சென்னை மற்றும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழைப்பெய்தது. இதன் காரணமாக அக்னி வெயிலுக்கு பிறகு அதிகரித்து இருந்த வெப்பம் ஓரளவு தனிந்தாலும், சில இடங்களில் சாலையெங்கிலும் மழை நீர் தேங்கி பணி செல்பவர்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இடையூறாக அமைந்தது. ஒரு நாள் பெய்த மிதமான மழைக்கே இந்த நிலை என்றால் வர இருக்கும் பருவ மழை காலங்களை எப்படி எதிர்கொள்வது என்று மக்கள் அச்சமடைகின்றனர். இதற்கிடையில், மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்காமல் விரைந்து பாதாளசாக்கடைகளுக்கு செல்லும்படி செய்யவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதனைத்தொடர்ந்து, சென்னை வானிலை ஆய்வு மையம் அளித்துள்ள தகவல் குறிப்பில், தெற்கு ஆந்திரா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கையாக கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.