day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

கிளிகளைக் குழந்தைகளாக பாவிக்கும் தம்பதி

கிளிகளைக் குழந்தைகளாக பாவிக்கும் தம்பதி

இயற்கையின் பரப்பு குறைய குறைய, இயற்கையையும் பிற உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பெருகிவருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் மொட்டை மாடியில் பறவைகளுக்கு உணவு வைப்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. குறிப்பாகக் கோடைக்காலங்களில் பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வைக்கும் பழக்கத்தைப் பலருக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்கிறார்கள் பறவை மற்றும் இயற்கை ஆர்வலர்கள். அந்த வகையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு தம்பதி சுமார் 5 ஆயிரம் கிளிகளுக்கு தினமும் உணவு மற்றும் தண்ணீர் அளித்து, சொந்தக் குழந்தைகளாகவே நினைத்து வாழ்ந்துவருகின்றனர்.
­­­சென்னை மாநகரில் பரபரப்பாக இயங்கிவரும் பகுதிகளில் ஒன்று சிந்தாதிரிப்பேட்டை. அங்கிருக்கும் இவர்களது வீட்டை வீடு என்றே சொல்ல இயலாது. ஐந்தாயிரம் பச்சைக் கிளிகளின் சரணாலயம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அருகில் உள்ள மரங்களிலும், சுவர்களிலும் அமர்ந்து ஓய்வெடுக்கும் பச்சைக் கிளிகள் கீச்சிடுகின்றன. உணவும், தண்ணீரும் கிடைத்ததால் அவற்றின் மகிழ்ச்சி ஆரவாரம் நிரம்பி வழிகிறது அந்த வீட்டில். ஊற வைத்த அரிசி, வேர்க்கடலை, கொய்யாப்பழம் என்று கிளிகளுக்காகவே பிரத்யேகமான தானியங்களையும் பழங்களையும் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் பரிமாறும் தம்பதி சுதர்சனமும் அவரது மனைவி வித்யாவும். இவர்களைக் கண்டவுடன் துள்ளிவரும் கிளிக் கூட்டம். பரிமாறப்பட்ட உணவை ஆனந்தமாக உண்டு மகிழ்கின்றன. உணவு பரிமாற தாமதமானால் கிளிகளுக்குக் கோபம் வந்துவிடுமாம். கிளிக்கூட்டத்தைச் சொந்தக் குழந்தைகள்போல் பராமரிக்கும் சுதர்சனம் தம்பதியைக் கிளிகளும் அன்பால், பாசத்தால் பெற்றோரைப் போன்று கருதி அவர்களிடம் பழகுவதுதான் சிறப்பு.
இது சுதர்சனம் தம்பதியினர் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டவை:
“நாங்கள் சுமார் 10 வருடங்களாகக் கிளிகளுக்குச் சாப்பாடு போடுகிறோம். முதலில் என்னுடைய மன அமைதிக்காக மொட்டை மாடிக்கு வந்தேன். அந்த நேரத்தில் பறவைகளுக்கு உணவுப் பற்றாக்குறை இருப்பதை அறிந்தேன். முதலில் கொஞ்சமாக உணவு வைக்க ஆரம்பித்தேன். முதலில் சுமார் 10 கிளிகள்தான் இருந்தன. அது மட்டுமல்லாமல் புறா மற்றும் காகங்களும் வந்து தண்ணீர் குடிக்கும். அதுவே காலப்போக்கில் 5 ஆயிரம், ஆறாயிரமாக வரத்தொடங்கின. அது மட்டுமல்லாமல் மழைக்காலங்களில் சுமார் 10 ஆயிரம் கிளிகள்கூட வந்து இங்கே சாப்பிடுகின்றன. ஒரு நாளைக்குச் சுமார் 70 கிலோ அரிசியும், 4 கிலோ வேர்க்கடலையும் தேவைப்படுகிறது. நான் பாரிமுனையில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளேன். அதில் வரும் வருமானத்தை வைத்தும், வீட்டு வாடகையை வைத்தும் என்னுடைய தேவைகளைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டு கிளி கள் மற்றும் பறவைகளுக்கான உணவு தேவையைப் பூர்த்திசெய்கிறேன். முக்கியமாகப் பறவைகளுக்கு நான் சேவை செய்கிறேன். கிளிகளுக்கு உணவு வழங்குதற்காகவே எங்களுடைய வாழ்க்கை யைத் தியாகம் செய்துவிட்டோம். கோடைக்காலத்தில் சாப்பாடு மட்டுமல்ல, தண்ணீரும் பறவைகளுக்குத் தேவைப்படும். கிளிகளுக்கு உணவு, தண்ணீர் வைக்கும்போது அதை அவை உண்ணும் அழகைப் பார்க்கும்போது எங்களுக்குள் உள்ள கவலைகள் எல்லாம் பறந்துபோய்விடுகிறது”
“இந்தப் பறவைகளுக்கு உணவு வைக்கும்போதும், தண்ணீர் வைக்கும்போதும் அவற்றை அவை சாப்பிடும் அழகைப் பார்த்துப், பார்த்து என் கணவருக்கு இருந்த பிரஷர் குறைந்துவிட்டது. இதில் ஒருவித மன அமைதி கிடைப்பதை நாங்கள் உணர்கிறோம்” என்கிறார் வித்யா.
கடந்த 10 ஆண்டுகளாகத் தினமும் காலை, மாலை இரண்டு வேளையும் கிளிகளுக்கு உணவு அளித்துவருவதைக் கடமையாகச் செய்துவருகிறார்கள் சுதர்சனம் – வித்யா தம்பதி. தங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால்கூடக் கிளிகளுக்கு உணவு வழங்குவதை இவர்கள் நிறுத்துவதே இல்லை. கிளிகளுக்கு உணவு, தண்ணீர் பரிமாறுவதைப் பார்த்தாலே கவலைகள் பறந்துவிடும் என்கின்றனர் இந்தத் தம்பதி. இவர்களுக்கு இருப்பதோ ஒரே மகள்தான். அவரும் திருமணமாகிச் சென்றுவிட்டார். இருந்தாலும், கிளிகள் கூட்டத்துடன் இருப்பதால் நாங்கள் தனிமையை உணர்வதே இல்லை என்கின்றனர். கிளிகள் ஒன்றோடு ஒன்று விளையாடிக்கொண்டும், உணவு, தண்ணீர் குறித்த கவலை இல்லாமலும் உற்சாகத்துடன் குரலை எழுப்பி மகிழும் காட்சி மனதுக்கு இதமான மகிழச்சியை அளிப்பதாக சுதர்சன் – வித்யா தம்பதி கூறுகின்றனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!