day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

அறிவுக் கண்ணால் ஐஏஎஸ்!

அறிவுக் கண்ணால் ஐஏஎஸ்!

ஒரு மாற்றுத்திறனாளியாலும் உலகை மாற்ற முடியும் என நிரூபித்து க்காட்டியிருப்பவர் பூர்ண சுந்தரி ஐஏஎஸ்.
கேட்டல் அறிவாலே கிடைத்த ஞானத்தோடு, தன்னம்பிக்கை யின் ஊற்றாய் தடைகளைத் தகர்த்தெறிந்து சாதனை புரிந்திருப்பவர் பூர்ண சுந்தரி. புத்தகங்களை நண்பனாய், பாரதியின் வாக்கை கொள்கையாய் மாற்றிய மதுரை மண்ணின் பாரதிப் பெண் இவர். எண்ணங்களும் செயல்களும் ஒன்று சேர்ந்தால் சாதனை உறுதி என நிரூபித்திருக்கிறார் இந்த இளம்பெண்.
மதுரையில் உள்ள சிம்மக்கல் என்னும் இடத்தில் வசிக்கும் முருகேசன், ஆவுடைதேவி தம்பதியரின் மகள் பூர்ண சுந்தரி. அவர் தனது 5 வயதில் பார்வை நரம்பு சுருங்கியதால் பார்வையை இழந்துவிட்டார். எனினும் தன்னம்பிக்கையை சிறிதும் கைவிடாது பெற்றோரின் உதவியுடன் படிப்பினை செவ்வனே முடித்தாராம் அவர். எந்தப் புத்தகத்தையும் பெற்றோர் மற்றும் நண்பர்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டு மனதில் நிறுத்திக் கொள்வாராம் பூர்ண சுந்தரி.
படிப்பில் அதிகம் ஆர்வம் கொண்ட பூர்ண சுந்தரி பத்தாம் வகுப்பில் 471 மதிப்பெண்ணும், பன்னிரண்டாம் வகுப்பில் 1,092 மதிப்பெண்ணும் எடுத்து சாதனை படைத்தார். ‘சிறு வயது முதலே ஏழைகளுக்கும் மாற்றுத்திற னாளிகளுக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் என்னுள் ஆழப் பதிந்தது. பத்து, பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது சிவில் தேர்வு பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை. மாவட்ட கலெக்டர் மட்டும்தான் ஆக முடியும் என எண்ணினேன். கல்லூரிக்குச் சென்ற பிறகுதான் சிவில் சர்வீஸ் என்பது மாவட்ட கலெக்டர் மட்டுமல்ல, மக்களுக்காக சேவையை உருவாக்கும் இடத்தில் நாம் பணியாற்றலாம் என்ற விழிப்புணர்வு வந்தது. அதன் பிறகே நாம் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டேன்’ எனக் கூறுகிறார் பூர்ண சுந்தரி.
அதற்குப் பிறகு 20க்கும் மேற்பட்ட அரசு போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பல முறை தோல்வியைத் தழுவினார் பூர்ண சுந்தரி. எக்காரணத்திற்காகவும் பின்வாங்காது கொஞ்சம் கொஞ்சமாகத் தன்னைத் தானே அவர் மெருகேற்றிக் கொண்டார். 2018 ஆம் ஆண்டு வங்கித் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊரக வங்கியில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார் பூர்ண சுந்தரி.
கடந்த ஆண்டு நடைபெற்ற குடியுரிமை பணிக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் நான்காவது முறையாகப் பங்கேற்று தேர்வு எழுதி 296வது இடம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் பூர்ண சுந்தரி.
‘முதலில் கல்லூரி நூலகம் என்பது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம். கல்லூரியில் கிடைக்கும் 10 நிமிட இடைவெளியில் கூட முந்தைய ஆண்டு வினாத்தாள் படிப்பது, செய்தித்தாள் படிப்பது போன்றவற்றைத் தொடங்கினோம். கல்லூரி முடித்த பிறகு சென்னையில் உள்ள மனிதநேயம் அகாடமிக்கு சென்றேன். அங்கு எனக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கப்பட்டது. பிறகு நான் சென்னை அடையாறில் உள்ள தமிழ்நாடு அரசு நடத்தக்கூடிய All India Civil Service Centre பயிற்சியகத்தில் இணைந்தேன். அங்கு மிக அருமையான நூலகம் உள்ளது. காலை, மாலை, இரவு என பாகுபாடு இல்லாது மக்கள் எப்பொழுதும் படித்த வண்ணம் இருப்பர். நேர்முகத்தேர்விற்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்னை அழகாக வழிநடத்தியது. இதுவே நான் எடுத்துக்கொண்ட பயிற்சி வகுப்புகள்’ என தான் எடுத்துக்கொண்ட பயிற்சிகளை விளக்குகிறார் பூர்ண சுந்தரி.
