிப் பல கஷ்டங்கள் இருந்தாலும் ஆர்வத்துடன் வருபவர்களுக்குத் தனியாகப் பயிற்சி கொடுக்கிறோம். அதைத் தவிர்த்து அருகில் உள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் இதனை பேக் செய்யக் கற்றுக்கொடுக்கின்றோம்” என்று சொல்கிறார் நந்தினி.

தமிழ்நாடு முழுவதும் தங்கள் தயாரிப்பு கிடைப்பதாகச் சொல்லும் நந்தினி, பிற மாநிலங்களுக்கும் கூரியர் மூலம் அனுப்பிவைக்கிறார். தற்போது வெளிநாடுகளிலும் கிடைக்கும் வகையில் ஏற்றுமதியிலும் இறங்கியுள்ளார். திருமணம் முதலிய பல சுபகாரியங்களுக்கும் தன் தயாரிப்பை வாங்குவ தாகச் சொல்கிறார் இவர்.

“காலையில் வேகமாகப் பள்ளிக்கும் அலுவலகத்துக்கும் செல்லும்போது பலரும் காலை உணவைத் தவிர்த்து விடுகின்றனர். அப்போது சாதாரண ஒரு சாக்லேட்டைச் சாப்பிடுவதற்குப் பதில் வரகு, ராகி  போன்ற சிறுதானியங்களையும் பேரிச்சம்பழம்  போன்றவற்றையும் வைத்துச் செய்யும் கடலை மிட்டாயைச் சாப்பிடுவது மிகவும் நல்லது” என்று ஆரோக்கியக் குறிப்பும் வழங்குகிறார்.

திருமணம் என்பது நம் முன்னேற்றத்துக்குத் தடையல்ல என்பதையும் தன் வெற்றியால் நிரூபித் திருக்கிறார் நந்தினி. “ஆரம்பத்தில் அப்பாவின் கடைக்குத் தேவையான பொருட்களை வாங்க அவருடன் சென்று வந்ததுண்டு. வரவு, செலவு கணக்கும் பார்த்துள்ளேன். ஆனால், அப்போது அதனை எடுத்துச் செய்யும் அளவிற்கு எனக்கு எண்ணம் இல்லை. திருமணத்திற்குப் பிறகே நாம் ஏன் இதைச் செய்யக் கூடாது என்று யோசித்து, பொறுமையாகக் கற்றுக்கொண்டு ஆரம்பித்தேன்.  என் முயற்சிக்குப் பலனாய் சில விருதுகளையும் பெற்றிருக்கிறேன். பண்ருட்டியில் எங்கோ ஒரு மூலையில் சில மாவட்டங்களுக்கு மட்டும் கடலை மிட்டாயை விற்றுக்கொண்டு இருந்த நாங்கள், இன்று உலகம் முழுக்க ஏற்றுமதி செய்ய காரணம் பிறரின் ஊக்கமே. நான் இந்தத் தொழிலைத் தொடங்கும்போது என் குழந்தைக்கு 6 மாதம். என் கணவர் எனக்குப் பக்கபலமாக  இருப்பார். நான் இங்கே வேலையில் இருந்தாலும்  குழந்தையைப் பார்த்துக்கொண்டு என் வேலைகளை எளிதாக்குவார். என் குடும்பத்தின் ஒத்துழைப்பின்றி இவை அனைத்தும் நடக்கச் சாத்தியமில்லை. நான் தொழில் தொடங்கி இரண்டே மாதங்களில் கொரோனா வந்துவிட்டது. அதனால், தொழில் மிகவும் பாதித்தது. அப்போதுதான் வேறு என்ன செய்யலாம் என்பதை யோசித்து Digital Media Marketing, Social Media Marketing போன்றவற்றைக் கற்றுக்கொண்டேன். அதனால், இந்த ஊரடங்கும் கொரோனாவும் எங்களை மேலும் சிந்திக்கவைத்தன என்றுதான் சொல்ல வேண்டும்.  எல்லோருக்கும் ஆர்வமும் திறமையும் இருக்கிறது. குடும்பம், பொருளாதாரம் எனப் பல்வேறு பிரச்சினைகளைக் காரணமாகச் சொல்லி அதனைக் கைவிட்டுவிடுவோம். ஆனால், அப்படிச் செய்யாமல் தொடர்ந்து முயன்றுகொண்டே இருந்தால் கண்டிப்பாக ஒரு நாள் வெற்றி கிடைக்கும்” என்று நம்பிக்கையுடன் விடை கொடுத்தார் நந்தினி. 

 

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!