திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர், “மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில், அதிமுக இயக்கத்தை வழிநடத்த கழக இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி தலைமை பொறுப்பை ஏற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எடப்பாடியார் தான் அதிமுகவை வழிநடத்த வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். ஓ.பி.எஸ்-க்கு பின்னால் மன்னார் குடி கம்பெனி உள்ளது. அதைப்பற்றி முழுமையாக தெரியவில்லை. ஆனால், ஆங்காங்கே சொல்லக் கூடிய கருத்து அதுதான். திமுக சதி திட்டம் தீட்டி அதிமுகவை பிளவுப்படுத்த நினைக்கின்றனர். பலர் இரட்டை இலையை முடக்க முயற்சி செய்தனர். ஆனால், அது நடக்கவில்லை. நாங்கள் இரட்டை இலையை தொடர்ந்து காப்பாற்றிக் கொண்டுள்ளோம். இனியும், இரட்டை இலையை மீட்டெடுப்போம். ஓபிஎஸ் கட்சி தொண்டர்களின் எதிர்ப்பை சம்பாதிக்கிறார். அவர் மகன் ஸ்டாலினை சந்தித்துவிட்டு திமுக நல்லாட்சி நடத்துவதாக கூறுகிறார். நாங்கள் உணர்ச்சிவசப்பட்டு பொங்கி எழுந்துள்ளோம். அதிமுக ஆட்சியில் பல்வேறு நல்ல திட்டங்கள் மக்களுக்காக செய்துள்ளோம். கட்சியின் ஒற்றை தலைமை எடப்பாடி பழனிச்சாமி ஏற்க வேண்டும். அவருக்கு 99 சதவிகிதம் ஆதரவு உள்ளது. எனவே எடப்பாடியார் தான் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.