பள்ளிப்பருவம் முதலே தலைமையேற்கும் பண்பில் சிறந்து விளங்கியுள்ளார் பூரண சுந்தரி. ‘ஒரு அதிகாரியினுடைய நிர்வாகம் என்பது மக்களுடைய தேவையை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும். நிறைய முன் அனுபவங்களைப் பார்த்து கற்றுக் கொண்டு அதில் நம்முடைய திறனை எவ்வாறு கொடுக்கலாம், நமக்கு முன்னே நிறைய அதிகாரிகள் மக்களுக்கு நிறைய செய்திருப்பார்கள் அதை எவ்வாறு மேம்படுத்தி மக்களிடம் சிறப்பாக சேர்க்கலாம், மிக எளிமையான முறையில் எல்லாவற்றையும் உள்ளடக்கிய வகையில் எப்படி செய்ய வேண்டும் என்பதைப் பொறுத்தே அமைய வேண்டும்’ என விளக்குகிறார் பூர்ண சுந்தரி.
அரசு அதிகாரிகளுக்கு ஆளும் அரசியல்வாதிகளின் நிர்ப்பந்தம் அதிகம் இருக்குமே என்று கேட்கும்போது பூர்ண சுந்தரியின் முகத்தில் கொஞ்சம் புன்னகை. அதையும் சமாளித்துப் பதில் அளிக்கிறார் அவர்.
‘அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இருவருமே மக்களுக்கான பணிகளை செய்யக் கூடியவர்கள்தான். அதிகாரிகள் சட்டத்திற்குப் புறம்பாகவும் உண்மைக்குப் புறம்பாகவும் கண்டிப்பாக உழைப்பையும் அசைவையும் கொடுத்து விடக்கூடாது. நிறைய தடைகள், சவால்கள் கண்டிப்பாக வரச்செய்யும். சவால்கள் இல்லாத வாழ்க்கை முழுமை பெறாது. மக்களின் நலத்திற்காக ஈடுபடும் பணிகளில் வரும் தடை களை இன்னும் பலமாகவே எதிர்கொள்ளலாம். நமக்கான முன்னுதார ணமாகப் பலர் இருக்கின்றனர்‌. அவர்கள் மிக உத்வேகமாகச் செயல்படுகின்றனர். அவர்களுடைய வாழ்க்கை பாடங்கள் நிச்சயமாக எனக்கு வழிகாட்டும். நேர்மையான அதிகாரிகளுக்கு நிச்சயமாக மதிப்பு இருக்கிறது. அவர்கள் தனித்துவமாக உள்ளனர். அவர்கள் மக்கள் மத்தியிலும் அதிக மதிப்பு உள்ளவர்களாக உள்ளனர். நிறைய பேருக்கு முன்மாதிரியாக அவர்களே உள்ளனர்’ என ஒரு அதிகாரியாகத் தன் பரிணாமத்தை சொற்களால் காட்டுகிறார் பூர்ண சுந்தரி.
வாழ்வில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கு ஒரு நீண்ட நம்பிக்கைச் சொற்பொழிவே ஆற்றுகிறார் பூர்ண சுந்தரி.
‘என்னுடைய தம்பி தங்கைகளுக்கு நான் கூற வருவது, நம்மை நம்பக்கூடிய முதல் நபர் நாமாகத்தான் இருக்க வேண்டும். நம் மீது முழு நம்பிக்கையை முதலில் நாம் வைக்க வேண்டும். எந்த சமயத்திலும் நமக்கென்று உள்ள தனித் திறமைகளையும் உழைப்பையும் விட்டுவிடக்கூடாது. விட்டுக் கொடுத்து விடவும் கூடாது. சோதனைகள், விமர்சனங்கள் இவற்றை இச்சமூகம் நம்மீது வைக்கும்போது நாம் அதற்குக் காது கொடுக்காமல் அதைத் தாண்டிப் போகத்தான் முயல வேண்டும். அதனுள் தேங்கி விடக்கூடாது. நாம் நம்மிடம் நிறைய பேசவேண்டும். செல்ப் மோட்டிவேட் ஆக இருக்க வேண்டும். நம்மை நாமே சோர்ந்து போக விடக்கூடாது’ என அழகாகக் கூறுகிறார் பூர்ணசுந்தரி.
உன்னால் எல்லாம் முடியுமா என்று பலர் கேட்ட கேள்விக்கு என்னால் முடிந்தது என விடையாய் நிற்கிறார் பூர்ண சுந்தரி. தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகள் எடுத்த காரியத்தை எந்த நிலையிலும் கைவிடாமல் தொடர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றியின் உச்சத்தை தொடலாம் என உத்வேகம் கொடுக்கிறார் வெற்றி நாயகி பூர்ண சுந்தரி ஐஏஎஸ்.

-பூர்ண சுந்தரி ஐஏஎஸ்

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!